நா. ரகுநாத்
இந்த ஆண்டு ஜூன் மாதம், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றி ஆய்வுக்கட்டுரை ஒன்று எழுதி வெளியிட்டது பல வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2011-2017 காலத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம், அரசின் அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதைவிட கிட்டத்தட்ட 2.5 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைவானதாக இருக்கக்கூடும் என்று அவர் கூறியதே அதற்குக் காரணம்.
அவர் சொல்வதில் உண்மை உள்ளது என்றால், 2011-2017 காலத்தில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக ஆண்டுக்கு 7 விழுக்காடு வேகத்தில் வளரவில்லை; வெறும் 4.5 விழுக்காடு வேகத்தில் மட்டுமே வளர்ந்ததா என்ற கேள்வி எழுந்தது. 2011-2017 காலம், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என இருவேறு அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் உள்ளடக்கியதே.
அவருடைய இந்த வாதத்தை அரசு தரப்பு மறுதலித்துப் பேசியது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த 2019 ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகளை மத்தியப் புள்ளியியல் நிறுவனம் (CSO) வெளியிட்டது. 2018 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 8.1 விழுக்காடு வேகத்தில் வளர்ந்த பொருளாதாரம், 2019 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5 விழுக்காடு வேகத்தில் மட்டுமே வளர்ந்தது. மேலும், அதற்கடுத்த 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமிழந்து 4.5 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதாவது, ஆறு காலாண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து சரிந்துகொண்டே வந்துள்ளது.
இந்த நிலையில், ஜோஷ் ஃபெல்மன் எனும் பொருளாதார ஆய்வாளரோடு இணைந்து இந்தியப் பொருளாதாரத்தைத் திறனாய்வு செய்து, மற்றோர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார் அரவிந்த் சுப்ரமணியன். “இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் சுணக்கம்: நடந்தது என்ன? இதிலிருந்து வெளிவருவது எப்படி?” எனும் அந்தக் கட்டுரை, இந்தியப் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது என்கிறது. எப்படிப்பட்ட நெருக்கடியில் இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்?
கவலையளிக்கும் பேரியல் பொருளாதாரக் குறியீடுகள்
ஒரு நாட்டின் பேரியல் பொருளாதாரம் (Macroeconomy) எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை முதலீடு, நாட்டின் மொத்த பொருள் உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதி-இறக்குமதி, பணவீக்கம், வரி வருவாய் போன்ற குறியீடுகளைக்கொண்டு நாம் தெரிந்துகொள்ளலாம். 2017-18 – 2019-20 (முதல் ஆறு மாதங்கள்) காலத்தில் இந்தியாவின் முக்கியப் பேரியல் பொருளாதாரக் குறியீடுகள் எந்த வேகத்தில் வளர்ந்துள்ளன என்பதை அட்டவணை 1 காட்டுகிறது.
அட்டவணை 1: பேரியல் பொருளாதாரக் குறியீடுகளின் வளர்ச்சி 2017-18 – 2019-20 (%)

பொருட்களை உற்பத்தி செய்யும் முதல் கருவிப்பொருட்களின் உற்பத்தி 4.3 விழுக்காடு குறைந்துள்ளது என்றால், புதிய முதலீடுகள் சரிந்துள்ளன என்று பொருள் கொள்ள வேண்டும். இதை, நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி வேறும் 1 விழுக்காடு வேகத்தில் வளர்ந்துள்ளது எனும் தகவலோடு சேர்த்துப்பார்க்கும்போது, மக்களிடம் பொருட்களுக்கான கிராக்கி சுணக்கம் (Slowdown) கண்டுள்ளது என்பது தெரிகிறது. தனிநபர் மற்றும் குடும்பங்கள் செய்யும் நுகர்வுச் செலவின் (Private Household Consumption Expenditure) வளர்ச்சியும் இறங்குமுகத்தில் இருப்பதை அரசின் புள்ளிவிவரங்களே நமக்குத் தெரிவிக்கின்றன. பெட்ரோல், டீசல் அல்லாத இறக்குமதி கடந்த மூன்றாண்டுகளில் கண்டுள்ள வீழ்ச்சி, மக்களின் நுகர்வு பெரிதளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது எனும் வாதத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நேரடி வரி வருவாயில் எந்த வளர்ச்சியும் இல்லாதது, பொருளாதாரத்தின் செயல்பாடு கவலைக்கிடமாக இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.
