சித்ரவதை என்பது வரலாற்றின் பக்கங்களில் நாம் ஒதுக்க முடியாத ஒரு பகுதி. பல்வேறு காலங்களில் பல்வேறு விதமான சித்ரவதை முறைகள் கையாளப்பட்டுள்ளன. இதில் ரோமானியர்களால் பல கட்டப் பரிசோதனைக்குப் பிறகு மெருகேற்றப்பட்ட ஒரு சித்ரவதை முறைதான் சிலுவையில் அறைதல். ஆம்… இயேசுவை மட்டுமல்லாது பல்லாயிரம் பேரை சித்ரவதைக்குள்ளாக்கியதுதான் இந்த முறை. ஒருவரை அணு அணுவாக சித்ரவதை செய்ய வேண்டுமென்றால் சிலுவையில் அறைதலைத் தவிர வேறு வழிமுறை கைக்கொடுக்காது. அப்படிப்பட்ட அந்த சித்ரவதையின்போது மனித உடல் படும் 10 அவதிகள் இதோ…
**1. மூச்சுத் திணறல்**

சிலுவையில் அறையப்பட்ட பின் ஒருவர் வலியாலும் ரத்தப்போக்காலும் சாவதைவிட மூச்சுத் திணறலால் சாவதற்கு சாத்தியங்கள் அதிகம். சிலுவையில் ஏற்றப்படுபவரின் உடல் எடை முழுவதும், கைகளின் மணிக்கட்டு மட்டுமே தாங்கும். இதனால் உடல் சற்றே கீழ்நோக்கி அழுந்தி, உதரவிதானத்தில் அழுத்தம் கொடுக்கும். இதனால் மூச்சு விடுவது சிரமமாகும். தண்டனைக்குள்ளானவர், பல மணி நேரம் முதல் சில நாள்கள் வரை மூச்சுத்திணறி இறப்பார்.
(source: https://www.theguardian.com/science/2004/apr/08/thisweekssciencequestions)
**2. தொடை எலும்புகள் உடைக்கப்படலாம்**

சிலுவையில் ஏற்றும்போது, கால்களில் ஆணி அடிப்பது சில சமயம் தண்டனையை நிறைவேற்றுபவருக்கு கடினமாக இருக்கும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தொடை எலும்புகளை உடைத்து, இழுத்து ஆணி அடிப்பார். இது பாதிக்கப்பட்டவருக்கு அதிகமான வலியைக் கொடுக்கும். தொடை எலும்பு முறிவு ஏற்படுவது மனிதனின் உடலில் ஏற்படும் அதிகபட்ச வலிகளுள் ஒன்றாகும். தொடை எலும்பு முறிவால் தன் உடல் எடையை சற்று தாங்கும் தன்மையும் அவருக்கு குறைந்துவிடும். எனவே மேலே கூறியபடி மூச்சுத்திணறல் ஏற்படும். ஆனால், நம் மூளை உயிர்ப்பித்து இருப்பதற்காகவே யோசிக்கும். மரணம் வேண்டும் என்று மனதளவில் நினைத்தாலும், அதை நம் மூளை ஏற்காமல் உயிர்வாழ பாடுபடும். இந்தப் போராட்டத்தில் ஏற்படும் வலி சொல்லி மாளாது.
(source link: http://answersfromthebook.net/why-did-they-break-the-legs-of-the-men-that-were-crucified-with-jesus/)
**3. ஆணிகள் நரம்புகள் மேல் உராயும்**

மணிக்கட்டிலும், கால்களிலும் அடிக்கப்பட்ட ஆணிகள் சில நரம்புகளை துண்டித்துவிடும். துண்டிக்கப்பட்ட நரம்பு தரும் வேதனையைவிட, அந்த ஆணிகளின் மேலே படும் நரம்புகள் தரும் வேதனை அதிகமாக இருக்கும். சிறு அசைவு ஏற்பட்டாலும், ஆணிகளின்மேல் நரம்புகள் உராய்ந்து வலி தரும். கைகளை வெட்டி, அந்த காயத்தின் வழியே கம்பிகள் செலுத்தினால் என்ன வலி இருக்குமோ அந்த அளவு வலி, அந்த சிறு உராய்வு தந்து விடும்.
(source link:http://www.catholiceducation.org/en/controversy/common-misconceptions/the-facts-of-crucifixion.html)
**4. கசையடிகள்**

ஒருவரை சிலுவையில் அறைந்த பின் அதோடு விடாமல், அவருக்கு ஒன்பது முனைகொண்ட சாட்டையால் அடிகள் விழும். அந்தச் சாட்டையின் ஒவ்வொரு முனையிலும் கொக்கி வடிவிலான எலும்புகளோ, இரும்போ இருக்கும் ஒவ்வோர் அடியின்போதும் சிலுவையில் இருப்பவரது உடலில் உள்ள தோல், தசைகள் கிழித்துக்கொண்டுவரும். இதனால் மன அதிர்ச்சியோடு சேர்ந்து ரத்தப்போக்கும் அதிகமாக இருக்கும். மரண வேதனையைக் கொடுக்கும். இந்தச் செயலை அறியப்பட்டவரை மரண வாயிலில் கொண்டு செல்லும். ஆனால், அவரை கொல்லாது. இதனால் தன் இறுதி தருணங்களில் அதிக வேதனையை அவர் அனுபவிப்பார்.
(source link: https://www.cbcg.org/scourging-crucifixion.html)
**5. கிழிந்த தசைகள் மூலம் மரத்துகள்கள் ஊடுருவும்**

