சிறப்புக் கட்டுரை: தரம், திறன், தற்கொலை- உயர்கல்வி உலகில் நிகழ்வது என்ன?

Published On:

| By Balaji

ராஜன் குறை

ஒரு வீட்டில் சமையலறையில்காஸ் கசிகிறது. அறை முழுவதும் பரவுகிறது. அதுவாக எதையும் செய்யாது. உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் நீங்கள் அந்த வாசனையை உணர்ந்து ஓடிச்சென்று இணைப்பைத் துண்டித்து கசிவைத் தடுப்பீர்கள். இல்லாவிட்டால் கவனக்குறைவாக சிறு பொறி நெருப்பையேனும் தூண்டினால் அது பெரிதாகப்பற்றிக்கொள்ளும்.பெருவெடிப்பே நிகழலாம்..

ADVERTISEMENT

பல சந்தர்ப்பங்களில் தற்கொலைகள் மன அழுத்தம் அதிகரித்த நிலையில் ஏதோவொரு சிறுபொறி வெடிப்பாக மாறித்தான் நிகழ்கின்றன. உயர்கல்விப் புலத்திலும் பொதுவாகவே மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் அங்கே நெருப்புப் பொறியாக மாறுவது சமூக ஏற்றத்தாழ்வு, ஜாதி மதஅடையாளம் சார்ந்த பிரச்சினைகளாக இருப்பதுதான் கவலைக்குரியது.

எரிவாயுக் கசிவு ஏற்படுவதை எப்படித் தடுப்பது என்று ஆராய்வதும் அவசியம்; அதே சமயம் அந்த கசிவு இருக்கிறது என்று அறியும் நாம் சிறு நெருப்புப்பொறியும் தோன்றாமல் பார்த்துக்கொள்வது அதைவிட அவசியம்.

ADVERTISEMENT

பொதுவாக அழுத்தம் நிகழ்வதை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட வழக்கில் தவறு செய்தவர்களை காப்பாற்ற நினைப்பது மிகப்பெரிய மோசடி. சென்னை ஐ.ஐ.டிபாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை முறையாக நடத்தப்பெற்று அவர் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

பொதுவான உயர்கல்விச் சூழல் மன அழுத்தம் என்பது என்ன?

எதிர்காலம் சார்ந்த பதட்டம், தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்ற நிச்சயமின்மை இன்றைய இளைய தலைமுறையில் அதிகமாக இருக்கிறது. அவர்களை சுற்றிலும் ஏற்பட்டுள்ள விழுமியங்களின் சரிவு அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளும், குற்றச்செயல்பாடுகளும் செய்திகளை நிரப்புகின்றன. பொருளாதாரம் மிகப்பெரிய அச்சமூட்டும்களமாக இருக்கிறது. தொழிலதிபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சரி விளையாட்டையாவது பார்க்கலாம் என்றால் அதிலும் அணி தேர்வு செய்வதில் அரசியல், போதைப்பொருள் பயன்பாடு, பெட்டிங், மாட்ச்ஃபிக்ஸிங் என்று விளையாட்டே குற்றச்செயல்களின் களமாக இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் முன்னெப்போதையும் விட தான் ஒரு தனி நபர் என்றும், தன்னுடைய தேர்வுகள் சார்ந்து தான் இயங்க வேண்டும் என்றும் இளம் வயதினருக்குத் தோன்றுகிறது. முன் காலம் போல இது பெற்றோருக்கு தெரியாமல் செயல்படுவது என்ற அளவில்கூட இல்லை. தன் வாழ்க்கையையே தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அப்படி செய்வதற்கான சிந்தனைத்தெளிவோ, இலட்சியங்களை கைக்கொள்வதோ சாத்தியமாக இருப்பதில்லை. போதைப் பொருட்கள் அன்றேல் காதல் போன்றவையே உடனடி சாத்தியங்களாக இருக்கின்றன. அவை இரண்டுமே பல்வேறு நிச்சயமின்மையை, பதட்டத்தை உருவாக்குவதாகவே இருக்கின்றன. காதலோ, எதிர்பால் ஈர்ப்போ சினிமாவில் வருவதுபோல சுலபமாக இல்லை. மிகுந்த மனக்குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பெரும்பாலோர் தாழ்வுணர்ச்சி கொள்வதும், தனிமைப்படுவதும் சாதாரணமாக இருக்கிறது.

