Photo Credit :பிரபு காளிதாஸ்
ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு என்ன இடமோ அந்த இடத்தை ஃப்ரெஞ்சில் பெற்றிருப்பவர் மோலியர். வாழ்ந்த காலம்: 1622 – 1673. அவரது இயற்பெயர் வேறாக இருந்தாலும் நாடக உலகத்துக்காக மோலியர் என்ற பெயரை வைத்துக் கொண்டார். அந்தப் பெயரே இயற்பெயரை விடப் பிரபலமாக இருந்தது. மோலியர் நாடகாசிரியர் மட்டுமல்லாமல் நடிகராகவும் விளங்கினார். மன்னன் பதினான்காம் லூயியும் அவனது குடும்பத்தினரும் அவரது ரசிகர்களாக இருந்தனர். அரச சபையில் நடக்கும் கேளிக்கைகளில் கூட மோலியரின் நாடகங்களே பிரதானமாக இருந்தன. மோலியரின் காலத்திலிருந்து 250 ஆண்டுகளுக்குப் பின்னர் ஃப்ரான்ஸில் ஒருவர் வாழ்க்கையின் அபத்தத்தைப் பற்றிப் பேசினார். உலக அளவில் அவருடைய தத்துவம் சிலாகித்துப் பேசப்பட்டது. அப்படி தன் வாழ்நாள் முழுவதும் அபத்தம் பற்றிப் பேசியவரின் மரணம் நம்ப முடியாத அபத்தத்தன்மை கொண்டதாக முடிந்தது. விமானத்தில் செல்ல பயணச் சீட்டெல்லாம் வாங்கிய அவர் கடைசி நேரத்தில் தன் நண்பரும் பதிப்பாளருமான மிஷல் காலிமாரின் பேச்சுக்கு இணங்க அவரோடு காரில் சென்றார். கார் விபத்துக்குள்ளாகி இருவரும் இறந்தனர். அதே போன்ற தற்செயல் நிகழ்வு மோலியரின் மரணத்திலும் நடந்தது. 1673-ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 17-ஆம் தேதி மோலியர் எழுதிய The Imaginary Invalid என்ற நாடகத்தில் அர்கானாக நடித்துக் கொண்டிருந்தார் மோலியர். அர்கான் ஒரு ஹைப்பொகாண்ட்ரியாக். ஹைப்பொகாண்ட்ரியா என்பது தனக்குப் பெரும் நோய் இருப்பதாக நம்பும் மனப்பிறழ்வு. அர்கான் அப்படிப்பட்ட மனப்பிறழ்வு கொண்டவன். நோய் முற்றி விட்டது, நான் செத்துக் கொண்டிருக்கிறேன் என்றே அவன் பலமுறை புலம்பிக் கொண்டிருக்கிறான் (நாடகத்தில் மோலியர்). ஆனால் நிஜவாழ்வில் மோலியருக்குக் காச நோய் இருந்தது. அடிக்கடி ரத்த வாந்தியும் எடுப்பார். நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே ரத்த வாந்தி வந்தது. என்றாலும் நாடகம் முடியும் வரை அவர் நடித்துக் கொண்டேயிருந்தார். முடிந்ததும் இறந்து விட்டார்.

அப்படிப்பட்ட மோலியரின் உடல் அனாதைப் பிணங்களோடு ஒரு பிணமாகத் தூக்கியெறியப்பட்டது. காரணம், அந்தக் காலத்து ஃப்ரான்ஸில் நடிகர்களுக்கு மதிப்புக் கிடையாது. மோலியர் லூயி மன்னனின் நெருங்கிய நண்பராக இருந்ததால் மோலியரின் மனைவி மன்னனிடம் தன் கணவரின் உடல் முறையாக அடக்கம் செய்யப்பட அனுமதிக்க வேண்டும் என்று எழுத்து மூலமாகக் கேட்டுக் கொண்டார். மன்னன் அந்த வேண்டுகோளை ஆர்ச் பிஷப்புக்கு அனுப்பி வைக்க, ஆர்ச் பிஷப் நடிகர்களுக்கெல்லாம் தேவாலயக் கல்லறையில் இடம் கிடையாது என்று மறுத்து விட்டார்.

மன்னன் பதினான்காம் லூயி மோலியருடன் உணவருந்தும் காட்சி.
