பேராசிரியர் நா.மணி
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை தேசிய அளவில் ‘குழந்தைகள் அறிவியல் மாநாடு’ என்ற ஒரு திட்டத்தை 1993 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழ்நாடு அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் பங்கு பெற்ற 14 வயது முதல் 17 வரையிலான குழந்தைகள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு பற்றிய ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
மிகச் சரியான மாணவர்கள்
மொத்தம் 20 கேள்விகள் அடங்கிய அந்தக் கேள்வித்தாள் பட்டியலில் ஒரு வினா, மனிதனின் தோற்றம் பற்றியும் மூன்று வினாக்கள், அரசியலில் சாதி மற்றும் மதம் பற்றியும் கேட்கப்பட்டது. ‘டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையா?’ என்று கேள்விக்கு 63 விழுக்காடு, ‘ஆம். உண்மை என்று நம்புகிறேன்’ என்றும், 20 விழுக்காடு மாணவர்கள் ‘அது உண்மையா பொய்யா என்று நம்ப முடியவில்லையே’ என்றும், 17 விழுக்காடு மாணவர்கள் ‘நாங்கள் அதை நம்பவில்லை’ என்றும் பதில் அளித்திருந்தனர். ‘பிறப்பின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டுள்ளது சரியா?’ என்ற கேள்விக்கு ‘தவறு’ என்று 80 விழுக்காடு மாணவர்கள் கூறியுள்ளனர். ‘சாதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் இயங்குவது சரியா?’ என்ற கேள்விக்கு ‘தவறு’ என்று 96 விழுக்காடு மாணவர்கள் விடை அளித்துள்ளனர். அதே 96 விழுக்காடு மாணவர்கள் மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்வதும் ‘தவறு’ என்றும் கூறியுள்ளார்கள்.

பெரியவர்களையே நல்வழிப்படுத்தும் வாக்குமூலங்கள் இவை. ஆனால், இதே மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களுக்குப் படிக்கச் செல்லும்போது சக மாணவர்களிடம் காட்டும் ஏற்றத்தாழ்வுகள், இவர்களே படித்து முடித்து ஆசிரியர்களாக அது போன்ற கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும்போது வெளிப்படுத்தும் சாதி மதப் பாகுபாடுகள் எத்தனை பேரை இதுவரை பலி கொண்டுள்ளது.
மாணவர்களை மாற்றுவது யார்? எப்போது?
96 விழுக்காடு சாதி மத அரசியலுக்கு எதிராக இருப்பவர்களே, எப்படி பின்னர் தங்கள் சாதி மதங்களைத் தூக்கிப் பிடிக்கின்றனர்? குறிப்பாக, பட்டியல் இன மாணவர்களை மதச் சிறுபான்மையினரை சொல்லொணா துன்பத்துக்குள்ளாக்குகின்றனர்? இது சிறியவர்களின் குற்றம் இல்லை என்பதை இந்த ஆய்வு தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது அல்லது வயது வந்தவர்கள் ஆகும்போது சாதி மத வெறி என்னும் விஷத்தன்மை ஊட்டப்பட்டுவிடுகிறது. பெரியவர்களே பிஞ்சுகள் மனத்தில் நஞ்சை கலப்பதால்தான், விஷமுறிவுக்கு அவர்கள் வழிவகை செய்வதில்லை.
சிலர் மறைந்து நின்று தூண்டிவிடுகிறார்கள். சில மறைந்து நின்றுகொண்டு சிரிக்கிறார்கள். சிலர் செய்வதையெல்லாம் செய்துவிட்டு கள்ள மௌனம் காக்கிறார்கள். பாதிப்புக்குள்ளானோர் கதறி அழும்போது கள்ளச் சிரிப்பு சிரிக்கிறார்கள். இப்படி இருந்த சூழல் மாறி, சாதி மதக் கட்சிகள் நேரடியாகக் களத்துக்கு வந்துவிட்டது. இதைத்தான் சின்னஞ் சிறிய மாணவர்கள் தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். ஏற்க மறுத்துள்ளனர்.

பாத்திமா லத்தீப் விஷயத்தில் நடந்துள்ள சமூக சிக்கல் இதுவே. ரோகித் வெமுலா உள்ளிட்ட இதுபோன்றோர் அனைவர் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. அரசும் ஆட்சியாளர்களும் நினைத்தால் பாத்திமா மரணம்கூட இறுதி மரணமாக இருக்கலாம். இல்லையேல் இது தொடர்கதையாக இருக்கும். அடுத்து யார் என்று இப்போதே மனம் பதைபதைக்கிறது.
போட்டி என்னும் மன அழுத்தம்
முதலில் பள்ளிப்பாடம் என்றாலே நினைவுக்கு வருவது தேர்வும் மதிப்பெண்ணும்தான். இந்த மதிப்பெண் தரும் மன அழுத்தம் மனிதத்தன்மையற்ற, போட்டி மனப்பான்மை தாங்க இயலாமல் 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை 26,500 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்று அரசின் புள்ளிவிவரங்களே சான்று பகர்கின்றன.
