சிவா
சில நூறு கிலோமீட்டர்கள்; ஏழு மலைகள்; பல ஆயிரம் வாகனங்கள் என அனைத்தையும் கடந்து திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானைக் கும்பிட்டுக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து “இப்போது நீங்கள் இறந்துவிட்டதாகச் செய்தி அறிந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். “அந்த ஏழுமலையான் என்னை சொர்க்க வாசலைத் திறந்து அனுப்பிவிட்டான் என நினைத்துக்கொள்வேன்” என்று அவர் சொன்னார். இப்படியொரு கேள்வியும், பதிலும் சாத்தியமா என்பதே இக்கட்டுரையின் தேடல்.
தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற விளம்பரம் ஒன்று உள்ளது. அது, எவ்விதத் தாமதமும் இன்றி விரைவில் ஏழுமலையானை தரிசித்துவிட்டு வருவது. எண்ணிலடங்காத பணம் ஒவ்வொரு நாளும் குவியும் காரணத்தால், திருப்பதி கோயிலில் பாதுகாப்பு அம்சங்களும் பலமானவை. இதன் காரணத்தாலும், உலகெங்கிலுமுள்ள மக்கள் திருப்பதியை நோக்கி வருவலும் அவ்வப்போது திருப்பதி ஸ்தம்பித்துவிடுகிறது.
ஏழுமலையானைத் தரிசிக்க விரும்பும் மக்களின் முக்கியமான கேள்வி, எளிதில் அந்த செல்வக் கடவுளைப் பார்த்துவிட முடியாதா என்பதுதான். தொழில்நுட்பத்துடன் பின்னிப் பிணைந்துவிட்ட தலைமுறை, வழக்கம்போலவே தங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியான கூகிளாண்டவரை நாடும்போது மளமளவென வந்து கொட்டுகின்றன டிராவல்ஸ் நிறுவனங்கள் குறித்த தகவல்கள். அந்த நிறுவனங்கள் கொடுக்கும் உத்திரவாதம், ‘எங்களுடன் வாருங்கள். எளிதில் வெங்கடேச பெருமானின் அருளைப் பெறுங்கள்’ என்பதுதான். அப்படித் தேடக் கிடைக்கும் டிராவல்ஸ்களின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அறிய மின்னம்பலம் குழு நேரடியாகவே அவர்களுடன் பயணப்பட்டது.
**பயண நிறுவனங்கள் செல்லும் பாதை**
நான்கு பேருக்கு ஏழாயிரம் ரூபாய் என்ற கட்டணத்தில் காலை 5 மணிக்கு வீட்டிற்கே வந்து அழைத்துக்கொள்கிறார்கள். பயணம் தொடங்கிய முதல் ஒரு மணிநேரம் சீரான வேகத்தில் வாகனம் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் ஆவடி-திருவள்ளூர்-அரக்கோணம்-திருத்தணி-நகரி-புட்டூர் சாலையை வழக்கமானதாக தேர்ந்தெடுக்கும் இந்த டிராவல்ஸ்கள், ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 வண்டிகளை உறுதி செய்கின்றன.
முதல் ஒரு மணி நேரத்துக்குள் மேற்குறிப்பிட்ட சாலையில் அரசியல்வாதியின் கேன்வாய் போல வரிசையாகச் செல்லும் வாகனங்கள், திருவள்ளூரில் காலை காஃபி அருந்திய பின் அவற்றை இயக்குபவரின் திறனுக்கேற்பப் பறக்கின்றன. கீழ் திருப்பதி எனும் அலமேலு மங்கா அம்மனை தரிசித்ததும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அடுத்து மலை மீதேறி ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிடுகிறார்கள். அப்போது தான் நம்மிடம் ஒரு காகிதத்தினை வழங்கி, குறிப்பிட்ட இடத்தில் சீரியல் என் பெற்றுவரச் சொல்கிறார்கள். அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்று பார்த்தால்…
அதிகாலை வீட்டிலிருந்து கிளம்பிய நீங்கள், முந்தைய நாளே சென்னையிலிருந்து பேருந்து மூலம் ஆந்திரா சென்று அங்கிருந்து திருப்பதி மலையேறி உங்களது பெயரைப் பதிவுசெய்தது போலவும், உங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறப்பு கவுண்டரில் அப்பாயின்மெண்ட் புக் செய்திருப்பதும் தெரியவரும். சீரியல் எண் கொடுத்த சில நிமிடங்களில், லட்டு வாங்குவதற்கான டோக்கனும், அனுமதிச் சீட்டும் தேவஸ்தானத்தின் சார்பில் வழங்கப்படும். அங்கிருந்து கோவில் நுழைவுவாயிலுக்குச் சென்றால், உங்கள்து அடையாளத்தை ஆதார் கார்டின் மூலம் உறுதி செய்துவிட்டு உள்ளே அனுப்புவார்கள்.
