சிறப்புக் கட்டுரை: தள்ளிவைக்கப்பட்ட தலைவிதித் தத்துவம்

Published On:

| By Balaji

அ. குமரேசன்

“கடவுள் வந்து காப்பாத்துவாராவது! கவர்ன்மென்ட் சொல்றதைக் கேட்டு நடந்தா பொழச்சுக்கலாம்.” – தற்போதைய கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் தீவிர இறைநம்பிக்கை உள்ளவர்களே இப்படிப் பேசிக்கொள்கிறார்கள். பலர் தங்களுடைய கைப்பேசித் திரையில் “யாமிருக்கப் பயமேன்”, “இறைவன் மிகப்பெரியவன்”, “ஒப்படைத்துக்கொள்வோர்க்கு அடைக்கலம்” என்ற வாசகங்களையும், சம்பந்தப்பட்ட கடவுள் படங்களையும் வைத்திருக்கிறார்கள். அவர்களிலும் ஆகப்பெரும்பாலானவர்கள் அறிவியலாளர்களும் மருத்துவர்களும் வல்லுநர்களும் கூறிய ஆலோசனைப்படி அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஊரடங்கு, சமூக விலகல் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இயங்குகிறார்கள்.

ADVERTISEMENT

இதன் பொருள் கடவுள் நம்பிக்கை காலாவதியாகிவிட்டது என்பதல்ல. இயல்புநிலை மீண்டபின் கொரோனாவிலிருந்து “காப்பாற்றியதற்காக” என்றே எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும், மக்கள் கூட்டமாய்த் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதற்குச் சற்றும் குறையாத இன்னொரு நம்பிக்கைதான் “ஊழ்” என்றும், “தலையெழுத்து” என்றும் சொல்லப்படுகிற “விதி”. கொரோனாப் போராட்டத்தைக் கடவுளிடம் விட முடியாதவர்கள் கூட, எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்று நம்பக்கூடும். அன்றாட வாழ்க்கையில் “விதி வலியது” என்றோ, “இப்படி நடக்கணும்னு எழுதியிருக்கே” என்றோ பேசி ஆறுதலடைவது எங்கும் காணக்கூடியது.

ADVERTISEMENT

பொதுவாக எதிர்பாரா மரணம், தொழிலில் பேரிழப்பு, இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் துயரம், விபத்தால் விளையும் நெடுங்கால வலி போன்ற துன்பியல் சூழல்களில்தான் இந்த விதி நம்பிக்கை வெளிப்படுகிறது. வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் விதியோடு முடிச்சுப் போடுவது குறைவு. “நேரம் நல்லா இருந்துச்சு, அதனால உயரத்துக்குப் போயிட்டாங்க” என்று சொல்லப்படுவதுண்டு என்றாலும், பெரும்பாலும் உழைப்பு, புத்திசாலித்தனம் போன்ற காரணங்கள்தான் கூறப்படும்.

கொரோனா ஊரடங்குக் காலத்தில் எளிய மக்கள் விதியை வெல்ல முடியாது என்ற போதனையைத் தூக்கி எறிந்திருக்கிறார்கள். அரசாங்க விதிகளும் தங்களைக் காப்பாற்ற வரவில்லை, அதிகார எந்திரத்தின் பார்வை தங்களின் பக்கம் கடைசியாகத்தான் திரும்பும் என்று புரிந்துகொண்டவர்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் எல்லா மாநிலங்களிலிருந்தும் தங்கள் சொந்த ஊருக்குக் கால்நடையாகவே புறப்பட்டார்களே… விதிவசமென்று கிடந்திருந்தால் வீதியைக்கூட அவர்களால் தாண்டியிருக்க முடியாதே?

ADVERTISEMENT

விவாதிக்க ஒரு கட்டுரை

இது தொடர்பாக ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகிறார் பேராசிரியர் ராஜீவ் பார்கவா. [வளரும் சமுதாயங்கள் ஆய்வு மையம் (சிஎஸ்டீஎஸ்), புது தில்லி]. அவர் எழுதியுள்ள “தலைவிதிவாதத்தின் மரணம்” என்ற கட்டுரை (தி ஹிண்டு, மே 14) ஏற்கத்தக்க வாதங்களையும், வினா எழுப்பத்தக்க கருத்துகளையும் முன்வைக்கிறது.

