நேர்கண்டவர்: வைஷ்ணவி ராமநாதன்
**கும்பகோணத்தில் வசிப்பது உங்களுக்குச் சாதகமாக இருக்கிறதா, இல்லையா?**
சாதகமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை, நான் சென்னையில் வசித்திருந்தால் மற்றவர்களைப்போல் நானும் குடிக்கு அடிமையாகியிருக்கலாம். பிறப்பிலேயே யாரும் கெட்ட பழக்கங்களுடன் பிறப்பதில்லை. சந்தர்ப்பங்கள்தான் மனிதனை மாற்றுகின்றன. மற்றவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் ஒரு நல்ல குடிகாரனாக இருந்திருப்பேன். அதுவா என் பாரம்பரியம்? நான் ஒரு பொம்மை செய்பவன் அல்ல. சில கலைஞர்களைப்போல் மாலையில் குடித்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசும் நபர் இல்லை நான். நான் பெயர் சொல்ல விரும்பவில்லை ஆனால் சில ஓவியக்கூடங்களை நடத்துபவர்கள் கலைஞர்களுக்கு குடியை வாங்கி கொடுத்துக்கொடுத்து அவர்களின் கலைப் படைப்புகளை மிகக் குறைந்தவிலையில் பெற்றுக்கொள்வர். அவ்வாறு செய்யும்போது கலையின் மதிப்பு என்னவாகும்? அவ்வாறு என்னிடம் செய்ய முடியாது.
**விருது வென்ற உங்களுடைய இராவணன் சிற்பத்தைப் பற்றி கூறுங்கள்**
இராவணன் இல்லாமல் இராமாயணம் கிடையாது. இராமாயணத்தில் யார் முக்கியமான பாத்திரம் என்றால் எல்லாரும்தான். எந்த ஒரு பெயரையும் குறிப்பாகச் சொல்ல முடியாது. இராமாயணம் என்பது சமுதாய நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நூல். அந்தக் காலத்தில் அதை இதிகாசமாகவும் நோக்கியிருக்கலாம். வால்மீகி, கம்பன், துளசிதாசர் என பலர் இராமாயணங்களை இயற்றியுள்ளனர். எல்லா இராமாயணங்களிலும் இராமன் இல்லாமல் இராமாயணம் கிடையாது; இராவணன் இல்லாமல் இராமாயணம் கிடையாது. இராமாயணம் என்பது வேதங்களுடன் சேர்ந்தது. நான் பலமுறை இத்தகைய தத்துவம் சம்பந்தப்பட்ட சிற்பங்களைச் செய்வேன். இப்போது இராவணன் எனும்போது இராமனுக்கே இல்லாத பத்து தலைகள் அவனுக்கு உண்டு. இந்த பத்து தலைக்கு பத்துவித ஞானம் உண்டு. இத்தனை அறிவுள்ளவன் இராவணன். அவன், ஒரு சாதாரண மனிதன் இல்லை. அவன் ஒரு ஆன்மீகவாதி. சிவபக்தன். அப்படிப்பட்ட ஒருவன், எப்படி சீதையை தன் வசப்படுத்த நினைத்தானென்றால் அது, அவனுடைய தங்கை சூர்ப்பனகை செய்த வேலை. அவள் இராமனின் அழகில் மயங்கிவிடுகிறாள். அவளை அவனும், அவனுடைய தம்பி லக்ஷ்மணனும் மறுத்தபின்னர் அவள், தன் பெயரை காப்பாற்றிக்கொள்ள சீதையின் அழகை வர்ணிக்கிறாள். அதை கேட்டுத்தான் இராவணன் சீதையின்மேல் விருப்பம் கொள்கிறான்.
இராவணனின் அறிவு அகண்டது. அதைத்தான் நான் என் சிற்பத்தில் கொண்டு வந்துள்ளேன். ஒரு தீபம் சுடர்விட்டு எரியும்போது தீயின் வடிவம் அகண்டதாகத்தான் இருக்கும். அதைத்தான் நான் அகலமான தலை வடிவத்தின்மூலம் வெளிப்படுத்துகிறேன். இதைத்தான் அல்போன்ஸாவும் தன் படைப்புகளில் கொண்டு வருகிறார். அவருடையது ஓவியம், என்னுடையது சிற்பம். மேலும் அவருடைய ஓவியங்களில் Leonardo da Vinci-யின் சில கருத்துகளும் இருக்கும். ஆனால் அவருடையதாக இருக்கட்டும், என்னுடையதாக இருக்கட்டும் அல்லது எல்லவற்றுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கும். இதுதான் Indianness (இந்தியத்தன்மை) எனலாம். ஒவ்வொரு நாட்டுக் கலைக்கும் அத்தகைய அடிப்படை உண்டு.