முப்பதாண்டுகளில் இல்லாத வீழ்ச்சி
இதற்குமுன் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் வேகமிழந்தது 1991-92 மற்றும் 2000-02 காலங்களில்தான். 2000-02 காலத்தில் பொருளாதாரம் பெரிதும் வேகமிழந்து இருந்தாலும், மேற்கண்ட குறியீடுகள் வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. தற்போது பொருளாதாரம் சந்திக்கும் நெருக்கடியை 1991-92இல் இந்தியப் பொருளாதாரம் இருந்த நிலையோடுதான் ஒப்பிடமுடியும் என்கிறார் அரவிந்த் சுப்ரமணியன்.
பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் வளர்ச்சி 1991-92இல் எந்தப் போக்கை வெளிப்படுத்தியதோ, அதே போக்கை 2019-20 நிதியாண்டின் முதற்பாதியில் நாம் காண முடிகிறது. பொருளாதாரம் எந்த வேகத்தில் வளர்கிறது என்பதற்கு மின்சார உற்பத்தி ஒரு சிறந்த பதிலி (Proxy) என்று கருதப்படுகிறது. 2019-20 ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மின்சார உற்பத்தி வெறும் 1.8 விழுக்காடு வேகத்தில் வளர்ந்தது. இது முப்பதாண்டுகளில் மின்சார உற்பத்தி கண்டிருக்கும் மிகக்குறைவான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
1991-92இல் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டபோது, இந்தியா பெரும் வெளிநாட்டுக் கடன் சிக்கலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது; அந்த நேரத்தில் நம்மிடம் மிகவும் சொற்பமான அளவில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தது. அந்த நேரத்தில் இந்தியாவுக்கு மேலும் கடன் கொடுக்கவும் எவரும் தயாராக இல்லை. அதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இன்று இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அப்படியென்றால், பொருளாதாரம் இந்த அளவுக்கு வேகமிழந்து நிற்பதற்கான காரணம் என்ன?
நிலைகுலைந்து நிற்கும் நிதித்துறை – நெருக்கடியின் ஆணிவேர்
2003-2008 காலத்தில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததால், இந்தியாவின் பெருமுதலாளிகள் சகட்டுமேனிக்கு பொதுத்துறை வங்கிகளிடம் மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கடன் வாங்கினர். அந்தப் பணத்தை சாலைகள், நெடுஞ்சாலைகள், எரிசக்தி, மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் என உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் முதலீடு செய்தனர்.
ஆனால், 2009-க்குப் பிறகு, வட்டி விகிதம் உயர்ந்ததாலும், அரசின் கொள்கை முடிவுகள் பலவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டதாலும், உலகப் பொருளாதார சூழலில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட்டதாலும் பல திட்டங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர அரசின் அனுமதியும், வங்கியிலிருந்து கடனும் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பெருமுதலாளிகள் கடனைத் திருப்பித்தர முடியாத நிலைக்கு வந்தனர். பொதுத் துறை, தனியார் வங்கிகளின் செயல்படாத சொத்துகளின் (NPA) பங்கு வேகமாக வளர்ந்தது. சிலர் வேண்டுமென்றே மோசடி செய்தது தனிக்கதை. செயல்படாத சொத்துகளைச் செயல்படவைக்க வங்கிகள் முயற்சி செய்தபோதும், அவற்றில் பல சொத்துகள் வாராக்கடன் (Bad Debts) ஆகிவிட்டன. கடன் வாங்கிய நிறுவனங்களின் இருப்புநிலைக் கணக்கில் (Balance Sheet), திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்தொகையின் அளவு அதிகரித்தது; கடன் கொடுத்த வங்கிகளின் இருப்புநிலைக் கணக்கில், திரும்பி வரவேண்டிய சொத்துகளின் அளவு அதிகரித்தது. அரவிந்த் சுப்ரமணியன் தலைமையில் தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2015-16 இதை இரட்டை இருப்புநிலைக் கணக்கு நெருக்கடி (Twin Balance Sheet Problem) என்றழைத்தது.