இதையெல்லாம் பொதுமைப்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஒரு சில முக்கிய அம்சங்களை புரிந்துகொள்வதற்காகவே சொல்ல வேண்டியிருக்கிறது. சமூகத்தின் பொதுவான அறவீழ்ச்சி இளைஞர்களை பாதிக்காது என்று நாம் கண்ணை மூடிக்கொள்ள முடியாது. சில சமயம் அவர்கள் நம்பிக்கையைப் பெற்று நெருக்கமாக உரையாடும்போது அவர்களின் நிராசைக்கூற்றுகள் தீயெனச்சுடுகின்றன. என்னுடைய இளமையில் நானும் அவநம்பிக்கையில்தான் வாழ்ந்தேன். உலகே மாயம், வாழ்வே மாயம் என்றுதான் இருந்தேன். ஆனால் இன்றுள்ள இளைஞர்களுடன் ஒப்பிடும்போது எனக்கு கொஞ்சம் அப்பாவித்தனம் அல்லது இன்னொசென்ஸ் சாத்தியமாக இருந்ததாகவே தோன்றுகிறது. குறைந்தபட்சம் மாட்ச்ஃபிக்ஸிங் சந்தேகம் இல்லாமல் கிரிக்கெட்டாவது ரசிக்க முடிந்தது.

சமூக ஏற்றத்தாழ்வு என்ற நெருப்புப் பொறிகள்

உயர்கல்விச் சூழலின் தனித்துவமான அம்சம் மாணவர்கள் தங்களை தனிநபர்களாக உணர்ந்த பிறகு அதில் ஈடுபடுவதுதான். எனவே பள்ளிகளைப் போலவோ அல்லது இளங்கலை படிப்பு போலவோ அவர்களால் சுலபமாக தங்கள் போதாமை போன்று தோன்றக் கூடியவற்றை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களது சுயமரியாதைக்கான உணர்வுகள் மிகவும் கூர்மைப்படுகின்றன. பதினெட்டு வயதில் அவர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். அந்த வயதில் கல்லூரிகளில் உயர்கல்வி நிமித்தமாக இருக்கும்போது அவர்கள் உணர்வுகள் சட்டென்று தீப்பிடிக்கும் சாத்தியத்துடனே இருக்கின்றன.

இந்திய சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் வகுப்பறையினுள் அமைதியாக உள்நுழைந்து வீற்றிருக்கின்றன. ஆனால் ஆசிரியர்களுக்கு அவற்றை எப்படிக் கையாள்வது என்பதில் எந்த பயிற்சியும் இருப்பதில்லை; பிரக்ஞையும் இருப்பதில்லை. அவர்களே பல சமயங்களில் பிற்போக்கு மனோபாவங்களுடன் இருக்கிறார்கள்.

பெரும்பாலோரிடம் கேட்டால் நான் எல்லா மாணவர்களையும் ஒன்றாகவே நினைப்பேன். யாரிடமும் வித்தியாசம் காட்டமாட்டேன் என்பார்கள். இதுதான் மிகப்பெரிய ஆபத்து. என் வகுப்பில் கட்டிடத் தொழிலாளியின் மகனும், புகழ்பெற்ற வழக்கறிஞரின் மகனும் இருந்தால் இருவரையும் நான் ஒன்றாக கருத முடியுமா? ஒருவருக்கு சாத்தியமாவது மற்றவருக்கு சாத்தியம் ஆகுமா? இந்த வித்தியாசத்தை நான் என் அணுகுமுறையில் சமன் செய்ய வேண்டுமல்லவா? பலவீனமான பின்னணியிலிருந்து வருபவரின் தன்மதிப்பை பாதுகாக்க வேண்டுமல்லவா? அது பெரும்பாலும் நிகழ்வதில்லை.

பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டும் பிரச்சினையில்லை. அதைவிட பெரிய பிரச்சினை கலாசார மூலதனம். அதாவது குடும்பப்பின்னணியால் ஏற்படும் பொது அறிவு, சமூக ஆற்றல். ஒரு மாணவரின் தாயார் வங்கி அதிகாரி, தந்தை நீதிபதி, மாமா பேராசிரியர் என்று இருந்தால் அவரது குடும்பத்தில் எத்தனையோ விஷயங்கள் விவாதிக்கப்படும். அத்தகைய பின்புலம் இல்லாத எளிய குடும்பத்து மாணவருக்கு என்ன தெரிந்திருக்கும்? ஒரு குழந்தை தவழும் பருவத்திலே ஆங்கில செய்தித்தாளை கிழிக்கிறது, அதன் மேல் சிறுநீர் கழிக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அப்போதே அதற்கு ஆங்கில எழுத்துக்கள் பரிச்சயம் ஆகின்றன. செய்தித்தாளே வாங்காத வீட்டில் தவழும் குழந்தைக்கும், செய்தித்தாள்களின் மேல் தவழும் குழந்தைக்கும் அதன் புலன் அனுபவத்திலேயே வேறுபாடு தோன்றுகிறது.