**நீங்கள் பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். மாணவர்களுடன் உங்கள் அனுபவங்கள்…**
மாணவர்கள் என்றும் மாணவர்களாகத்தான் இருப்பார்கள். நவீனக் கலை என்பதற்கு எந்த பாடத் திட்டமும் கிடையாது. மாணவனின் மனோபாவத்தைப் பொருத்தது. அதற்கு நாம் துணையாக இருக்க வேண்டும். மாணவனின் மனோபாவத்தைப் பொருத்து, எப்படிக் கொண்டுவரலாம் என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி வழிகாட்டும்போதுதான் மாணவன் முன்னுக்கு வருவான். இல்லையென்றால் அவன் விலகிச் செல்வான். ஓவியர் வீர சந்தானம், மனோகர் தேவதாஸ் போன்றவர்கள் என் மாணவர்கள்.
**நீங்கள் பலமுறை Super Anatomy என்கிறீர்கள். அது என்ன…**
இதைப் பாருங்கள். இதுவொரு Realistic வரைபடம். இதை நவீனப் பார்வையில் நோக்கும்போது Anatomy மாறிவிடும். ஒரு உருவத்தில் எது தேவையோ அதை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றை விட்டுவிட வேண்டும். Super Anatomy என்பது உருமாற்றம் அடைவதாகும். நீங்கள் கோயில்களுக்குச் சென்றால் அங்குள்ள சிற்பங்களில் ஒரு தெய்வீகத்தன்மை இருக்கும். அது Super Anatomy. நான், பாரம்பரியத்துக்கு என் சிற்பங்களின்மூலம் புது உருவம் அளிக்கிறேன். நான் செய்யும் தெய்வங்களுக்கு ஏன், அத்தகைய உருவம் இருக்கிறது என்றால் என்னால் பதிலளிக்க முடியும்.
பொதுவாக, நாம் வழிபடும் தெய்வ உருவங்களில் இல்லாத சில விஷயங்கள் என் சிற்பங்களில் இருக்கும். அதேபோல், நான் ஏசு கிருஸ்துவுக்குக்கூட வேறு ஒரு உருவம் கொடுத்திருக்கிறேன். பொதுவாக, ஏசுவை மிகவும் சோகமாக சிலுவையில் அறைந்தபடி படைப்பார்கள். ஆனால் என்னுடைய ஏசு, உலகத்தின் அரசரைப்போல் இருப்பார். இந்தச் சிற்பங்களை சென்னையில் உள்ள Sara Abraham எனும் Art Collector வாங்கினார். நான் செய்யும் நடராஜர் உருவமும் வித்தியாசமாகத்தான் இருக்கும். என் நடராஜருக்கு தாந்திரீக அடிப்படை உள்ளது. ஏன், நான் அவ்வாறு செய்கிறேன், அதன் தத்துவம் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும். ஆனால் இவற்றைச் செய்யும்விதமே சற்று வித்தியாசமானது. அதனால், என்னால் ஒரு சிற்பத்தைப்போல நிறைய சிற்பங்களைச் செய்ய முடியாது.
**உங்கள் சிற்பங்களில் நீங்கள் இறைத்தன்மையை கொண்டுவரப் பார்க்கிறீர்களா?**
அது பார்வையாளர்களைப் பொருத்தது. என்னைப் பொருத்தளவில், என் சிற்பங்கள் பார்வையாளர்களுக்கு இன்பத்தை தர வேண்டும், இனிமையாக இருக்க வேண்டும், சுகத்தையும் உள்ளுணர்வுகளையும் தர வேண்டும்.
**பாரம்பரிய சிற்பத்துக்கும் நவீன சிற்பத்துக்கும் உங்களுக்கு ஏதாவது முரண்பாடு தெரிகிறதா?**
இல்லை. என் மனதில் சிறிதளவும் குழப்பமில்லை. ஏனென்றால், நான் சிறு வயதிலிருந்தே பாரம்பரிய சிற்பங்களைக் கண்டு அனுபவித்துள்ளேன். அதைத்தான், நான் நவீனமுறையில் கொண்டுவருகிறேன். நான் திடீரென்று இவ்வாறு செய்யத் தொடங்கினால் முரண்பாடு இருந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்தாலும் அதில் கடுமையான உழைப்பிருந்தால் வெற்றியைக் காணலாம்.