2017-18 நிதியாண்டின் முடிவில் வங்கிகள் வழங்கிய மொத்த கடன் தொகையில் செயல்படாத சொத்துகளின் பங்கு 11.5 விழுக்காடு. அது அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2019 செப்டம்பர் முடிவில் 9.5 விழுக்காடாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வங்கிகளின் மறுமுதலாக்கத்துக்கு (Recapitalization) கிட்டத்தட்ட ரூபாய் 3.5 லட்சம் கோடி அரசு வழங்கியுள்ளது. எல்லாம் நாம் செலுத்தும் வரிப்பணம்தான்! அதன் விளைவாக, இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட ரூபாய் 7.2 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ரூபாய் 9.2 லட்சம் கோடி மதிப்பிலான செயல்படாத சொத்துகள் வங்கிகளிடம் உள்ளன. இவை செயல்படும் சொத்துகளாக மாறுமா… இல்லை, இந்தத் தொகையில் ஒரு கணிசமான பகுதி வாராக்கடன் ஆகி தள்ளுபடி செய்யப்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
வங்கிகள் – NBFC – ரியல் எஸ்டேட் தொடர்பு
வாராக்கடன் பிரச்சினையைச் சரிசெய்யாமல் வங்கிகள் தொழில் முதலீடுகளுக்கும், நுகர்வுக்கும் முன்புபோல் கடன்கொடுக்கும் பணியைத் தொடர முடியாது. அதைத் தீர்க்கும் முயற்சியில் சிறிதளவு வெற்றி காணத் தொடங்கியவுடன் அடுத்த பிரச்சினை பூதாகரமாகக் கிளம்பியது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் (Non Banking Financial Companies – NBFC) இருப்புநிலைக் கணக்கில் அந்த நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் அதிகரித்தது; செயல்படாத சொத்துகளும் அதிகரித்தன. இந்த நிதி நிறுவனங்கள் மக்களிடம் டெபாசிட் பெறுவதில்லை; வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற மற்ற நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும்.
சென்ற ஆண்டு IL&FS எனும் மிகப்பெரிய NBFC திவாலாகும் நிலைக்கு வந்தது. அது பலருக்கும் பேரதிர்ச்சியைத் தந்தது. மற்ற நிதி நிறுவனங்களின் நிதிநிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைக் கடன் கொடுத்தவர்களும், அந்நிறுவனங்களின் செயல்பாட்டை மேற்பார்வை செய்து ஒழுங்குபடுத்த வேண்டிய ரிசர்வ் வங்கியும் ஆய்வு செய்யத் தொடங்கின. NBFCs வழங்கியுள்ள கடனில் பெரும்பகுதி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. கட்டப்பட்ட மனைகளை விற்க முடியாமல் அந்தத் துறை ஏற்கனவே நெருக்கடியில் இருந்தது. அந்தத் துறைக்கு பெரும்பாலும் வங்கிகள்தான் பெரியளவில் கடன் வழங்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்தத் துறைக்கு வழங்கப்பட்ட மொத்த கடனில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் பங்கு பெரிதும் வளர்ந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் முடிவில் ரியல் எஸ்டேட்டுக்கு வழங்கப்பட்டிருந்த ரூபாய் 5 லட்சம் கோடியில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கியது.
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனைகள் கட்டப்பட்டு, அந்த மனைகள் மற்றும் ஏற்கனவே விற்காமல் இருந்த மனைகளும் விற்கப்பட்டு, கடன் திருப்பிச் செலுத்தப்படும் என்ற நம்பிக்கையில் வழங்கப்பட்ட கடன்கள் திரும்பி வருமா என்ற கேள்வி எழத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் விற்கப்பட்ட மனைகளின் மதிப்பைவிட, கட்டிமுடிக்கப்பட்டு விற்காமல் இருந்த மனைகளின் பங்கு மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக இருந்ததே அதற்குக் காரணம். இந்த போக்கு தீவிரமடைவதைக் கண்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கொடுத்த கடனைத் திருப்பிப் பெற்றதோடு, புதிய கடனும் வழங்க மறுத்துவிட்டன. இந்த இடைவெளியை நிரப்ப வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்தன.