தமிழ்நாட்டிலும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னே நிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால் நம் கலாச்சாரத்தில் ’வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை’ என்பதால், இப்போது நடிகர்கள்தான் தமிழர் வணங்கும் தெய்வம். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் வைக்கப்படும் நூறு அடி கட் அவுட், பாலாபிஷேகம், பியர் அபிஷேகம் போன்ற கூத்துகளைக் கவனித்தால் புரியும். சினிமா, தமிழர்களின் சுவாசமாகவே மாறி விட்டது. எங்கும் சினிமா, எதிலும் சினிமா. ஜல்லிக்கட்டு போன்ற ஒரு சமூக நிகழ்வு நடந்தால் கர்னாடகத்திலோ கேரளத்திலோ சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும்தான் கருத்து சொல்வார்கள். அதுதான் ஊடகங்களில் வெளிவரும். ஆனால் தமிழ்நாட்டில் நடிகர்கள்தான் சிந்தனையாளர்கள்; நடிகர்கள்தான் கவிஞர்கள்; நடிகர்கள்தான் எழுத்தாளர்கள்; இன்னும் இன்னும். இந்தச் சூழலில் ஒவ்வொரு நடிகரும் தங்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பதாகவே நம்புகிறார்கள். அதுதான் பெரும்பாலான நடிகர்களின் அரசியல் கனவுகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் நடிகர்களின் நிழல்கள் சலனிக்கும் படுதாவுக்கும் எதார்த்தத்துக்குமான வித்தியாசம் எப்படியிருக்கும் என்பதை விஜயகாந்தின் அரசியலை வைத்தே நாம் புரிந்து கொண்டோம்.
தமிழர்கள் சினிமாவே உயிர்மூச்சாக வாழ்வதற்கு ஊடகங்கள் பெருமளவு காரணமாக இருக்கின்றன. ஹீரோவுக்கு ஜலதோஷம் பிடித்தால் கூட அது முதல் பக்கச் செய்தி. தோல்விப் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் அடுத்த படம் பற்றிக் கொஞ்சம் யோசித்தாலே அதற்கு நாலு பக்கக் கட்டுரை. முன்பெல்லாம் பேசும் படம், பொம்மை என்று சினிமாவுக்கென்று தனிப் பத்திரிகைகள் வரும். ஆனால் இப்போது எல்லாப் பத்திரிகைகளுமே சினிமா பத்திரிகைகளாக மாறி விட்டன. பத்துப் பக்கம் போக மற்ற தொண்ணூறு பக்கங்களிலும் நடிகைகளின் முக்கால் நிர்வாணப்படங்களே இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் கவர்ச்சி நடிகை என்று சினிமாவில் தனியாக ஜோதிலட்சுமி, ஒய்.ஜி. விஜயா, சிலுக்கு ஸ்மிதா என்று இருப்பார்கள். ஆனால் இப்போது கவர்ச்சி நடிகைகளே தேவைப்படவில்லை . எல்லா வேலையையும் ஹீரோயின்களே முடித்துக் கொடுத்து விடுகிறார்கள். இப்படி இருந்தால் ஹீரோயின்கள் மீது எப்படி மரியாதை வரும்?
சமூக வாழ்வில் சினிமா உலகப் பிரபலங்கள் அந்தக் காலத்து மகாராஜாக்களைப் போலவே வாழ்கிறார்கள். தி.நகரில் ஒரு எழுத்தாளர் வசிக்கிறார். தமிழின் உச்சபட்ச எழுத்தாளர். நோபல் விருது எல்லாம் அவரது எழுத்துக்கு முன்னால் துச்சம். இது என் கருத்து மட்டும் அல்ல; தமிழ் எழுத்தாளர்கள் பலரது கருத்தும் அதுதான். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். மகள் வீட்டில் வசிக்கிறார். எழுத்தாளருக்கு ஒரு சிறிய அறை. அதில்தான் படுக்கை, படிப்பு, எழுத்து எல்லாம். உங்கள் புத்தகங்கள் எல்லாம் எங்கே என்று கேட்டேன். அந்த அறையை ஒரு முறை கண்களால் ஆழ்ந்து நோக்கி விட்டு என்னைப் பார்த்து “இங்கே எந்த இடத்தில் வைப்பது?” என்று கேட்டார். அவர் வாழ்நாள் பூராவும் சேர்த்த, படித்த ஆயிரக் கணக்கான புத்தகங்களையும் நூலகங்களுக்குக் கொடுத்து விட்டார். விடை பெற்றுக் கொண்டு கிளம்பும் போது என்னோடு வெளியே வந்தார். எதிரே ஒரு பெரிய அரண்மனை தெரிந்தது. இப்போதுதான் ராஜாக்கள் இல்லையே என்று யோசித்தேன். பக்கத்தில் இருந்த நண்பர் அந்த அரண்மனை ஒரு சினிமா உலகப் பிரபலத்தினுடையது என்றார்.