**கலைக்கு உழைப்பு எவ்வளவு முக்கியம்…**
மிகவும் முக்கியம். கடினமான உழைப்பு இல்லாவிட்டால் இந்தத் தொழிலே செய்ய முடியாது. கடின உழைப்புக்கு ஈடேதும் கிடையாது. 24 மணிநேரமும் இதே சிந்தனையில் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வேறுவிதமான கருத்துகள் இருக்கலாம். ஆனால் எனக்கென்று ஒரு பின்னணி இருக்கிறது. இந்தியாவுக்கென்று எப்படி ஒரு பாரம்பரியம் இருக்கிறதோ அதேபோல், எனக்கும் உண்டு.
**பாரம்பரியம் என்றால், முன்னோர்கள் செய்ததை அப்படியே செய்வது என்ற ஒரு கருத்து உள்ளது. உங்கள் அபிப்பிராயம் என்ன?**
மரபு (Tradition) என்பது முன்பிருந்தபடியே செய்வதுதான். சில சிற்ப பரிமாணங்களை விட்டு வெளியேற முடியாது. ஒரு பின்னமான சிலையை கோயிலில் வைக்கமுடியாது. ஆனால் எங்களுக்கு அத்தகைய இடையூறுகள் கிடையாது. எங்களுக்கு சுதந்திரம் உள்ளது. எது செய்தாலும் ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும். பார்த்தவுடன் இது வித்யாஷங்கருடையது என்று சொல்ல வேண்டும். என்னை யாரவது நகல் (Copy) செய்தாலும் அதைப் பார்த்தவுடன், அது என்னுடையது என்றுதான் சொல்வார்கள். அதுதான் பாதிப்பு என்பது. அத்தகைய பாதிப்புகள் எல்லா கலைஞர்களுக்கும் உண்டு. அதிலிருந்து தனித்தன்மைக்கு வரும்போதுதான் அவன் முழு மனிதனாவான்.
**நவீனக்கலையில் விதிகளை மீற வேண்டும் என்று சிலமுறை அர்த்தமில்லாமல் மீறும் தன்மை உள்ளது. அதைப்பற்றி உங்கள் கருத்து…**
அவ்வாறு செய்பவனை ஊக்குவிப்பது இந்தச் சமுதாயம்தானே. என்னுடைய மாணவனே அவ்வாறு செய்தால் நானும் அவனை ஊக்குவிப்பேன். இல்லாவிட்டால் அவன் வீணாகிப் போய்விடுவான். ஆனால் ஊக்குவித்தால் நாளடைவில் அவன் ஒரு நல்ல கலைஞனாக வருவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி வராவிட்டாலும்கூட அவனுக்கு அழகியல் உணர்வு (Aesthetic Sense) வளரும். முரட்டுத்தன்மை குறைந்துவிடும். கலையின் பெரிய விளைவே அதுதான். எந்தவொரு கலையில் நம் மனம் லயித்துப்போனாலும் அது, நமக்கு அழகை ரசிக்கும்தன்மையையும், எதையும் தாங்கும் இதயத்தையும் தரும். அதுதான் நுண்கலையின் பெருமை.
[பகுதி 1](https://minnambalam.com/k/1482431433)
[பகுதி 2](https://minnambalam.com/k/1483036209)
**வித்யாஷங்கர் ஸ்தபதி**
1938இல் ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். 1962இல் சென்னைக் கலைக் கல்லூரியிலிருந்து நுண்கலை பட்டம் (Diploma) முடித்தார். பின்னர், கும்பகோணத்தில் உள்ள கலைக் கல்லூரியில் ஆசிரியராகவும் முதல்வராகவும் இருந்து ஓய்வுபெற்றார். இவர், National Award of Lalit Kala Akademi, New Delhi விருது (1993), Bombay Art Society Award (1976) என, பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் Regional Centre Art Exhibition of the Lalit Kala Akademi, Madras (1989), 3rd Havana Biennale Cuba (1989), The Madras Metaphor Exhibition organized by Ebrahim Alkazi of Art Heritage Gallery, New Delhi (1991) போன்ற முக்கியமான பல ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.
**வைஷ்ணவி ராமநாதன்**
Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் நுண்கலை படித்தார். இப்போது, சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதிநேர Art History ஆசிரியராக இருக்கிறார்.�,”