இந்தத் தேர்வுகள் தரும் அழுத்தம் பள்ளிப் பாடங்கள் வழியாக மாணவர்கள் கற்க வேண்டிய அனைத்தையும் மண்ணாய் போகச் செய்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவன் தன்னைவிட இரண்டு மதிப்பெண் கூட எடுத்துவிட்டால், ‘அவனை விட நீ…’ என்ற சாதி வன்மம் பற்ற வைக்கப்படுகிறது. இரண்டு மதிப்பெண் குறைவாக எடுத்தவன் தன்னோடு படிக்கவந்து சேர்ந்துவிட்டால், எதுவுமே தெரியாதவன் கோட்டாவில் வந்தவன் என்று கேவலமாகப் பேசத் தூண்டுகிறது. கோட்டா என்பதை எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என எந்த இட ஒதுக்கீட்டையும் இட ஒதுக்கீடாகப் பார்க்காதது போல் கண்கள் கட்டப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மட்டுமே இட ஒதுக்கீடு என்றும் அது மட்டும் ‘கோட்டா’ என்று பொது சமூகத்துக்குக் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.
பொறியியல் கல்லூரிகளிடம் கற்க வேண்டிய பாடம்
பொறியியல் கல்லூரிகளில் இன்றைய தேதியில் சேர்க்கை மிகவும் குறைந்து பல கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதும் பல கல்லூரிகளில் பெருவாரியான இடங்கள் காலியாக இருப்பதும் அனைவருக்கும் தெரியும். இயங்கிக்கொண்டிருக்கும் கல்லூரிகளில் பல, பட்டியல் இன மாணவர்கள் தயவில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு வழியாக வரும் சிறப்பு உதவித் தொகை மற்றும் மாநில அரசின் குடும்பத்தில் முதல் பட்டதாரி உதவித் தொகை ஆகியவற்றில்தான் கல்லூரிகள் காலம் தள்ளுகின்றன. இங்கெல்லாம் சாதி அடிப்படையில் துன்புறுத்தல் இல்லை. தற்கொலைகள் இல்லை. அதேபோல் சுயநிதிக் கலை அறிவியல் கல்லூரிகளில் பிரபலமான கல்லூரிகள் தவிர பிற கல்லூரிகள் பட்டியல் இன மாணவர்கள் தயவில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இங்கெல்லாம் 40 விழுக்காடு வரை பட்டியல் இன மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு சாதிய அடிப்படையில் கொடுமைகள் இல்லை. இங்கெல்லாம் சாதி அடிப்படையில் ஒதுக்குதல், தனிமைப்படுத்துதல், மனம் புண்பட வைத்தல், சுருக்கமாகக் கூறினால் தற்கொலைக்குத் தூண்டும் அளவு சாதி மத அடிப்படையில் வேறுபாடுகள் இல்லை.

உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே ஏன்?
உயர்ந்தபட்ச சாதிப் பாகுபாடுகள், கொடுமைகள் எங்கு நடக்கிறது? எங்கு பட்டியல் இன மாணவர்கள் சிறுபான்மை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனரோ… அங்கு அதிகமாக நடக்கிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? இவை இதுகாறும் மத்திய பல்கலைக்கழகங்கள் ஐஐடி மற்றும் எய்ம்ஸ் போன்ற அதிஉயர் கல்வி நிறுவனங்களாகவே உள்ளன.
இங்கு படிக்க வருவோர் யார்? சாதி வேறுபாடுகளின்றி பொருளாதார அடிப்படையில் குறைந்தபட்சம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். பெரும்பாலானவர்கள் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களாகவும் இருப்பர். இதில் சில விதிவிலக்கு இருக்கலாம். ஆக பெரும்பாலும் குறைந்தபட்சம் நடுத்தர வர்க்கம். நகர்ப்புறவாசிகளே. உயர்ந்தபட்ச சாதி மத துவேஷத்திலும் வன்கொடுமையிலும் இவர்களே ஈடுபடுகின்றனர் என்று கருத இடமுண்டு. பட்டியல் இன மாணவர்களில் சாதிக் கொடுமைகளை நேரடியாக சந்திக்காமல் நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் மாணவர்கள் திடீரென சாதி வன்மத்துக்கும் ஒதுக்கலுக்கும் உள்ளாகும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் துடிதுடித்து தற்கொலை முடிவுகளுக்குத் தள்ளப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
தீர்வுகளை நோக்கி
பள்ளிப் பாடத்திட்டத்தில் குடிமைச் சமூகத்தில் இதைச் சரி செய்ய குறுகிய காலத்தில் – நீண்ட காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் ஆரோக்கியமான அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
சாதி வேறுபாடுகள், வன்கொடுமைகளை வேரறுத்தல் – சாதிகளை நிர்மூலம் ஆக்குதல் – நீண்ட நெடிய பணி. ஆனால், இந்த உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்கொலைகளை அரசு நினைத்தால் உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியும். எந்தவொரு மாணவனும் சாதி வேறுபாட்டை அனுபவித்த உடனே தற்கொலை செய்துகொண்டு மாண்டு போய் விடுவதில்லை. அவர்களது மன அழுத்தத்துக்கு மருந்து கிடைக்காமல் உயர் நிறுவனங்களில் அவர்கள் செய்த முறையீடுகள் பலனின்றி போன பிறகே, கடைசி ஆயுதமாக தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிகின்றனர்.

