சிறப்புக் கட்டுரை: பெரியார் – அண்ணாவின் உருவமா அம்மா?

Published On:

| By Balaji

ஆரா

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற இடைக்கால அமைப்பின் பெயர், ‘திராவிடம்’ என்ற நீண்ட நெடுங்காலத் தொடரமைப்பு பற்றிய விவாதத்தை இப்போது புதுப்பித்துவிட்டிருக்கிறது.

இந்த அமைப்பின் பெயரில், ‘திராவிடம்’ இல்லை என்ற காரணத்தால் நாஞ்சில் சம்பத், தான் இதுகாறும் ஆதரித்துவந்த ‘திராவிடச் சூரியன்’ டிடிவி தினகரனை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணா, தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவன். மனிதனை மனிதனாக்கிய மகோன்னதத்தின் பெயர் திராவிடம். அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவான இயக்கம் திராவிட இயக்கம். திராவிடம் இல்லாத தமிழகம் என்று சங் பரிவார் சக்திகள் குரைத்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், திராவிடம் இல்லாத ஒரு பெயரைத் தன் கட்சிக்கு வைத்திருப்பதன் மூலம் ஓர் இமாலயத் தவற்றைத் தினகரன் செய்துள்ளார். கொள்கை திரவியத்தைக் கொட்டிக் கவிழ்த்திருக்கிறார். குலநாசம் செய்திருக்கிறார். பட்டப்பகலில் பச்சைப் படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார். இந்தப் பாவத்தில் என்னால் பங்குகொள்ள முடியாது. ஆகவே தினகரன் அணியிலிருந்து விலகுகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

**எல்லாமே ‘அம்மா’தானா?**

ADVERTISEMENT

இந்த அரசியல் நிகழ்வுக்குப் பிறகு, நாஞ்சில் சம்பத்துக்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு டிடிவி தினகரன் கூறிய வார்த்தைகள்தான், திராவிடச் சங்கிலி எப்படி இன்றைய அரசியல் பிழைப்புலகத்தில் அறுந்து தொங்குகிறது என்பதைக் கண்முன் படிம பிம்பமாக நிறுத்திப் போகின்றன.

“நாஞ்சில் சம்பத் எங்களுக்காகப் பல மேடைகளில் ஆதரவாகப் பேசியிருக்கிறார். பெயர்க் காரணம் சொல்லி அவர் விலகுவது வருத்தம் அளிக்கிறது. அண்ணாவையும் திராவிடத்தையும் நாங்கள் அவமதித்ததுபோல் பேசியிருக்கிறார். பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் மொத்த உருவமாகத் திகழ்கின்ற அம்மாவின் பெயரில் இந்தக் கட்சியை தொடங்கியிருக்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அம்மாவுக்குச் சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்துள்ளார். திராவிட மக்களின் பாதுகாவலராக விளங்கிய அம்மாவின் திருப்பெயரில் இந்த இயக்கம் இயங்கும்” என்று அறிவித்திருக்கிறார்.

தினகரனின் பத்திரிகையாளர் சந்திப்புகள் குறைந்தபட்சம் அரைமணி நேரமும், அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்கு மேலும் நடக்கும். அப்போது அவர் பல விஷயங்களைப் பேசுவார். அந்த வகையில்தான் நாஞ்சில் சம்பத்துக்கு பதில் அளிப்பதாக நினைத்து… பெரியாரையும் அண்ணாவையும் ஜெயலலிதாவோடு மிகச் சாதாரணமாக ஒப்பிட்டுக் கடந்து சென்றிருக்கிறார். மேலும், தேர்தல் ஆணைய நடைமுறை அவசரங்களால் திராவிடம் என்ற பெயர் பதிவு செய்யப்படவில்லை என்றும் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.

**திராவிடம் என்னும் பன்முக அடையாளம்**

கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் அதிகம் விவாதிக்கப்பட்ட வார்த்தை திராவிடம். அதிகம் விமர்சிக்கப்பட்ட வார்த்தையும் திராவிடம்தான். திராவிடம் என்பது மொழியா, பூகோளமா, இனமா, நாடா, கலாசாரமா என்ற கேள்விகளுக்கு, எல்லாமுமாக இருப்பதுதான் திராவிடம் என்பதே பதில்.

திராவிடத்துக்கு மொழிக் குடும்பம் இருக்கிறது. திராவிடம் என்பதற்குப் பூகோள அமைப்பு இருக்கிறது, திராவிடம் என்ற இனமும், திராவிடம் என்ற கலாசாரமும் இன்றும் இருக்கிறது. பக்தியில்கூட நாலாயிர திவ்யப் பிரபந்தம் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல; இன்றும் இந்தியா முழுவதும் வணங்கப்படும் அத்வைத சித்தாந்தத்தைப் போதித்த ஆதி சங்கரர் தன்னை, ‘திராவிட சிசு’ என்றே பிரகடனப்படுத்திக் கொள்கிறார். இது, அனைத்தையும் உள்ளடக்கிய திராவிடத்தின் ஆழ உயர, அகல நீளத்தைக் காட்டுகிறது,

திராவிட இயக்கம் நூறாண்டு கடந்துவிட்டதாக அதன் அரசியல் பரிமாணத்தை மட்டுமே வைத்து சொல்வதுமேகூட திராவிட வானத்தை ஒரு வட்டத்துக்குள் அடைக்க முயலும் செயலாகவே தோன்றுகிறது.

