நா. ரகுநாத்
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) அங்கமான தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) ஜூலை 2017 – ஜூன் 2018 காலத்தில் நுகர்வோர் செலவீட்டு ஆய்வை (consumer expenditure survey) நடத்தியது. பொதுவாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வு, கடைசியாக 2011-12 இல் நடத்தப்பட்டது.
இந்தியாவில் ஒரு தனிநபர், நுகர்வுக்காக ஒரு மாதத்தில் செய்யும் செலவு (monthly per capita expenditure) 2011-12 முதல் 2017-18 காலத்தில் 3.7 விழுக்காடு சரிந்துள்ளது; நகர்ப்புறங்களில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே வளர்ந்த இந்த நுகர்வுச் செலவு, ஊரகப் பகுதிகளில் 8.8 விழுக்காடு சரிந்துள்ளது. அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களுக்காக செய்யும் செலவு, விலைவாசி உயர்வைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் (adjusting for inflation), 2011-12 முதல் 2017-18 காலத்தில் ரூ.643 லிருந்து ரூ.580 ஆகக் குறைந்துள்ளது. இது, ஊரக மக்களின் வாங்கும் சக்தியில் ஏற்பட்டுள்ள சரிவையே குறிக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளில் நுகர்வுக்கான தனிநபர் செலவு இதுபோல் சரிந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புறங்களில் உணவுக்காக தனிநபர்கள் செய்யும் செலவு மிகவும் சொற்பமாக ரூ.943 லிருந்து ரூ. 946 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. ஊரகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதையும், ஒட்டுமொத்தப் பொருளாதாரம் கவலைக்கிடமாக இருப்பதையுமே இந்தத் தகவல்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட மறுக்கும் மோடி அரசு
மே மாதம் தேசியப் புள்ளியியல் ஆணையம் (National Statistical Commission) இந்த அறிக்கையை வெளியிடலாம் என்று கையொப்பம் இட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கிய பின்பும், ஆய்வின் முடிவுகள் அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததால், ஐந்து மாதங்களாக இந்த அறிக்கையை வெளியிடாமலேயே இருந்தது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத இந்த அறிக்கை, எப்படியோ ஊடகங்களுக்கு கசிந்ததால், தனிநபர் நுகர்வு குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி சென்ற மாதம் அறிக்கைகள் பத்திரிக்கைகளில் வரத் தொடங்கின.
‘இந்த ஆய்வின் விளைவாக வெளிவந்துள்ள மக்கள் நுகர்வு பற்றிய விவரங்களின் தரம் அரசுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை (data quality issues). இந்த விவரங்களைப் பரிசீலித்த நிபுணர் குழு, அடுத்து வரும் காலங்களில் நடத்தப்படும் ஆய்வுகளின் செய்முறையை மேம்படுத்த முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, சீர்செய்யப்பட்ட செய்முறையைப் பயன்படுத்தி 2020-21 அல்லது 2021-22 இல் அடுத்த நுகர்வோர் செலவீட்டு ஆய்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்படும்’ என்று அரசு அறிவித்தது. அந்த நிபுணர் குழு செய்முறையை மேம்படுத்தலாம் என்றுதான் சொல்லியது. இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று சொல்லவே இல்லை!

NSSOவின் அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பது ஒன்றும் மோடி அரசுக்கு புதிதல்ல. நாட்டில் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-18இல் 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்த NSSO அறிக்கை, “Periodic Labour Force Survey 2017-18”, அரசிடம் சென்றாண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டது. மோடி அரசு இந்த அறிக்கையை வெளியிடாமலேயே வைத்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிசினஸ் ஸ்டாண்டர்ட் எனும் வணிகப்பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் இந்த அறிக்கையிலுள்ள முக்கியமான தரவுகளைப் பெற்று வெளியிட்டதும் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆக, பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றிய அதிகாரப்பூர்வமான ஆய்வுகளின் முடிவுகளையும் இந்த அரசு வெளியிட மறுப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
“NSSO வின் ஆய்வுகள் மற்றும் ஆய்வுமுறைகள் உலகின் மற்ற நாடுகளுக்கு இதுவரையிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இத்தகைய புள்ளியியல் அமைப்பை எண்ணி இந்தியா பெருமை கொள்ள வேண்டும். நுகர்வு பற்றிய ஆய்வுகள் நாட்டில் வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுபவை. ஆகவே, 2017-18 இல் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் கொண்ட அறிக்கையையும், அது தொடர்பான அனைத்து புள்ளி விவரங்களையும் இந்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்று பல நாடுகளைச் சேர்ந்த 202 அறிஞர்கள் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
நுகர்வுச் சரிவு – விளைவுகள் என்ன?
இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் மக்களின் நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. உணவுக்காக செய்யும் செலவே குறைந்துள்ளது என்றால், நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் ஊட்டசத்து பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மேலும், ஒட்டுமொத்த நுகர்வுச் செலவும் குறைந்துள்ளது என்பதால், நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கக் கூடும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் அறிஞர் ஹிமான்சு கணித்து எழுதி இருந்தார்.

கசிந்த அறிக்கையில் அடங்கியுள்ள விவரங்களை அலசி, லைவ் மின்ட் எனும் வணிகப் பத்திரிகையில் இந்த வாரம் கட்டுரை ஒன்று வெளிவந்தது. ‘ஊரக இந்தியாவில் வறுமை அதிகரித்துள்ளது’ என்பதுதான் அந்த கட்டுரையின் தலைப்பு. 2011-12 – 2017-18 காலத்தில் ஊரகப் பகுதிகளில் வறுமை கிட்டத்தட்ட 4 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்து , 30 விழுக்காடாக உயர்ந்துள்ளது; ஆனால், நகர்ப்புறங்களில் வறுமை 5 விழுக்காட்டுப் புள்ளிகள் சரிந்து, 9 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்கிறது அந்த கட்டுரை.
இந்த காலத்தில் பிகார் மாநிலத்தில்தான் வறுமையில் இருப்பவர்களின் என்ணிக்கை 17 விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்ந்து 50 விழுக்காடு ஆகியிருந்தது. ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் வறுமையில் இருப்பவர்களின் என்ணிக்கை 8 விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்ந்துள்ளதன் விளைவாக அம்மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் பங்கு 40 விழுக்காட்டுக்கும் அதிகமாகியுள்ளது.

பல மாநிலங்களில் ஊரகப் பகுதிகளில் வறுமை அதிகரித்து இருப்பினும், நகர்ப்புறங்களில் வறுமை குறைந்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மிகக் குறைவாக செலவு செய்பவர்கள் தொடங்கி மிக அதிகமாக செலவு செய்பவர்களைப் பத்து வகுப்புகளாகப் பிரித்துப் பார்த்தால், 2011-12 – 2017-18 காலத்தில் ஊரக இந்தியாவில் நுகர்வுச் செலவு ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. நகர்ப்புறங்களின் நிலவரம் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. பத்து வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிலும் நுகர்வுச் செலவு அதிகரித்துள்ளது.
ஊரகக் கூலி பற்றி ஒன்றிய அரசின் தொழிலாளர் பணியகம் (Labour Bureau) வழங்கும் தரவுகள் ஊரக இந்தியாவில் நுகர்வுச் சரிவு எனும் போக்கோடு ஒத்துப்போகிறது. 2004-05 – 2011-12 காலத்தில் வேகமாக வளர்ந்த ஊரக நிஜக்கூலியின் மட்டம் , 2011-12க்கு பிறகு சில ஆண்டுகள் தேக்கத்தையும், சில ஆண்டுகள் சரிவையும் சந்தித்தது. அரசின் புள்ளி விவரங்களின்படி, 2017 ஜூலை மாதம் தொடங்கி, விவசாயக் கூலித்தொழில் செய்பவர்கள் பெறும் நிஜக்கூலி, ஆண்டுக்கு 0.5 விழுக்காடு குறைந்துள்ளது. விவசாயமற்ற கிராமப்புற கூலித்தொழிலாளர்கள் பெறும் நிஜக்கூலி தேக்கம் கண்டுள்ளது.
மேலும், வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை எடுத்துப்பார்த்தால், விவசாயமும் விவசாயமற்ற துறைகளும் தங்கள் பொருட்களை எந்த விகிதத்தில் வாங்கி விற்கின்றன என்பதைக் குறிக்கும் “பொருள் மாற்று விகிதம்” (Terms of Trade), கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலையைக் கோரி சென்ற ஆண்டு நடத்திய போராட்டங்களை நாம் மறந்திருக்க முடியாது. நவம்பர் 2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஊரக இந்தியா மீது ஏற்படுத்திய தாக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல், நுகர்வில் ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சியை நாம் புரிந்துகொள்ள முடியாது.

இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை
ஊரக இந்தியாவில் எத்தனைக் குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றிருக்கும், குழந்தைகளின் ஊட்டச்சத்து எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்று அறிஞர்கள் பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம், அரசு சொல்வதுபோல் இந்த ஆய்வின் முடிவுகள் நம்பமுடியாதவை, நம்பகத்தன்மை இல்லாதவை எனும் வாதத்தை முன்வைத்து சிலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
‘2011-12 – 2017-18 காலத்தில் கார்களின் விற்பனை 31.5 விழுக்காடு அதிகரித்துள்ளது; இருசக்கர வாகனங்களின் விற்பனை 45.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 95.6 விழுக்காடு உயர்ந்துள்ளது; கைபேசி பயன்படுத்துவோர் என்ணிக்கை 44.4 விழுக்காடு உயர்ந்துள்ளது. அப்படி இருக்கையில் நாட்டில் தனிநபர்கள் நுகர்வுக்காக செய்யும் செலவு குறைந்திருக்க வாய்ப்பேயில்லை’ என்று எழுதுகிறார்கள். நாட்டில் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் பெரிதும் பாதிக்கப்படும் அதே வேளையில், உடைமைகள் உள்ள, செல்வம் படைத்த, ஒரு சிறுபகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மென்மேலும் வளர்ந்துகொண்டே போவது சாத்தியமே. இந்த போக்கு இந்தியாவில் வலுப்பெற்றுக் கொண்டே போவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஒவ்வொரு நாட்டிலும் யார்யாரிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பது பற்றி Credit Suisse எனும் முதலீட்டு வங்கி வெளியிடும் புள்ளி விவரங்களைக் கொண்டு, Oxfam எனும் தன்னார்வ நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொள்ளும். அந்த ஆய்வின்படி, 2018இல் பொருளாதாரப் படிநிலையில் மேல்தட்டில் இருக்கும் 10 விழுக்காட்டினர், இந்திய நாட்டின் மொத்த தனிநபர் சொத்து மதிப்பில் 77 விழுக்காட்டிற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர். அடித்தட்டில் உள்ள 60 விழுக்காடு குடும்பங்களிடம் வெறும் 4.7 விழுக்காடு செல்வம் மட்டுமே இருந்தது. 2014இல் தேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 23 விழுக்காடு, மேல்தட்டில் இருக்கும் 1 விழுக்காட்டினரிடம் சென்று சேர்ந்தது என்றும், நாட்டின் வளங்கள் சிலரிடமே சென்று குவியும் இந்த போக்கு 1980-2015 காலத்தில்தான் தீவிரம்பெற்றது என்றும் தாமஸ் பிக்கெட்டி மற்றும் லூகஸ் சான்ஸல் என்கிற பொருளாதார அறிஞர்கள் 2017இல் வெளிவந்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளனர்.
பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும் சரி, வேகமிழந்த நிலையில் இருந்தாலும் சரி, செழிப்பாக வாழ்பவர்களைப் பற்றியது அல்ல நமது கவலை. கடுமையான உழைப்பை செலுத்தி வாழ்க்கையை நடத்தும் பெரும்பான்மை மக்களின் அவலநிலையை எவ்வாறு சரிசெய்வது என்பதே நம்முடைய கவலையாக இருக்கிறது. மேலும், நாட்டில் ஏற்படும் லட்சக்கணக்கான வேலையிழப்புகள் மற்றும் அதிகரிக்கும் வேலையின்மை பற்றிய செய்திகள் கேட்கும்போதெல்லாம் வேதனையாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி கடந்த ஆறு காலாண்டுகளாக இறங்குமுகத்தில் இருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதன் விளைவாகவே இந்தத் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று பொருளியல் அறிஞர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வாங்கும் சக்தியானது கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே சரியத் தொடங்கியது என்பதையே இந்த 2017-18 நுகர்வோர் செலவீட்டு ஆய்வின் முடிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஊரக இந்தியாவில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடியில் இருக்கின்றனர் என்பதே இந்த ஆய்வு மட்டுமின்றி, அனைத்து பொருளாதாரக் குறியீடுகளும், கள ஆய்வுகளும் நமக்கு சொல்லும் சேதி.
உணவுப் பஞ்சம், அந்நியச்செலாவணி தட்டுப்பாடு, போர் சூழல், நிச்சயமற்ற அரசியல் சூழல், உலக சந்தையில் திடீரென்று உயர்த்தப்பட்ட கச்சா எண்ணெய் விலை போன்ற காரணிகளால் ஏற்பட்டதல்ல தற்போது இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் நெருக்கடி. தவறான கொள்கை முடிவுகளின் விளைவாக நாம் இந்நிலையில் இருக்கிறோம் என்கிறார் ஊரகப் பொருளாதாரத்தைப் பற்றி தொடர்ந்து எழுதிவரும் ஹரிஷ் தாமோதரன்.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பதால் மக்கள் சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள் என்று ஆகிவிடுமா? இல்லை, பொருளாதாரம்தான் இயல்புநிலைக்கு திரும்பி விடுமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்பதுபோல் இருக்கிறது அரசின் இந்த முடிவு. ஆட்சியில் இருப்பவர்கள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களுடைய நேரத்தையும் ஆற்றலையும் செலவிடவே மாட்டார்களா?
எழுத உதவிய கட்டுரைகளின் இணையச்சுட்டிகள்:
கட்டுரையாளர் குறிப்பு : நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com