அதை நான் ஒரு குறியீடாகவே பார்க்கிறேன். எழுத்தாளர்களைப் பட்டினி போட்டு விட்டு, கேளிக்கையாளர்களை கோபுரத்தில் வைத்துக் கொண்டாடும் ஒரு சமூகம் எப்படி உருப்படும்? இந்த அவலத்தின் பின்னணியில்தான் சமீபத்தில் பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அல்லது வெளியிட்டதாகச் சொல்லப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மதுவும் பாலியல் கேளிக்கைகளும் சினிமா உலகத்துக்கு மட்டும் உரித்தானவை அல்ல. மற்ற சில துறைகளிலும் அது இருந்தாலும் சினிமாவில் தான் அதற்கான வசதி வாய்ப்புகள் அதிகம். காரணங்கள் மூன்று. பணம், பெண், அதிகாரம். உதாரணமாக, மாஃபியா துறையில் ஒரு பாலியல் கேளிக்கை நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அங்கே பாலியல் தொழிலாளிகளைத்தான் பணம் கொடுத்து வரவழைக்க வேண்டியிருக்கும். சினிமாவில் அப்படி இல்லை. எல்லோருமே சகாக்கள், உடன் பணி புரிபவர்கள். ஒரு நட்பு கோஷ்டியைச் சேர்த்துக் கொண்டு மதுவில் புரளலாம். கட்டியும் புரளலாம். நான் மது அருந்துவதை நிறுத்தி விட்டாலும் இன்னும் ‘பப்’களுக்குச் சென்று கொண்டுதானிருக்கிறேன். முன்பு வாரம் ஒருமுறை. இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை. ராக் இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் இருக்கும் தீவிர ஈடுபாடே காரணம். அப்படிச் செல்லும் போது, ஒரே படத்தில் நடித்த இளம் நடிகைகள் கூட ஏழெட்டு ரவுண்டு போட்டு விட்டு, அறவே சுய நினைவு இழந்து தள்ளாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அப்படி ஒரு இளம் நடிகையை ’ரேடியோ ரூம்’ ’பப்’பில் ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன். அதேபோல் அந்த விவகாரமான இளம் இசையமைப்பாளரும் ஒரு சனிக்கிழமையையும் தவற விடுவதில்லை. இதெல்லாம் அவர்களது சொந்த விஷயம். அதைப் பற்றி எழுதவோ, கருத்து சொல்லவோ யாருக்கும் உரிமையில்லை. ஆனால் சுசித்ராவின் காணொளிகளையும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ள மற்ற சங்கதிகளையும் பார்க்கும் போது சினிமா உலகைப் பற்றி மக்களிடையே உள்ள சந்தேகங்கள் எல்லாம் உண்மை என்றே நம்பத் தோன்றுகின்றன. உதாரணமாக, சுசித்ரா வெளியிட்டுள்ள காணொளிகளில் இடம் பெற்றுள்ள நடிகைகள் அனைவரும் அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகப் படம் பிடிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அவர்களுக்குத் தெரிந்தேதான் படம் பிடிக்கப்பட்டுள்ளன. கேமராவைப் பார்த்து அவர்கள் பேசுகிறார்கள். எல்லாமே சன்னி லியோனி ரகம். ஆக, இவையெல்லாம் எப்படி, எந்தச் சூழலில் எடுக்கப்பட்டன? இப்படி எடுத்துக் கொடுத்தால்தான் படத்தில் வாய்ப்பு என்று தயாரிப்பாளரோ ஹீரோவோ சொல்கிறார்கள் என்கிறது உள்தகவல். எல்லோரும் அல்ல. சிலர் அல்லது பலர். இல்லாவிட்டால் ஒரு பிரபலமான நடிகை சன்னி லியோனி போல் சுய மைதுனம் செய்வதை அவரே எடுத்து வைத்துக் கொள்வது எப்படி சாத்தியம்?
சினிமா உலகில் நடிகைகள் வெறும் செக்ஸ் பண்டங்களாகவே பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. ஒருசில தமிழ்ப் படங்களை பார்த்தாலே அது புரிந்து விடும். ஆனால் முன்பு அப்படி இல்லை. பானுமதி எம்ஜியாரை ராமச்சந்திரன் என்றே அழைத்திருக்கிறார். அப்படிப்பட்ட பெண் ஆளுமைகள் இன்றைய சினிமாவில் ஏன் இல்லை?
மேலும், இப்போதைய ஹீரோயின்கள் முன்பு போல் இல்லை. ஆந்திர கிராமங்களிலிருந்து பிழைப்புத் தேடி கோடம்பாக்கத்துக்கு வரும் படிப்பறிவு அற்ற ஏழைகளைப் போல் இல்லை இப்போதைய ஹீரோயின்கள். (அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் என்ற நாவலைப் படிக்கவும்.) இப்போதெல்லாம் நாயகிகள் மேட்டுக்குடியிலிருந்து வருகிறார்கள். ஆனால், கிராமங்களிலிருந்து வரும் இயக்குனர்களிடம் அடிமைகளாகி விடுகின்றனர். படங்களிலும் நாயகிகளுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை. வில்லன்களின் மகள்களாக ஓரிரு காட்சிகளில் வர வேண்டும். சுவிட்ஸர்லாந்து குளிரில் குறைந்த ஆடையுடன் டூயட் பாட வேண்டும். அவ்வளவுதான்.