“பெருந்தொற்றுப் பேரிடரின் வருகையையொட்டி மக்களின் உணர்வோட்டத்தில் தலைவிதி நம்பிக்கை பெருகும் என்பதாகத் தோன்றுகிறது. பிறப்பு, திருமணம், தொழில், வாழ்க்கையின் அனைத்து அனுபவங்கள், இறப்பு என எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டபடியே நிகழ்கின்றன என்ற ‘கர்மா’ சிந்தனை ஊறிய மண்ணில் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்” என்ற கேள்வியை முன்வைக்கிறார் பேராசிரியர்.

“ஆனால் அதற்கான ஆதாரம் அரிதிலும் அரிதானதாகவே இருக்கிறது. விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட, முன்கூட்டியே கணிக்க முடியாத ஒரு சக்தி மனிதர்களின் மேல் அவர்களின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்படுகிறது, மனிதச் செயல்பாட்டை எள்ளி நகையாடுகிறது, அவர்களை அவமதிக்கிறது என்றெல்லாம் கருதி எளிய மக்கள் தங்களின் விதியிடம் சரணடைந்துவிட்டதாக என்னால் காண முடியவில்லை. மாறாக அவர்கள் அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும், மருத்துவர்களும் செவிலியர்களும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும், அறிவியலாளர்கள் ஒரு தீர்வைக் காண வேண்டும், சக குடிமக்கள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏழை மக்களும் தங்கள் விதியின் முன் தாழ்ந்து பணிந்துவிடவில்லை. அரசாங்கங்களால் கைவிடப்பட்ட நிலையில் பட்டினியால் செத்துப் போவதற்கில்லை என்று அவர்கள் பெரும் அபாய நிலைமைகளை எதிர்கொள்ளவும் வீடு திரும்பவும் தயாராக இருக்கிறார்கள்” என்று தொடர்கிறார்.

ஊழோடு தொடர்புள்ளவைதான் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற சொல்லாடல்களும். முற்போக்குச் சிந்தனையாளர்கள் கூட சில நேரங்களில் இந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சொற்பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சியின்மையும், தொன்றுதொட்டுத் தொடரும் பழக்கமும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எந்தவொரு நிகழ்வுக்கும் புறக்காரணிகள், அகக்காரணிகள், முந்தைய தொடர்ச்சிகள், பிந்தைய விளைவுகள் என்று இருக்கிறபோது அதற்கு அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் என்று அடையாளமிடுவது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? தமிழில் இது பற்றி யோசித்த பகுத்தறிவாளர்கள் தற்செயல் நிகழ்வுகளைக் குறிப்பிட அதிர்ஷ்டவசமாக என்றோ, துரதிர்ஷ்டவசமாக என்றோ சொல்லாமல், நல்வாய்ப்பாக என்றும் கெடுவாய்ப்பாக என்ற சொற்களைப் பயன்படுத்துவது கவனிக்கத்தக்கது, பின்பற்றத்தக்கது.

நெடியதொரு மரபு

பெருந்தொற்றுச் சவால் சூழலில் தலைவிதிவாதம் கிட்டத்தட்ட காணாமல் போனது நவீன காலத்திய வளர்ச்சிப்போக்கு அல்ல என்கிறார் ராஜீவ். வரலாற்று பூர்வமாகவே, இந்தியச் சிந்தனை மரபின் விரிவான பிரிவுகள் விதியைச் சார்ந்திராதவைதான், அவை மனிதச் செயல்பாட்டுக்கே முக்கிய இடமளிக்கின்றன எனக்கூறும் அவர், பல்வேறு பண்டைய நூல்களில் தலைவிதித் தத்துவம் இல்லை என்று தத்துவ ஆராய்ச்சியாளர் சுகுமாரி பட்டாச்சார்ஜி வாதிட்டிருப்பதை மேற்கோள் காட்டுகிறார்.

