ADVERTISEMENT

சிறப்புக் கட்டுரை: தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுப் புரட்சி!

Published On:

| By Balaji

பிரதாப் பாஸ்கரதாஸ்

சினிமா என்பது புரட்சிக்கான சரியான பாதை இல்லை என்றாலும், அது ஒரு கிளரக்கூடியக் கருவி. திரைப்படங்களில் எந்த ஒரு வகையிலும் உண்மைச் சூழல் காட்சிப்படுத்தப்படமாட்டாது அல்லது காட்சிப்படுத்த வாய்ப்பிருக்காது. குறைந்தபட்சம் உண்மைக்கு நெருக்கமான அல்லது ஏதோ ஒரு விடயத்தை மறைக்கும் உண்மைக்குப் புறம்பான, உண்மைக்கு அப்பாற்பட்ட படங்கள்தான் நாம் காண்பது. அப்படங்களை படங்களில் ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் பார்வையாளர்களிடத்திலும் அல்லது அவர்களைப் பழக்கப்படுத்திய விதத்திலும் தான் இருக்கிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஜனரஞ்சக சினிமா என்ற ஒரு வகை உள்ளது. கமெர்சியல் படங்கள் பார்த்து அலுத்துப்போன பார்வையாளர்களை இதுதான் புரட்சி சினிமா” எனச் சொல்ல வைத்தது இந்த வகைப் படங்கள்தான்.

ADVERTISEMENT

விவசாயிகளின் இன்னல்கள், நகர இடப்பெயர்வின் சோகங்கள், மெரிட் சீட் மேட்டிமை, ஊழல் நாட்டின் சாபக்கேடு போன்ற இந்த ஜனரஞ்சகப் படங்கள் “அ மற்றும் ஆ” சென்டர் பார்வையாளர்களை முகநூல் வழியே புரட்சியாளர்கள் ஆக்கிக்கொண்டிருக்கிறது. “அ மற்றும் ஆ” பார்வையாளர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் இம்மாதிரி படங்கள் எடுக்கப்பட்டாலும், இந்த புரட்சிப் படங்களில் காண்பிக்கப்படும் பிரச்சனைகள் என்பது பெரும் பிரச்சனையை மறைத்து பூசிமெழுகிய அரைவேக்காட்டுக் கருத்துக்கள் நிறைந்த படங்கள்தான்.

பெரும்பாலான இயக்குனர்கள் கிராமங்களிலிருந்து வந்தமையால் கிராமவியலை நேசிக்கும் அல்லது கிராமவியலை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யும் கதைகளை அதிகம் இயக்குகின்றனர். தமிழ் சினிமாவில், விவசாயத்தை பற்றி காட்டப்படும் படங்களான ஏழை விவசாயியின் சோகப் படங்கள், நகர வாழ்வை வெறுத்து கிராம வாழ்விற்கு திரும்புதல் போன்ற படங்கள், மேலும் தற்போது தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்ட் புரட்சியான ஐடி தொழிலை துறந்த இளைஞனின் இயற்கை விவசாயம் போன்றக் கருவுடைய படங்கள் ஏராளமாக வந்தது/வந்துக்கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான படங்கள் கூறும் நியதி ஒன்றுதான், அது நகரமயமாதலில் இருந்து மீண்டும் கிராம வாழ்வியலை மீட்டுருவாக்கமிடுதல் தான்.

ADVERTISEMENT

கிராமங்களை மீண்டும் பழைய சூழலுக்கு அமைக்க ஏங்கும் இம்மாதிரியான படங்கள் வரத்தின் காரணத்தை தெரிந்துகொள்ள நாம் இங்கே கிராம அமைப்பையும், எக்காரணங்களால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு சில மக்கள் மட்டும் இடப்பெயர்வாகின்றனர் என்பதையும் புரிந்துக்கொள்வது தேவை. யார் நிலம் உள்ளவர்கள், யார் அந்நிலங்களில் கூலிகளாக மட்டுமே வேலை செய்யும் நிலமற்ற கூலிகள் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டால் இம்மாதிரியான படங்களின் கருத்துக்குப் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.

விவசாயத்துக்கும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் நிலம் என்பதே கருவூலம். ஆனால் நிலம் என்பது அனைவருக்கும் பொதுவானதோ அல்லது எல்லோரிடத்திலுமோ இருந்ததில்லை. நிலமுள்ளவர்கள் விவசாயிகளாகவும் நிலமற்றவர்கள் விவசாய நிலங்களில் பணிபுரியும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர். கிராமங்களில் தலைவிரித்தாடும் சாதி ஆதிக்கமும், ஒடுக்குதலுடன் கூடிய குறைவான ஊதியமும் இந்த நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களை கிராமத்தை விட்டு வேறொரு வாழ்வாதார சூழலுக்கு இடம்பெயர வற்புறுத்துகிறது.