இந்தத் திராவிடத்தின் அரசியல் எழுச்சியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய பெரியாரும் அண்ணாவும் செய்த சாதனை சாதாரணமானதல்ல. ஒரு கட்சியின் ஆட்சி முடிந்து இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும் ஆட்சி மாற்றம் போன்றதல்ல பெரியாரும் அண்ணாவும் செய்த மாற்றம். அவர்கள் செய்தது சமூக அமைப்பு மாற்றம்; ஆட்சியியல் மாற்றம்.

பெரியார் பதப்படுத்திவைத்த இம்மண்ணில் அண்ணா திராவிட விதைகளை விதைத்து, வளர்த்து ஆட்சியாக அறுவடை செய்தார். அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள்தான் இன்றுவரை தமிழகத்தைக் காப்பாற்றி வருகின்றன. அவர்கள் போட்ட பாதையில்தான் இன்றும் தமிழகம் என்ற வண்டி சீராக ஓடிக்கொண்டிருக்கிறது.

**நாத்திக, ஆத்திக முரண்களுக்கு அப்பால்…**

திராவிடம் என்றால் நாத்திக, ஆத்திகச் சண்டையல்ல. அதிகாரப் பகிர்வு, சமூக நீதி, கடையனுக்கும் கடைத்தேற்றம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று திராவிடத்தின் எல்லை பரந்து விரிந்தது. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக இலவச குக்கர் திட்டத்தைக் கொண்டுவந்தார். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து அடுப்புகளில் கஷ்டப்பட்டுச் சமைத்து உண்டு அதன் பின் ஓய்வெடுக்க வேண்டியிருப்பதை உணர்ந்த காஸ்ட்ரோ, குக்கர்களை வழங்கினார்.

இங்கே அண்ணா ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்ற முழக்கமாக முன்வைத்தார். பொது விநியோகத் திட்டத்தை ஏழைகளுக்கான, எளியவர்களுக்கான, தொழிலாளர்களுக்கான வாழ்வியல் திட்டமாக மாற்றினார். இந்த இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தன்னளவில் தமிழ்நாட்டை திராவிட இயக்கம் எவ்வளவு சமூகப் பார்வையோடு அணுகியிருக்கிறது என்பது புரியும்.

இன்றும் தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, கிராமப்புறப் பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றத் திசையில் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவின் மற்ற பல மாநிலங்களைவிட முன்னேற்றத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெரியாரின் பாதையில் அண்ணா தொடங்கி வைத்த அரசு இயந்திரம்தான்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதுகூட, தன் ஒவ்வோர் உரையின் போதும் ‘அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க’ என்றுதான் கூறினார். ஒருபோதும் அண்ணாவோடும் பெரியாரோடும் தன்னை ஒப்பிட்டுக்கொண்டதில்லை. அண்ணா என்ற பல்கலைக்கழகத்தில் பின்னாள்களில் அரசியல் சூழல் நிபந்தனைகளால் படிக்கவந்தவர் ஜெயலலிதா. திராவிட இயக்கத்தின் பரிணாமத்தில் தான் யார் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். தினகரன் கைப்பற்றத் துடிக்கும் அதிமுகவுக்கும் அஸ்திவாரம் திராவிட இயக்கம்தான் என்பதையாவது அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

அவரை பெரியாரோடும் அண்ணாவோடும் ஒப்பிடுவது தினகரன் போன்ற அரசியல்வாதிகளின் வரலாற்றுப் பார்வை எத்தனை தூரம் பயணம் செய்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

**பார்வை வீச்சின் எல்லை**

தினகரன் தெளிவாகச் சொல்கிறார்: “நாஞ்சில் சம்பத் என்னை விட வயதில் மூத்தவர். அவர் அண்ணாவைப் பார்த்திருக்கலாம்; பெரியாரைப் பார்த்திருக்கலாம். அதன் பிறகு திமுகவில் இருந்தார். மதிமுகவில் இருந்தார். ஆனால், நாங்கள் அம்மாவைப் பார்த்துதான் அரசியலுக்கு வந்தோம். அம்மாவின் அறிமுகத்தால் புரட்சித் தலைவரை ஓரிரு முறை பார்த்துள்ளோம். இங்கிருக்கும் 90 சதவிகிதத் தொண்டர்கள் அம்மாவால் களத்துக்கு வந்தவர்கள்தான். அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினோம்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இப்படிப் பேசும் இன்றைய குக்கர் தினகரனுக்கு, காஸ்ட்ரோ வழங்கிய குக்கர் வரை சென்று, அதைப் பெரியாரின் அண்ணாவின் திராவிடத்தின் ஆட்சியோடு ஒப்பிட்டு பதில் சொல்வதெல்லாம் அதிகப்படியானது என்றுதான் திராவிட இயக்க வரலாறு தெரிந்தவர்கள் கருதுவார்கள். தினகரனுக்கு எல்லாமே ‘அம்மா’வாக இருக்கலாம். ஆனால், தமிழக அரசியலில் அவர் தன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் ‘அம்மா’வைத் தாண்டியும் தன் பார்வையைச் செலுத்த அவர் கற்க வேண்டும்.

**கருத்துகளைப் பகிர… aara@minnambalam.com, feedback@minnambalam.com**

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share