சிறப்புக் கட்டுரை: நீலகிரி நிலச்சரிவு – தனித்தீவானது குந்தா!

Published On:

| By Balaji

களத்திலிருந்து பேராசிரியர் போ.மணிவண்ணன்

சூழலியலின் சொர்க்கமாகத் திகழ்ந்த நீலகிரி, இப்போது பேரிடர்களின் பெருநிலமாக உருமாற்றப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் தாய் நிலம் தற்போது நிலச்சரிவின் பேரச்சத்தில் உறைந்துபோயிருக்கிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே பெய்யத் தொடங்கிய பெருமழை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தன் கோரத்தாண்டவத்தால் நிலச்சரிவுகளை உண்டுபண்ணியிருக்கிறது. மிக மிக மோசமான பருவநிலை மாற்றமே இத்தகைய சூழ்நிலைக்குக் காரணமாகி இருக்கிறது என்பதை உணராத வரையில் மனிதர்களின் மீதான இயற்கையின் போர் இன்னும் தீவிரமடையும்.

ADVERTISEMENT

நீலகிரியின் சிரபுஞ்சி என்று வர்ணிக்கப்படும் தேவாலா பகுதியில் 60 மில்லிமீட்டர் மழை மட்டும்தான் பதிவாகி இருக்கிறது. ஆனால், குந்தா பகுதியில் 120 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதுதான் பொதுமக்களிடையே அதிக பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா தாலுக்கா எல்லா வருடமும் குறைவான மழை பதிவாகும் சற்றே வறண்ட பகுதியே ஆகும். ஆனால், வழக்கத்துக்கு மாறான இந்த மழைப் பதிவு இந்தப் பகுதியில் களேபரத்தை உருவாக்குவதற்கான வெள்ளோட்டம் என்பதை உணரும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

ADVERTISEMENT

30 ஆண்டுகளுக்கு முன்பு குறும்பேரி என்ற பகுதியில் பெருமழையோடு தாக்கிய பேரிடி அந்த குக்கிராமத்தையே வழித்து, பேரழிவை நிகழ்த்தியது. பின்னர் கெத்தை நீர்மின் நிலையத்துக்கு அருகில் நேர்ந்த நிலச்சரிவுதான் இரண்டாம் பேரபாயம். இந்த நிலச்சரிவுக்குப் பல வீடுகளையும் பல உயிர்களையும் காவு கொடுக்க நேர்ந்தது. அதற்குப் பின் தற்போதுதான் மழை தன் கோரத் தாண்டவத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்தப் பேரிடர்கள் எல்லாமே அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதங்கள் கறுப்பு மாதங்கள் மட்டுமல்ல; கண்ணீர் மாதங்கள்.

ஓய்வின்றி பெய்யும் பருவமழை மாயாபஜார் பகுதியில் இரண்டு வீடுகளை முற்றிலும் நிர்மூலப்படுத்தாமல் பாதி உருக்குலைத்திருக்கிறது. பிக்கட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட சிவசத்தி என்னும் பகுதியில் உள்ள ஆறு வீடுகளை பெரும்சினம்கொண்டு ஒரு பகுதி சிதைத்துள்ளது. சேரனூர், அண்ணாநகர், காந்திபுரம் மேலும் குந்தா பாலத்துக்கு அருகிலுள்ள மேட்டுச்சேரி பகுதியும், அன்னமலை கோயிலுக்கு அருகிலுள்ள காமராஜர் பகுதியிலும் வீட்டின் முற்றங்களை மழை வலிந்து களவாடியதால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