ADVERTISEMENT

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கா விட்டாலும் சாதி ஆதிக்கம் குறைந்த அல்லது தன் சாதியக்கீழ்மையை மறைத்துக் கொள்ளக்கூடிய இடமான நகர்ப்புற இடப்பெயர்வுக்கு மிகப்பெரும் காரணமாக இதுவே அமைகிறது(பெரும்பாலும் ஓரளவிற்கு ஊதியம் இல்லாவிட்டாலும் கட்டடங்களுக்கு கூலித் தொழிலாளர்களாக அமர்த்தப்படுகின்றனர்). இது ஒருபக்கம் நிகழும்பொழுது தமிழ் திரைப்படங்களானது நகரவியலை அழுக்காகவும், ஏமாற்றும் உலகமாகவும் காட்சிப்படுத்தி, கிராமங்களை அன்பும், தமிழர் கலாச்சாரமும் நிறைந்ததாகக் காட்டி, அழகான கிராம வாழ்வியலுக்கு மீண்டும் திரும்ப விழையும் கருத்துக்களை பார்வையாளர்களுக்கு உளவியல் ரீதியாக கடத்தப்படுகின்றன.

இம்மாதிரி படங்கள் சாதி ஆதிக்கமே உருவான கிராம அமைப்பை விவசாயம் என்ற உணர்ச்சிப்பூர்வ பிம்பத்தை வைத்து, கிராம சுற்றுசூழல் அழகியல் மூலம் கிராமங்கள் மீதான குறுகியப் பார்வையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நிலமற்ற, சாதியால் ஒடுக்கப்படும் மக்களின் துயரங்களை வெறும் விவசாயிகளின் கண்ணீர் காட்சிகள் மூலம் கிராம வாழ்வியலுக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றன. இப்படங்கள் மூலம் இவ்வியக்குனர்கள் கிராம கலாச்சாரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளக் கையாளும் மற்றுமொரு உத்தியான, பெண்களை கிராமக் கலாச்சாரமான அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க “கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெயரும் பெண் கதாபாத்திரங்களை நகரக் கலாச்சாரத்தால் சீரழிவது” போன்ற காட்சிகளை வைத்து பெண்களின் நவீனத்துவத்தை இம்மாதிரியான காட்சிகள் மூலம் மிரட்டி பயமுறுத்தி கிராம வாழ்க்கையிலிருந்து மீளாத வண்ணம் நிகழ்த்தப்படுகிறது. இதன்மூலம் நகரத்தைப் பற்றிய தவறான பார்வையை பொது சமூகத்தில் நிகழச் செய்து அதன்மூலம் மீண்டும் சாதியடுக்குகள் நிறைந்த கிராம வாழ்விற்கு இணைக்க முற்படத்துடிக்கின்றன சில படங்கள்.

தமிழ்சினிமாவில் அடுத்ததாக களமிறக்கப்பட்ட இன்னொரு அரைவேக்காட்டுத்தனம் என்றால் அது தமிழ் சினிமாவின் பாரம்பரியப் புரட்சிப் பட பாணியான ஊழல் ஒழிப்பு அரசியல் சினிமா தான். அரசியல்வாதிகளின் ஊழல் மட்டுமே நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக காட்டிவிட்டு நாட்டின் மிக முக்கிய பிரச்சினையான சமூக பிரச்சினைகளை காட்டாமல், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை. ஊழல், கருப்புப்பணம் மட்டுமே நாட்டை சீரழிக்கிறது என்று காட்சிப்படுத்தி, வேறெந்த சமூக பிரச்சனையையும் காட்டாமல் பார்வையாளர்களை மழுங்கச்செய்ததே இப்படங்கள் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த மாபெரும் அரைவேக்காட்டுப் புரட்சியாகும்.

அடுத்து தமிழ் சினிமாவில் அடிக்கடி பேசப்படும் ஒரு பெரும் அரைவேக்காட்டுத்தனம் தான் இந்த “மெரிட் சீட் கான்ஸெப்ட்”. “நான் மெரிட்ல வந்தவன்” என்று வசனம் பேசும் தமிழ் படங்களின் கதாபாத்திரங்கள் அனைத்தும் இட ஒதுக்கீட்டு முறையை சிறுமைப்படுத்த உருவாக்கப்பட்டவைதான். இம்மாதிரியான படங்களை இடஒதுக்கீட்டால் சில மக்கள் முன்னேற்றம் பெறுவது பிடிக்காத சில படைப்பாளிகளின் வயிற்றெரிச்சல் என்றே கூறமுடியும். இடஒதுக்கீடு முறையால் வாய்ப்பு பெற்றவர்களை சிறுமைப்படுத்தி, உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன இப்படங்கள். தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் அனைவருமே இடஒதுக்கீட்டால் மட்டுமே வாய்ப்பு பெறுபவர்கள் எனத் தெரிந்தும் இப்படங்கள் எதற்காக இடஒதுக்கீடு முறையை கீழ்மைப்படுத்துகிறது என்பதையம் இம்மாதிரி கருத்துக்கள் யார் படைக்கிறார்கள் என்பதையும் ஆராய்ந்தால் அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் நமக்கு புரியும்.

