ADVERTISEMENT

சிறப்புச் செய்தி: ஹெப்டத்லான் தங்கமும், ராகுல் திராவிடும்

Published On:

| By Balaji

உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட ஏழு விளையாட்டுகள் அடங்கிய ஹெப்டத்லான் போட்டியில் ஸ்வப்னா பர்மன் 6026 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தப் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. இந்தப் போட்டியில் கிடைத்த தங்கத்துக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் திராவிடுக்கும் சம்பந்தம் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர் என்றழைக்கப்படும் ராகுல் திராவிட், அவரது ஓய்வுக்குப் பிறகு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ப்ரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா ஆகியோரைச் செதுக்கியவர் ராகுல் திராவிட் என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், கிரிக்கெட்டுக்குச் சற்றும் தொடர்பில்லாத விளையாட்டுகளைச் சேர்ந்த டட்டு போக்னல், அஞ்சும் மவுட்கில், சாய் ப்ரனீத், கிடம்பி ஸ்ரீகாந்த், ஸ்வப்னா பர்மன் உள்ளிட்ட பலரது வளர்ச்சிப் பாதையில் திராவிட்டின் பங்கு இருப்பதை அறிந்தோர் வெகுசிலர் மட்டுமே.

ADVERTISEMENT

ராகுல் திராவிட் தலைமையிலான Go Sports Foundation அறக்கட்டளை நடத்திய இந்த ஆண்டுக்கான தடகள வழிகாட்டல் திட்டத்துக்காக 20 தடகள வீரர்கள் தேர்வாகினர். 2018ஆம் ஆண்டு ஆசிய போட்டிகள் மற்றும் 2020ஆம் ஆண்டு காமன் வெல்த் போட்டிகளுக்கான வீரர்களின் தேர்வு இந்த அறக்கட்டளை நடத்தும் பயிற்சி வகுப்பில் முடிவில்தான் தேர்வு செய்யப்படும். அப்படித் தேர்வாகிய 20 வீரர், வீராங்கனைகளில் ஒருவர்தான் ஸ்வப்னா.

சாதாரண மனிதரைப் போல் அல்லாமல் இரு கால்களிலும் தலா ஆறு விரல்களைக் கொண்டவர் ஸ்வப்னா. இவரது கால்களுக்கு ஏற்ற காலணி கிடைக்காமல் சாதாரண காலணிகளுடன் போட்டிகளில் பங்கேற்றார். அதுமட்டுமின்றி பல் தொற்றுநோயின் காரணமாக கன்னத்தில் சிகப்பு நிற டேப்புடன் களமிறங்கினார். மிகுந்த உடல் வலிகளுக்கு மத்தியில் ஸ்வப்னா இந்தச் சாதனை தங்கத்தை வென்றிருக்கிறார்.

ADVERTISEMENT

உயரம் தாண்டுதல் பிரிவில் 1003 புள்ளிகளையும், ஈட்டி எறிதல் பிரிவில் 872 புள்ளிகளையும், குண்டு எறிதல் பிரிவில் 707 புள்ளிகளையும், நீளம் தாண்டுதல் பிரிவில் 865 புள்ளிகளையும் பெற்றிருந்தார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தின்போது மட்டும் திணறிய ஸ்வப்னா அதில் முறையே 5ஆவது மற்றும் 7ஆவது இடத்தையே பிடித்திருந்தார். கடைசி போட்டியான 800 மீட்டர் ஓட்டத்தில் இவரால் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. 7 விளையாட்டுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 6026 புள்ளிகள் பெற்றதால் இவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

இதுகுறித்து குவின்ட் ஊடகத்துக்குப் பேட்டியளித்த ஸ்வப்னா, “தேசிய விளையாட்டு தினத்தன்று தங்கப் பதக்கத்தை வென்றுத்தால் இதைச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுகிறேன். போட்டியின்போது கால்களில் ஐந்து விரல்கள் கொண்ட சாதாரண மனிதர்கள் பயன்படுத்தும் காலணிகளைத்தான் நான் பயன்படுத்தினேன். இது பயிற்சியின்போது எனக்கு வலியை உண்டாக்கியது. ஸ்பைக்ஸ் மற்றும் சாதாரண காலணிகள் அணிவது எனக்குச் சவுகரியமாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

காலணி தயாரிப்பு நிறுவனங்கள் உங்களுக்கென பிரத்யேகமான காலணிகளை உருவாக்கினால் அதனை நீங்கள் விரும்புவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “நிச்சயமாக, அது என வாழ்வை இன்னும் எளிதாக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்னாவுக்கு அம்மாநில முதல்வர் அரசு வேலையும், ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு ஆசிய போட்டித் தொடரின்போது டீன் ஏஜ் பருவத்தில் இருந்த ஸ்வப்னா, இதே பிரிவில் 5178 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பின் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

– முத்துப்பாண்டி யோகானந்த்

தகவல்கள்:

குவின்ட், டைம்ஸ் நவ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share