எல்லாக் கல்லூரிகளும் குறிப்பாக இதுவரை ஐந்து தற்கொலைகள் நடந்துள்ள சென்னை ஐஐடி போன்ற கல்லூரிகளில், “எங்களிடம் மனநல மையம் சிறப்பாகச் செயல்படுகிறது. சிறந்த மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். பேராசிரியர்களே மனநல ஆலோசனைகள் வழங்குகிறார்கள்” என்று ஏராளமான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் தேசிய சர்வதேசத் தரப் பட்டியலில் முன்னணி இடங்களைக்கூட வகிக்கிறார்கள். இந்த மையங்கள் போலியானவை என்பது இத்தற்கொலைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அதி உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் சேர்ந்த காலம் தொடங்கி விடுதி, உணவகம், வகுப்பறை, இதர கூட்டங்கள் என நின்ற, நடந்த, உட்கார்ந்த, பேசிய, பழகிய எல்லா இடங்களிலும் ஒதுக்குதல், தனிமைப்படுத்துதல், பாகுபாடு காட்டுதல் ஆகியவை சக மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்து உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். தற்கொலைக்குத் தூண்டியோர் யாராக இருந்தாலும் தக்க தண்டனை விதிக்கப்படும் என்ற அறநெறி உருவாக்கப்பட்டால் இந்தத் தற்கொலைகளுக்குத் தள்ளுவோர் பாதி பேர் வாலைச் சுருட்டிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள். உயர் கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடுகளில் ஈடுபடுவோரைத் தொடர்ந்து அடையாளம்கண்டு சிவில் சமூகத்துக்கு அடையாளம் காட்டி, அவர்களை எள்ளி நகையாடும்படி செய்ய வேண்டும். கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
நீண்ட காலத் திட்டங்கள்
நீண்ட காலத் தீர்வுகளைப் பள்ளிகளிலிருந்து பாடத் திட்டங்கள் வழியாகவும் அரசியல் அமைப்பு சட்டத்தின் வழியாகவும் தொடங்க வேண்டும். ஒவ்வோர் உயர் கல்வி நிறுவனங்களில் முன்பும் சாதி மத கொடுக்குகளால் பலியானவர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். அந்த நிறுவனத்தில் நுழையும் ஒவ்வொருவர் நெஞ்சில் பதிந்து அழுந்த வேண்டும். சாதி மத அழுக்குகளை அகற்ற அவர்கள் நிழல்கள் அங்கு நின்று நிலவ வேண்டும். பட்டியல் இன மக்கள், சிறுபான்மையினர், நலிவுற்ற விளிம்பு நிலை மக்கள் , முன்பு தங்களால் ஐஐடி போன்ற நிறுவனங்களில் சேருவதற்குத் தகுதி பெற இயலவில்லையே என்று வருந்தினார்கள்.
இப்போது எங்கு இன ஒதுக்கல் இருக்காது என்று பாத்திமாவின் அப்பா லத்தீப் தேடித் தேடி வந்து சேர்த்தாரோ, அங்குகூட உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் சென்னை ஐஐடியில் தன் மகனுக்கு இடம் கிடைத்தும் அதை நிராகரித்துவிட்டு என்ஐடி ஒன்றில் தன் மகனைச் சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் நீடித்தால் ஐஐடி எய்ம்ஸ் என அதி உயர் கல்வி நிறுவனங்களில் எல்லாம் பட்டியல் இன சிறுபான்மையினர் விளிம்பு நிலை மக்களின் இடங்கள் காலியாக இருக்கும் நிலை வந்துவிடுமோ?
இந்தக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இத்தனை பேர் செத்து மடிந்தும் அவர்கள் மன அழுத்தத்துக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதற்குப் பெயர் அதிஉயர் கல்வி நிறுவனமா? இவற்றின் தர அந்தஸ்து தரையிறங்க வேண்டாமா? அங்கு பணி செய்வோர் பயில்வோர் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? இனி மேலேனும் சாதி மத அடிப்படையில் தற்கொலைகள் நடைபெறாது என்பதற்கான கதாயுதம் உருவாக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அரசு நெட்டித் தள்ளியிருக்க வேண்டாமா? இதுவரை இது எதுவும் நடக்கவில்லையெனில் இனிமேலும் இத்தகைய தற்கொலைகள் நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா?
அப்படித்தானே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்!
கட்டுரையாளர் குறிப்பு : நா.மணி – ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக இருக்கிறார். மாணவர் உலகத்தில் கல்வி ரீதியாகவும், கள ரீதியாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் கல்வியாளர்.