(சந்தைப் பொருளாதாரம், போட்டித்தகுதி மற்றும் இலவசங்கள் பெறுவதன் மேல் திணிக்கப்படும் தாழ்வுமனப்பான்மை)

“மெரிட் சீட் கான்ஸெப்ட்”-க்கு சற்றும் குறையாத மற்றுமொரு தமிழ் சினிமாவின் மூளைச்சலவைப் புரட்சி முயற்சிதான், அரசு இலவசங்களை தூக்கி உடைத்து “அது மக்களை சோம்பேறி ஆக்குகிறது” என்று வசனம் பேசி நம்மையே அதை நாசமாக்கச்செய்வது. இம்மாதிரி கருத்துக்கள் கொண்டப் படங்களை அரை வேக்காட்டுத்தனம் என்பதை விட நிச்சயம் இதை ஒரு பொறாமை மனநிலையாகவே மட்டுமே பார்க்க முடியும்.

சுமார் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் இன்று இலவச பொருட்கள் என இழிவுபடுத்தும் டிவி, மிக்ஸி, கிரைண்டரை எத்தனை வீடுகளில் பார்த்திருப்போம் என்பதையும், இன்று குக்கிராமம் முதல் பெருநகரம் வரையிலான அனைத்து வீடுகளிலும் இந்த அத்தியாவசிய பொருட்கள் இருப்பதையும் யோசித்துப் பார்த்தால் புரியும். எவரொருவரும் தன் வீட்டிலுள்ள வேலைப்பளுவை குறைத்தால் மட்டுமே வெளியில் சென்று தன் குடும்பத்திற்கானப் பொருளை சம்பாதிக்க முடியும். அந்த வகையில் அரசு வழங்கும் இந்த அத்தியாவசிய பொருட்களானது, அடித்தள மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தி அவர்களுக்கு உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. எனவே, இந்த அரசு இலவசங்களை எந்த அடித்தள மனிதரும் இழிவுபடுத்த வாய்ப்பில்லை.

அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படும் இப்பொருட்களின் மீதான கீழ்மைப்படுத்துதல் படிப்படியாய் மேல் வர்க்கத்திலிருந்து அடித்தள மக்களுக்கு கடத்தப்படுகின்றது. சந்தைப்பொருளாதார சூழலில் எந்த ஒரு பொருளையும் வசதி படைத்தவர்கள் வாங்கிக்கொள்ளலாம், ஆனால் அதே மாதிரியான விலைகொண்ட கொள்முதலை நடுத்தர வர்கத்தினரோ அல்லது அடித்தள வர்கத்தினரோ செய்ய வாய்ப்பில்லை. இங்கு தான் உளவியல் ரீதியாக வசதிப் படைத்தவர்களிடம் இருந்து நடுத்தர வர்கத்தினருக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மைக் கடத்தப்படுகின்றது. இந்த மனநிலையையே இவர்கள் தம்மிடம் மட்டும் வைக்காமல் அதை அடித்தள மக்கள் மீதான பார்வையாக கடத்திவிடுகின்றனர். (இலவச பொருட்களானது தனியார் சந்தை பொருளாதாரத்தை பாதிப்பதனாலும் இத்தகைய பார்வைகள் மக்களிடத்தே உருவாக்கப்பட்டு உலவுகின்றன) அடித்தள மக்கள் அதிகம் இருக்கும் நம் சமூகத்தில், ஒரு மேட்டிமை மனநிலை கொண்ட மனிதரால் மட்டுமே இம்மாதிரியான படைப்புகளை இயக்க முடியும். சமூகத்தில் வேற்றுமைகள் நிலைத்திருக்க வேண்டும் எனும் பார்வை கொண்ட படைப்பாளிகள் தான் இம்மாதிரியான பார்வைகளை மறைமுகமாக உளவியல் ரீதியாக சாமானிய மக்களுக்குக் கடத்துகின்றனர்.

உணர்ச்சிப் பொங்கும் பாடல்கள் மூலம், மயிர் சிலிர்க்க வைக்கும் இசையின் மூலம், பெரும் கதாநாயக பிம்பம் கொண்ட கதாபாத்திரங்கள் மூலம், ஏழை எளிய மக்கள் நிறைந்திருக்கும் இந்தத் தமிழ்ச் சமூகத்தில் மேல்தட்டு அதிகாரவர்க்க ஆதிக்கசாதி மனநிலைக் கொண்டப் பார்வையை, பொது சமூக பிரச்சனை போல் உளவியல் ரீதியாக மக்களை பிளவுபடுத்த முற்படும் இம்மாதிரியான திரைப்படங்கள் மூலம் மேலும் நிகழப்போவதும், புரிந்து கொண்டுக் கடப்பதும் நம்மைப் பொருத்தே.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share