சுசித்ரா வெளியிட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் இப்போது நீக்கப்பட்டு விட்டன என்றாலும் அவை அனைத்தும் இணையத்திலும், ஆயிரக் கணக்கானவர்களின் அலைபேசிகளிலும் நிரந்தரமாகப் பதிவாகி விட்டன. என் ட்விட்டர் அக்கவுண்ட்டை hack பண்ணி விட்டார்கள் என்கிறார் சுசித்ரா. சரி, போலீஸில் புகார் செய்தீர்களா என்று கேட்டால், வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பயமாக இருக்கிறது, எப்படிப் போய் புகார் செய்வது என்கிறார். (சன் தொலைக்காட்சிப் பேட்டி). சுசித்ராவின் கணவர் கார்த்திக்கோ சுசித்ராவுக்கு மனம் சரியில்லை என்கிறார். சுசித்ரா இப்போது சொல்வது உண்மையானால் ”என்னை தனுஷ் தாக்கினார்” என்று சொல்லி பத்து தினங்களுக்கு முன்பு அடிபட்ட கைகளின் புகைப்படத்தை வெளியிட்டாரே? அது பற்றிய பதிலைக் காணோம்.

இந்த நேரத்தில் எனக்கு ஸ்டான்லி குப்ரிக்கின் Eyes Wide Shut என்ற படம் ஞாபகம் வருகிறது. அதில் வரும் செக்ஸ் orgy காட்சிகளுக்கு ஒப்பானவையே சுசித்ராவின் காணொளிகள். அடிப்படையில் ஆணும் பெண்ணும் polygamous தன்மை உடையவர்களே. (பாலிகமி: ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் அல்லது பெண்ணோடு உறவு கொள்ளுதல்). ஆனாலும் அதை ஒப்புக் கொண்டால் சமூகக் கட்டுக்கோப்பு குலைந்து விடும் என்பதற்காக ஆணும் பெண்ணும் monogamous என்று நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். (பாரதத்தில் திரௌபதி தனக்கு பஞ்ச பாண்டவர்களைத் தவிர கர்ணன் மீதும் ஈர்ப்பு உண்டு என்று சொல்வது ஒரு உதாரணம்.) மேட்டுக்குடியினரிடையே ’கார் சாவி மாற்றுதல்’ என்ற ஒரு கேளிக்கை உண்டு. எல்லோருடைய கார் சாவியையும் ஒன்றாகப் போட்டு யாருக்கு எந்த சாவி வருகிறதோ அதன் உரிமையாளரோடு உறவு கொள்ளச் செல்லுதல். இதை விட அதீதமான காட்சிகளெல்லாம் Eyes Wide Shut படத்தில் உண்டு. இதெல்லாம் சினிமா ரொம்ப சகஜம் என்று சுசித்ராவின் படங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் இதையெல்லாம் மீறி பலாத்காரம், மிரட்டல் போன்ற குற்றங்களெல்லாம் சர்வ சாதாரணமாக சினிமாத் துறையில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும், அந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஆணாதிக்க மனோபாவத்தையும் சுசித்ராவின் காணொளிகளிகளும் புகைப்படங்களும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.
எனக்கு இந்தப் படங்கள் எதுவும் ஆச்சரியத்தைத் தரவில்லை. ஏற்கனவே பல சினிமா உலகப் பெண்களிடமிருந்து இக்கதைகளைக் கேட்டிருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட ஒரு பிரபல நடிகரைப் பற்றி “சீக்கிரம் மாட்டுவார்” என்று சொன்னேன்.
சிம்பு பாடல் சம்பவத்தில் கொதித்து எழுந்த தமிழகம் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு: சாரு நிவேதிதா

தமிழைவிட மலையாள இலக்கிய உலகில் பிரசித்தமான சாரு நிவேதிதா, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆங்கில இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கிறார். தமிழ்க் கலாச்சாரத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்யவேண்டியது இப்போதைய அவசரமான தேவை என்று கருதும் சாரு, ஏஷியன் ஏஜ் ஆங்கில தினசரியில் மூன்று ஆண்டுகள் எழுதிய பின்னர் இப்போது, லண்டனிலிருந்து வெளிவரும் Art Review Asia என்ற பத்திரிகையில் Notes From Madras என்ற தொடரை எழுதி வருகிறார். தமிழில் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களும் பல கட்டுரைத் தொகுதிகளும் எழுதியிருக்கிறார்.