ஒரு வகுப்பறையில் இப்படிப்பட்ட கலாசார மூலதன வேறுபாடுகளை எப்படி அணுகுவது என்பது குறித்து உயர்கல்விப்புலத்தில் ஆழமான சிந்தனைகள் எதுவும் இல்லை. பாமரத்தனமாகக் கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று சொல்வதைத் தவிர ஆசிரியர்களுக்கும் எதுவும் தெரிவதில்லை. பரியேறும் பெருமாள் படத்தில் வரும் கல்லூரி முதல்வரைப் போல அவரே பாதிக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்திருந்தால்தான் சற்றேனும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

தரம், திறன் குறித்த மயக்கங்கள்

அனைவருக்கும் தரமான கல்வியைத் தரவேண்டியது அவசியம்தான். ஆனால் எப்படியாவது அது சார்ந்த திறன்களையெல்லாம் ஒருவருக்குள் திணித்துவிட வேண்டும் என்று நினைப்பது அருவருப்பானது. ஒரு மாணவரால் எந்த அளவு கல்வியை உட்செரிக்கமுடியுமோ அந்த அளவு எடுத்துக்கொண்டால் போதும் என்ற நிலையே இருக்க வேண்டும். அவரை பணியில் அமர்த்துபவர்கள்அவர்களுக்குத் தேவையான திறன் இருக்கிறதா என்று சோதித்து அமர்த்திக்கொள்ளட்டும். கல்வி நிறுவனம் அதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

நீங்கள் அறுபத்தி நான்கு உணவு வகைகளுடன் விருந்தளிக்கலாம். ஆனால் விருந்தாளி அவை அனைத்தையும் அருந்தி செரித்துக்காட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. அவரவருக்குத் தேவையானதை மட்டும் உண்டால் போதும் என்பதே நாகரீகம்.

மாணவர்கள் தாங்கள் திறன்களைபெற்றுவிட்டோம் என்று நிரூபிக்கச் சொல்லும் தேர்வு முறைகளால்தான் பெரும் அழுத்தம் உருவாகிறது. தொடர்ந்த தரமதிப்பீடும், அவை சார்ந்த உளவியல் பாதிப்புகளாலும் கல்விச் சூழல் என்பதே சித்திரவதைக்கூடமாக இருக்கிறது. இதை சரிசெய்ய பல இடங்களில் கல்வியை எளிமைப்படுத்துகிறோம் என்று பொருளற்றதாக மாற்றுகிறார்கள். அதாவது விருந்தாளிக்கு கஞ்சியும், ஊறுகாயும் தருகிறார்கள்.

கல்வியின் தரம் மிகச் சிறந்ததாகவும் அனைவருக்கும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும். பல்வேறு விதமான கற்கும் திறன் கொண்டவர்களும் அவர்களால் இயன்றதைக் கற்று பலனடையும்படி இருக்க வேண்டும். கல்வித்தேர்ச்சிக்கும் பணியமர்த்தலுக்கும் நேரடித் தொடர்பு தேவையற்றது.

அந்தக் காலத்தில் திருமணம் செய்துகொண்டு போகும் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளைப்பழகச் சொல்லி பிறந்த வீட்டிலேயே பெண்களை வாட்டி எடுப்பார்கள். அதைப்போல கல்வி நிறுவனத்திலேயே பணி புரிவதற்கானதிறன்களையெல்லாம் புகுத்துகிறோம் என்று மாணவர்களை வாட்டியெடுத்து கல்வியை பெரும் உளவியல் யுத்தமாக மாற்றுகிறார்கள்.

ஆசிரியரின் பொறுப்பு

இந்த நிலையில் மிகப்பெரிய கல்விச் சீர்திருத்தங்கள் நிகழாவிட்டாலும், ஆசிரியர்கள் தாங்கள் எரிவாயு கசியும் இடத்தில் இருப்பதை உணர்ந்து சிறு நெருப்புப்பொறியும் தோன்றாமல் பணியாற்றுவது அவசியம். தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களின் அங்கீகாரத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் இழைக்கும் சிறு அநீதியும் கூட அவர்கள் மனநிலையை முற்றிலும் குலைத்துவிடும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் சமூக அடையாளம் சார்ந்த எந்த ஒரு மன விலக்கம் ஆசிரியரிடம் இருந்தாலும் அது மாணவரின் உள்ளுணர்வுக்குத் தெரிந்துவிடும்.

ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்களை வளர்க்காவிட்டால் பெரிய பிரச்சினை எதுவுமில்லை. ஆனால் அவர்கள் உள்ளன்புடனும், உற்சாகத்துடனும் மாணவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படும்படி நடந்துகொள்வது மிக அவசியம். ஒரு மாணவரை உற்சாகப்படுத்த அதிகமான மதிப்பெண்களை வழங்கினால் சமூகம் சீர்குலைந்து போய்விடாது. ஆனால் ஒரு மாணவரின் உற்சாகத்தை, நம்பிக்கையை பாழாக்கினால் அதை சமூக விரோதச்செயலென்றே கருதவேண்டும்.

கல்வி வாழ்வை நோக்கி தூண்டுவதாக இருக்கவேண்டும் என்று எழுதினார் சிந்தனையாளர் அம்ஷன்குமார். அது ஒருபோதும் தற்கொலைக்கு இட்டுச் செல்லக் கூடாது. உயர்கல்விப்புலத்தில் நிகழும் ஒவ்வொரு தற்கொலையும் மானுட விழுமியங்களின் சவப்பெட்டியில் அறையப்படும் ஆணி என்றால் மிகையாகாது.

கட்டுரையாளர் குறிப்பு : ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share