ரிக் வேதம், பிராமணங்கள், சம்ஹிதைகள், உபநிஷத்துகள், ஆரண்யகங்கள், பூர்வ மீமாம்சம் ஆகியவற்றில் தலைவிதி சித்தாந்தம் இல்லை என்று சுகுமாரி குறிப்பிட்டிருக்கிறார். புத்தர், மஹாவீர் ஆகியோரின் போதனைகளில் இடம்பெறும் முன்வினைப்பயன் பற்றிய சிந்தனைகள் நாத்திகவாதமாக அல்லாமல், மனிதச் செயல்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பவையாக இருக்கின்றன. விதிக் கருத்து இழையோடுகிறது என்றாலும், அந்த விதி பல்வேறு பிறவிகளில் மனிதர்களது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அமைகிறது என்று புத்தரும் மஹாவீரும் போதிப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

புராண இலக்கியங்களில் விதி, மனிதச் செயல்பாடு இரண்டுமே இணைந்து வருகின்றன. உலகத்தோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு, தவ வலிமையால் சூழலைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ‘பிராவ்ரித்தி’ ரிஷிகள், ஆன்மிக ஞானத்தால் சூழலிலிருந்து விடுபடலாம் என்ற துறவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ‘நிவ்ரித்தி’ ரிஷிகள் என இரண்டு வகை ரிஷிகள் இருந்ததை ‘மகாபாரதம்’ காட்டுகிறது. உலக வாழ்க்கை பற்றிய அணுகுமுறையில் இந்த இரண்டு வகையினருமே மாறுபடுகிறார்கள், ஆனால் விதியை வெல்ல முடியாது என்ற கருத்தை நிராகரிப்பதில் ஒன்றுபடுகிறார்கள் என்று சுகுமாரி சுட்டிக்காட்டுவது சுவையானது.

தலையெழுத்தும் குலசாமியும்

இந்திய நாட்டுப்புற இலக்கியங்களில், புதிதாக ஒரு குழந்தை பிறக்கிறபோது சாமி இறங்கிவந்து குழந்தையின் நெற்றியில் அதன் எதிர்காலத்தை எழுதிவிட்டுப் போவதாகக் கூறும் கதைகள் இருக்கின்றன. அதே வேளையில், கிராமத்துக் குலசாமி வழிபாடு, முன்னோர் வழிபாடு, சூனியம் போன்றவற்றால் – அதாவது மனித முயற்சியால் – அந்தத் தலையெழுத்தை மாற்றுகிற வழிகளையும் எளிய மக்கள் கையாண்டார்கள். குறிப்பாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் விதியின் வசம் வாழ்க்கையை ஒப்படைத்துவிடாமல் தங்கள் சுயமுயற்சியைச் சார்ந்திருந்தார்கள். தமிழ்நாட்டு தலித் மக்கள் விதியை வெல்ல முடியாது என்ற போதனையை எள்ளலோடு தள்ளுபடி செய்துவந்திருக்கிறார்கள் என்று கேத்லீன் கோஹ் உள்ளிட்ட மானுடவியல் வல்லுநர்கள் பதிவு செய்திருப்பதைக் கவனப்படுத்துகிறார் ராஜீவ். சாதிப் படியமைப்பில் தங்களை மேல் தட்டுகளில் வைத்துக்கொண்ட பிரிவுகளில் கூட, ஜாதகம் கணித்து நிகழ்ச்சிகளை முடிவு செய்வதில் இருப்பது ஏற்கெனவே எழுதப்பட்ட விதியின் தடத்திலிருந்து விலகலாம் என்ற விருப்பம்தான் என்கிறார் பேராசிரியர்.