ஆனால், ரியல் எஸ்டேட்டில் நிலவும் தேக்கத்தால் அவர்கள் கொடுத்த கடனும் திரும்பி வராத பேராபத்து நிலையே நிலவிவருவதால், Twin Balance Sheet Problem என்பது, Four Balance Sheet Problem ஆகிவிட்டது; இதுவே இந்தியப் பொருளாதாரம் தற்போது சந்திக்கும் நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என்கிறார் அரவிந்த் சுப்ரமணியன். கொடுத்த கடன் திரும்பி வராதபோது நிதி நிறுவனங்கள் மேலும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கத் தொடங்கிவிடும். வாங்கிய கடனைத் திருப்பித்தர முடியாத நிலையில் நிறுவனங்கள் கடன் வாங்கி புதிய முதலீடுகளை மேற்கொள்ள முடியாது. இதனால் உற்பத்தியும், நுகர்வும் பெரிதும் பாதிக்கப்படும். அதன் விளைவே இந்த சுணக்கம்.
‘சீர்திருத்தம்’ ஏற்படுத்திய நெருக்கடி
நிதித்துறை – வங்கிகள் + வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் – சந்திக்கும் இந்த நெருக்கடியைச் சரி செய்யாமல் பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவருவது எனபது இயலாத காரியம். பொருளாதார இயந்திரம் தொடர்ந்து செயல்படுவதற்கு அவை வழங்கும் நிதி மிகவும் அவசியம். அந்த நிதியின் ஓட்டம் தேங்கிவிட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும். ‘சீர்திருத்தம்’ என்ற பெயரில் நாம் கடந்த முப்பதாண்டுகளாகச் செய்துவந்த மாற்றங்கள்தாம் இன்று நிதித்துறை நெருக்கடியில் இருப்பதற்குக் காரணம்.
1990க்கு முன்பு நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குவதற்கும், தனியார் நிறுவனங்கள் தொழில் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் பெரும் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் தேவையான நிதி, ஆலோசனை வழங்கும் மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் (Development Finance Institutions) இருந்தன. அதுவே அந்நிறுவனங்களின் பிரத்யேகமான கடமையாக இருந்தது. ‘90களுக்கு பிறகு அவையெல்லாம் வணிக வங்கிகளாக (Commercial Banks) மாற்றப்பட்டன. பொருளாதாரத்தில் அரசு தனது இடையீடுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டின் விளைவாக, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித்தரும் பொறுப்புகளும் தனியாரிடமே வழங்கப்பட்டன. ஆனால், அதற்கான நிதியைப் பொதுத்துறை வங்கிகளிடம் பெற்றுக்கொள்ளலாம் எனும் PPP (Public-Private-Partnership) ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
நுகர்வு, சிறுதொழில்களுக்கு சில்லறைக் கடன் (Retail Loans) வழங்குவதே வணிக வங்கிகளின் வேலை. பல கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களில் ‘ரிஸ்க்’ அதிகம்; மேலும் அவை நிலையான வருவாய் ஈட்டத் தொடங்குவதற்கு சில வருடங்களாகும். இவற்றுக்குக் கடன் கொடுப்பது வணிக வங்கிகளின் வேலை அல்ல; அது மேம்பாட்டு நிதி நிறுவனங்களின் வேலை. ஆனால், அவற்றின் அடையாளங்களைத்தான் நாம் மாற்றிவிட்டோமே! அதன் விளைவாக, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தொழிற்துறைக்கும், உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கும் திட்டங்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த கடன்கள் வழங்கப்பட்ட காலத்தில் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. இந்த நேர்மறை வளர்ச்சிப்போக்கு தொடரும் என எதிர்பார்த்து வழங்கப்பட்ட பல கடன்கள் வாராக்கடனாக மாறிவிட்டன. விதைத்த வினையைத்தான் அறுத்துக்கொண்டிருக்கிறோம். இனியேனும் ‘சீர்திருத்தங்களை’ கவனத்தோடு செய்வோம்.
கட்டுரையாளர் குறிப்பு : நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com