ADVERTISEMENT

மழையால் பாதிக்கப்பட்ட இந்த இடங்களை இணைக்கும் இடம் மஞ்சூர் ஆகும். இதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து மஞ்சூருக்கு வரும் சாலைகளும் குறிப்பாக கொண்டை ஊசி வளைவுகளும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் மழையால் உருக்குலைக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றின் மைய வணிகப்பகுதியாக விளங்கும் மஞ்சூர் தீவாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போனதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், பணிகளுக்குச் செல்லும் பணியாளர்கள், சிகிச்சைக்காகச் செல்லவிருக்கும் பெரு நோயாளிகள், கூலிக்காகப் பயணிக்கும் தினக்கூலிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து, எம்மைப் போலவே மானுட வர்க்கம் இயற்கையால் படுகொலையாக இருப்பதை குறிப்பால் உணர்த்தி மிரட்டுகிறது. தொடர்ந்து மண்ணரிப்பு ஏற்பட்டு சின்னச் சின்ன பாறைகள் உருண்டதால் மக்கள் அச்சமுற்று செய்வதறியாது தவிக்கிறார்கள்.

இந்த நீலகிரி மாவட்டம் பழங்குடிகளின் பூர்வநிலமாகும். இந்தப் பூர்வகுடிகளில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் படுகர்கள். அரங்கேறிக்கொண்டிருக்கும் பருவமழையின் கோரதாண்டவத்தில் படுகர் கிராமங்களில் ஒன்றுகூட பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படுக பூர்வகுடிகள் தங்கள் ஊர்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கும்போதே புவியியல் அணுகுமுறை கொண்டவர்களாகவும் இயற்கைப் பேரிடர் ஏற்படாத அளவுக்கான இடங்களைத் தேர்வுசெய்யும் புவியியல் ஞானம் மிக்கவர்களாக இருந்திருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது.

சுமார் 400 கிராமங்களில் வசிக்கும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான படுக பழங்குடிகளை இந்தப் பருவமழை மட்டுமல்லாமல் எந்த பருவ மழையும் எதையும் செய்துவிடவில்லை என்பதுதான் ஆச்சரியமூட்டும் செய்தி. காரணம், இவர்கள் தங்கள் வீடுகளைத் தனித்தனியாக கட்டாமல் இணைப்பு வீடுகளாக உருவாக்கினார்கள். இத்தகைய வீடுகளால் ஆன பகுதியை ‘அட்டி’ என்று அழைத்தனர்.

தொன்மைக் காலம்தொட்டே தினை விளைவித்தலையும் ஆனிரை வளர்த்தலையும் முதன்மை பணிகளாகக் கொண்டிருந்த இவர்கள், இப்போது இந்தப் பணிகளிலிருந்து அந்நியமாகிவிட்டதுதான் இவர்களுக்கு நேர்ந்த முதல் பின்னடைவு ஆகும். வெள்ளைக்காரர்கள் நீலகிரிக்குள் காலடி எடுத்துவைத்த பிறகு பணப்பயிர் என்ற பேராசையை உண்டுபண்ணி பூர்வத் தொழில்களிலிருந்து இம்மக்களை வேரோடு பறித்தார்கள்.தொடர்ந்து காய்கறி பயிரிடப் பழக்கி, இப்போது மலர் சாகுபடி வரையில் கொண்டுவந்து இந்தப் பூர்வகுடிகளை சாகும்படி செய்திருக்கிறார்கள். இதனால் இம்மக்கள் தங்கள் தொன்மங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்து முகவரிகளை இழக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த இரண்டு தலைமுறைகள் இப்படியான வேளாண் வாழ்க்கை முறைக்கு வலிந்தோ, விரும்பியோ தள்ளப்பட்ட நிலையிலும் இவர்களது பொருளாதார நிலை இன்னமும் உயர்ந்தபாடில்லை. விளைவிக்கிற தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை இவர்கள் சில வணிக சதிகளால் இழந்துவிட்டதால் தங்கள் நிலங்களைப் பராமரிக்க முடியாமல் திணறினர். கூலித் தொகையும் உயர்ந்துவிட்டதால் முதலையே எடுக்க முடியாமல் போராடும் நிலை உருவாகியிருக்கிறது.