ஆம், விதி ஒரு நம்பிக்கை என்றால், அதை மாற்றுவதற்கான இத்தகைய முயற்சிகளும் ஒரு நம்பிக்கைதான். இயற்கைச் சீற்றம், கொள்ளை நோய், விபத்து போன்றவை ஏன் நிகழ்கின்றன என்ற புதிருக்கு விடை கிடைக்காத நிலையில், அதற்கெல்லாம் விதியைக் காரணமாக்குவது வசதியாக இருந்திருக்கிறது. அதே வேளையில் விதியை ஒன்றும் செய்ய முடியாது என்று மனித முயற்சியைக் கைவிட்டுவிட்டால் மனித இனமே அற்றுப்போய்விடும் என்ற எச்சரிக்கையும் இருந்திருக்கிறது. சமுதாய வரலாற்றில் இந்த இரண்டும் இணைந்தே பயணித்து வந்திருக்கின்றன.

ஆகவேதான் இங்கே காலங்காலமாகத் தலைவிதித் தத்துவங்கள் பரவியது போலவே, பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புவதற்குமான வெளிகளும் இருந்து வந்திருக்கின்றன. பகுத்தறிவு என்று சொல்கிறபோது இன்றைய வளர்ச்சியடைந்த பொருளில் எடுத்துக்கொண்டு அன்றைய இந்த முயற்சிகளை “இதுவெல்லாம் பகுத்தறிவா” என்று தள்ள வேண்டியதில்லை. விரிவாக யோசிக்கிறபோது, சுதந்திர இந்தியாவின் அரசமைப்பு சாசன முன்னுரையில், குடிமக்களின் கடமைகளில் ஒன்றாக “அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்” என்று கூறப்பட்டுள்ளதே, அதற்குரிய முன்னெடுப்புகளுக்கான விதைகளை இந்தத் தொடர்ச்சியிலிருந்தும் எடுத்துக்கொள்வது பயனளிக்கும் என்ற சிந்தனை ஏற்படுகிறது. அது இயக்கவியல், வரலாற்றியல் ஆகிய இரண்டு பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களோடும் பொருந்துவதாக இருக்கும்.

உலக அளவிலான தத்துவ/வரலாற்று ஆராய்ச்சிப் பதிவுகளை நாடினால், மற்ற பல சமுதாயங்களிலும் இத்தகைய தடங்களைக் காண முடியும். வாழ்க்கை முறைகள் வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம், ஆனால் வாழ்க்கையின் புதிர்களும் இயற்கைப் பேரிடர்களும் எதிர்பாரா திருப்பங்களும் எங்கும் பொதுவான அனுபவங்கள்தானே?

நவீன உலகம் விதியை ஏற்க வேண்டுமா?

வினா எழுப்பத்தக்க சில கருத்துகளையும் ராஜீவ் பார்கவா முன்வைத்திருக்கிறார் என்று சொன்னேனல்லவா? அது பற்றிப் பார்ப்போம். எவ்வளவுக்கெவ்வளவு மனிதர்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு விதி பற்றிய கண்ணோட்டத்திற்கான இடம் சுருங்கிப்போகும், எந்த அளவுக்கு உலகம் புரிந்துகொள்ளப்படுகிறதோ அந்த அளவுக்கு அது புதிரற்றதாகிவிடும் என்று கூறுகிற அவர், “ஆனால் மனிதர்கள் எதுவுமே செய்ய முடியாதவர்களாக உணரும் தருணங்களும் இருக்கின்றன” என்கிறார். யுத்தங்கள், இயற்கைப் பேரழிவுகள், சமூகக் கொந்தளிப்புகள், தனிப்பட்ட கெடுவாய்ப்புகள் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

“கடுமையான பாதிப்புகளுக்கு இலக்காகக்கூடிய, கட்டுப்படுத்துகிற வாய்ப்புக்கு அப்பால் போய்விட்ட நிகழ்வுகளின்போது, அறிவார்த்தமாகப் புரிந்துகொள்ள முடியாத சூழல்களின்போது, எளிய மக்கள் தங்களின் நடைமுறை அனுபவ உணர்வோடு, விதி போன்ற கருத்துகளைச் சார்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களின் நிலைமைகள் முன் பணிந்துபோகிறார்கள், சரணடைகிறார்கள் – ‘நடப்பது நடக்கட்டும்’, ‘எனக்கு விதிக்கப்பட்டிருப்பது இதுதான்’ என நிலைமைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று கூறுகிறார்.