**வேண்டுதலுக்கு நேரமில்லை**
அங்கு நடைபெறும் பரிசோதனையில் பெண்கள் தலையில் வைத்திருக்கும் பூ முதற்கொண்டு ஆண்களின் அரைஞாண் கயிறு வரை சந்தேகமாகப் பார்க்கப்படும். தேவையென்றால் நீக்கப்படவும் சொல்லலாம். பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டு செல்லும் நீர், உணவுப் பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும். இவை எல்லாவற்றையும் தாண்டி ஏழுமலையானை நேருக்கு நேர் பார்க்கும்போது, ‘ஏழுமலையானே!…’ என நெக்குருகும் சமயத்தில் கருவறைக்கு எதிரிலிருந்து அகற்றப்படுவோம். இன்னும் வேண்டுதலைச் சொல்லவே தொடங்கவில்லை என்பதை உணர்வதற்குள்ளாக ‘ஜருகண்டி ஜருகண்டி! கோவிந்தா கோவிந்தா’ என்ற அலறல்களுக்கிடையே நீங்கள் கோவில் உள்சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பீர்கள்.
லட்டு வாங்குவது இதைவிட அநியாயம் என்றாலும், அது இந்தக் கட்டுரைக்குத் தேவையானதல்ல. வழக்கமான வழிபாட்டிலிருந்து, இந்த டிராவல்ஸ் நிறுவனங்களின் மூலம் நடைபெறும் வழிபாட்டில் இருக்கும் ஒரே மாற்றம்….
**யார் அந்தப் புண்ணியவான்?**
இல்லாத பேருந்தில், பதிவு செய்யப்படாத டிக்கெட்டில் (ஒருவேளை பதிவு செய்யப்பட்டிருந்தால்) கலந்துகொள்ளாத பயணத்தில், நீங்கள் இல்லாத இடத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அந்த ஒரு பொய் மட்டும்தான்.
ஒருவேளை உங்கள் பெயரில் புக் செய்யப்பட்டிருந்த பேருந்து விபத்திற்குள்ளாகியிருந்தால், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர், நீங்கள் ஊருக்குத் திரும்பும்போது தயாராக இருக்கும். அப்படி இல்லையென்றால், உங்கள் ஆதார் கார்டு மூலம் புக் செய்யப்பட்ட பேருந்து டிக்கெட்டில் பயணித்த அந்த நபரினால் ஏற்படும் பின்விளைவுகள் காத்திருக்கும். அந்த நபர், திருட்டுத்தனமாக மாநிலம் பெயர நினைத்த தீவிரவாதியாகவோ அல்லது கொலை செய்து தப்பித்த கொலைகாரனாகவோ, வங்கியில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்றுகொண்டிருக்கும் தொழிலதிபராகவோ இருக்கலாம். ஆனால், அவர் யார் என்று யாருக்கும் தெரியாது. அதிமுகவில் இருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல் யார் என்பதுகூடத் தெரிந்துவிடலாம். ஆனால், இதில் அப்படியொரு வாய்ப்பே இல்லை.
திருப்பதி தேவஸ்தானத்திற்குத் தெரியாமல் இது நடைபெறுவதாகச் சொல்லிவிட முடியாது. திருப்பதியில் கால் வைத்ததிலிருந்து, வெளியேறும் நிமிடம் வரை நடைபெறும் அத்தனை பரிசோதனைகளிலும் நம்மை அழைத்துச் செல்பவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். மக்கள் கூட்டம் இயங்கும் அலைவரிசை அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. ஒரு பயணியாக மாறி இடங்களைத் தேடிச் செல்லும் சுவை வேண்டுபவர்களுக்கு இந்தப்பயணம் இனிக்காது. அடுத்தடுத்த நிமிடங்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். எந்த நேரத்துக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு திட்டமிடப்பட்டிருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் காதுகளில் விழும் சொற்களைக் கேட்டு அதன்படி நடந்துகொள்வதுதான்.
செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து, வாழ்க்கையில் வெளிச்சம் பெறுவதற்காக தெய்வங்களைத் தேடிச் செல்வதாகச் சொல்வார்கள். அப்படியான நிலையில், இவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டு தெய்வத்தைச் சென்று பார்ப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை யோசிக்க முடியாத வகையில் வெங்கடாஜலபதியைக் காண வரும் மக்கள் கூட்டத்தின் அழுத்தம் மற்றவர்களை மாற்றியிருக்கிறது. இதனால் ஒரு பிரச்சினை எழுந்து, அதனால் ஒரு அலை எழும்பும் வரை இது போன்ற குற்றங்கள் யாராலும் கண்டுகொள்ளப்படாது என்பதுதானே இந்திய யதார்த்தம்!