இத்தகைய கையறு நிலையில்தான் எதையுமே விவசாயிகளுக்குத் திருப்புத் தராத தங்கள் நிலங்களை மாற்றாருக்கு அதிக விலைக்கு விற்கத் தொடங்கினார்கள். போதுமான உயர் கல்வி நிலையங்களும் நவீன மருத்துவ வசதிகளும் இல்லாமல் போனதால் பிள்ளைகளின் கல்விக்காகவும், நோயுற்றவர்களின் மருத்துவத்துக்காகவும் சமவெளிகளை நோக்கி படையெடுக்கும் நெருக்கடி நிலை இவர்களுக்கு உருவானது. இதனால் இருதலைக் கொள்ளி எறும்பைப் போல செய்வதறியாது தவிக்கும் இவர்களின் சூழ்நிலையை அந்நியர்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள். இவர்கள் விற்ற நிலங்களில் என்றைக்கு மற்றவர்கள் கட்டுமான விதிகளை மீறி காட்டேஜ்களை கட்டத்தொடங்கினார்களோ அன்றிலிருந்துதான் நீலகிரி கடுமையான சூழலியல் கேடுகளையும் பேரிடர்களையும் சந்திக்கத் தொடங்கியது.

சின்ன சின்ன மலை முகடுகளைச் சொற்ப விலைக்கு வாங்கி, முதன்மை சாலையிலிருந்து தங்களின் சொகுசு குடியிருப்புகளுக்கு மரங்களை வெட்டி, கற்களையும் பாறைகளையும் பிளந்து மேட்டுப்பகுதியைக் குடைந்து பெருங்குழி செய்து கட்டுமானங்களை உருவாக்கியதால்தான் இந்த மண்ணரிப்புகளும் நிலச்சரிவுகளும்.

நிலத்தின் வளங்களை முற்றாகத் தீர்த்துக் கட்டிவிட்டு, நிலவை நோக்கிப் பயணிக்கும் கோமாளித்தனம் இங்கேயும் அரங்கேறுகிறது. சமவெளிக்காரர்கள் தங்களின் உல்லாசத்துக்காக ஒரு சூழல் மண்டலத்தையே சூறையாடும் கொடூரம் நிறுத்தப்படவேண்டிய ஒன்று.

புதுக்குடியிருப்புகளுக்காக நீர்நிலைகளின் போக்குகளை மாற்றியமைப்பதும், வணிகத்தேவைகளுக்காக அளவுக்கு அதிகமாக அதன் வளங்களைச் சுரண்டுவதும் இயற்கையின் சமநிலையைக் கட்டுடைத்துள்ளன.சமவெளிக்காரர்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டதால் இந்த மண்ணின் மைந்தர்கள் வறட்சியின் தீவில் தள்ளப்பட்டார்கள். இதைச் சரிகட்டுவதற்காக பல்லாயிர போர்வெல் ஆழ்த்துளைகள் இந்தப் பாறைகளின் தேசத்தை சல்லடையாய் துளைத்துத் தீர்த்தது.

இத்தகைய சூழல் கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவர ஏற்கெனவே பழங்குடிகளாக இருந்து பின் பட்டியல் பழங்குடியில் இடம்பெறாமல் போன பூர்வகுடி படுகர்களை மீண்டும் பழையபடி பழங்குடி பட்டியலில் சேர்ப்பதே தீர்வாகும்.

அப்படியாகும் பட்சத்தில் பழங்குடிகளின் நிலங்களைப் புதுக்குடிகளால் விலைக்கு வாங்க முடியாது. அதற்குச் சட்டத்தில் இடமும் இல்லை. எனவே பூர்வகுடிகளின் நிலம் அவர்கள் வசமே இருக்கும். அவர்கள் வசத்தில் இருக்கும்பட்சத்தில் சூழலியல் சமநிலைக்குத் திரும்பும்.

ஆசியாவின் சூழல் மண்டலத்தைக் காப்பாற்ற நீலகிரியைக் காப்பாற்றுங்கள். நீலகிரியைக் காப்பாற்ற பழங்குடிகளைக் காப்பாற்றுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share