ஓரிடத்தில் “நவீன உலகக் கண்ணோட்டங்கள் கூட விதித் தத்துவத்தை இணைத்துக்கொள்ள வேண்டும்” என்றே கூறுகிற பேராசிரியர், “தனிமனிதர்களும் சமூகங்களும், ஏன் மனித இனமே கூட, என்ன தரப்பட்டிருக்கிறது, எந்த அளவுக்கு அதை மாற்ற முடியும் என்ற மெய்நிலைக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட ஏதோவொன்று என்ற கருத்தியலை முற்றிலுமாகக் கைவிடுவது சாத்தியமில்லை. அதேபோல் தன் செயல்களுக்கு ஓரளவு பொறுப்பேற்பது என்பதையும் கைவிடுவது சாத்தியமில்லை” என்கிறார். வாழ்க்கையில் ஏற்படும் விபத்துகள், தற்செயல்கள், நோய்கள், பேரிடர்கள், திடீர்த் துக்கங்கள் போன்ற வெறும் தற்செயல் நிகழ்வு நமது கட்டுப்பாட்டை மீறுகிற ஓர் அடிப்படைக்கூறாக இருக்கிறது. இவையனைத்துமாக மனிதச் செயல்பாட்டை மீறுகின்றன, மிகச்சிறந்த திட்டங்களையும் முறியடிக்கின்றன. இவை நம்மை விதிக் கோட்பாட்டை முற்றிலுமாகச் சார்ந்திருக்கக் கட்டாயப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு வருகிறார்.

ஒட்டுமொத்த மனித சமுதாயமும் உலகத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட நாள் வருகிற வரையில் தலைவிதித் தத்துவங்கள் நீடிக்கவே செய்யும் என்று மதிப்பிடுவது வேறு, ஆனால் நவீன உலகக் கண்ணோட்டமும் விதிக் கோட்பாட்டை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவது வேறு. முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத இயற்கை உண்மைகள் நிறைய இருக்கின்றன என்பதாலேயே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஏதோவொன்றால் எல்லாம் நிகழ்வதாக முடிவுக்கு வரலாமா? அது ஒரு சமரச ஏற்பாடாக, இறுதியில் மனித முயற்சியைக் கைவிடுவதாக முடிந்துவிடுமே?

மனிதர்களின் பரிணாமம் உள்ளிட்ட இயற்கை உண்மைகள் மிகப் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை என்பதால்தான் இனப்பாகுபாடுகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், மதப்பகைமைகள், எல்லைத் தகராறுகள் என்று இப்போதும் தொடர்கின்றன. இயற்கைப் பேரிடரை விடக்கொடுமையான காட்சிகள் அரங்கேறுகின்றன. அதையெல்லாம் நியாயப்படுத்துவதில் விதிக் கோட்பாடு உடந்தையாக இருக்கிறது. ஆகவே இயற்கையின் ரகசியங்களைப் புரிந்துகொள்கிற பரவச அனுபவத்தை ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்துகிற மானுட இயக்கம்தான் வலுப்பெற வேண்டும்.

“தெளிவான விளக்கங்களோடு ஏற்படும் சிறந்த புரிதலைக் கொண்டும், எதைக் கட்டுப்படுத்தலாம் எதைக் கட்டுப்படுத்தக் கூடாது என முறையாக மதிப்பிடுவதன் மூலம் எதைக் கட்டுப்படுத்த முடியும், எதைக் கட்டுப்படுத்த முடியாது என்ற ஞானத்தைக் கொண்டும் தலைவிதித் தத்துவங்களின் தாக்கத்தைக் குறைக்க முடியும்” என்று சரியாகவே முடிக்கிறார் பேராசிரியர். இயற்கையைப் புரிந்துகொள்வது என்பதே எதைக் கட்டுப்படுத்த முடியும், எதைக் கட்டுப்படுத்த முடியாது என்ற அறிவும் இணைந்ததுதான். மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாததை இயற்கையின் இயக்க வழி எனப் புரிந்துகொண்டால், இயற்கைக்கு அப்பாற்பட்ட விதி என்ற மருட்சியிலிருந்து விடுதலை உறுதி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share