கசையடி சில சமயங்களில் சிலுவையில் அறைவதற்கு முன்னாலேயே நடந்தேறிவிடும். பிறகு, தன்னை அறியப்போகும் மரத்துண்டை தானே தூக்கிச்செல்ல வேண்டும். படங்களிலோ தேவாலயங்களிலோ இருப்பது போல் வழுவழுப்பான சிலுவையாக அது இருக்காது. வெட்டப்பட்டு, பிளவுபட்டு தொட்டால் சதையைக் கிழித்துக்கொண்டு செல்லும் அளவு இருக்கும். கசையடி வாங்கி கிழிந்த உடலுக்குள் இந்த மரத்துண்டுகள் புகுந்து, மேலும் எரிச்சலை உண்டாக்கும். சிலுவையில் அறைந்த பின்பும் சற்றே உடலை அசைத்தாலும் இது நகர்ந்து வலியை மேலும் அதிகப்படுத்தும்.
(source link http://www.allaboutjesuschrist.org/crucifixion.htm)
**6. ஹைபோவோலேமிக் ஷாக்**

ஆரம்பத்தில் அளிக்கப்படும் கசையடிகளே இந்த நிலைக்குத் தள்ள போதுமானது. பாதிக்கப்பட்டவர், உடலில் உள்ள மொத்த ரத்தத்தில் 20% ரத்தத்தை இழந்தால் இந்த நிலைக்குத் தள்ளப்படுவார். ரத்தப்போக்கு, உடலுக்குத் தேவையான பிராணவாயு கிடைப்பதைத் தடுக்கும். இது, இதயத்துடிப்பை குறைத்து, அதிக ரத்தம் உற்பத்தியாகாமல் தடுக்கும். மேலும், இது பிராணவாயுவின் போக்கைத் தடுக்கும். இந்த சுழற்சியால் ஏற்படும் நிலையே ஹைபோவோலேமிக் ஷாக். சுயநினைவு இழத்தல், மயக்கம் போன்றவை இந்த நிலையால் ஏற்படும். சில சமயம் பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுப்பார். ஆனால், உடல் தொங்கும் நிலையில் இருந்தால் அது வெளியேறாமல் தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறலை அதிகப்படுத்தும்.
(source link: http://emedicine.medscape.com/article/760145-overview)
**7. தோள்பட்டைகள் முறிவு**

ஒருவரைச் சிலுவையில் அறைய ஆரம்பிக்கும்போது இது நடந்துவிடும். தண்டனையை நிறைவேற்றுபவர், தண்டனைக்குள்ளானவரின் கைகளை கீழே வைத்து கிடைவட்டக் கட்டையில் ஆணிகளால் அடித்துவிடுவார். பிறகு அவரைத் தூக்கி, செங்குத்தான கட்டையில் நிற்கவைத்து கால்களை அணிகளால் அறைவார். அதுவரை, உடலின் மொத்த எடையும் மணிக்கட்டில்தான் இருக்கும். இதனால் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை எலும்புகள் முறிந்தோ இடப்பெயர்ந்தோ போகும். முறிந்தபின்பு உடல் எடை முழுவதும் சற்று நேரம் கைகளாலேயே தாங்கப்படும்.
(source link: https://www.apu.edu/articles/15657/)
**8. மாரடைப்பு**

மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிராணவாயுவின் போக்குச் சரியாக இல்லாத நேரத்தில் இதயம் அதிக அழுத்தத்தோடு ரத்தத்தை வெளியேற்றும். இந்த அழுத்தம் சில சமயம் மாரடைப்பிலும் சில சமயம் இதயம் வெடித்துவிடவும் காரணமாக இருக்கும்.
(source link: http://www.khouse.org/articles/1998/113/)
**9. தசைப்பிடிப்பு**

சாதாரண நிலையில் தசைப்பிடிப்பு என்பது தாங்கிகொள்ளகூடிய ஒரு வலி தான். ஆனால், ஏற்கெனவே வலியில் பாடுபடும் ஒருவருக்கு இது சிரமமான ஒன்று. சிலுவையில் அறையப்பட்ட மனிதரின் முட்டிகள் வளைந்து இருக்கும். எனவே, உடல் எடையில் பெரும்பகுதி தொடையில் தான் தாங்கி இருக்கும். சில நிமிடங்கள் தொடையில் உடல் எடையை தாங்கினாலே தசைப்பிடிப்பும், இழுப்பும் ஏற்படும். ஆனால், தன் இறுதியான நேரத்திலும் அதை தாங்கி தான் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் துறப்பர்.
(source link: http://www.stedwardbowie.org/uploads/docs/CrucifixionofJesus.pdf)
**10. முக்கிய உடலுறுப்புகளில் வலி**

பிராணவாயு அனைத்து உடல் பாகங்களுக்கும் அவசியமான ஒன்று. ரத்தப்போக்கு, மூச்சுத்திணறலால் அனைத்து உறுப்புக்கும் இது கிடைக்காமல் போகும். மேலும், புவியீர்ப்பு விசை, உடலில் மீதமுள்ள ரத்தத்தையும் கீழே இழுக்கும். இதனால், ரத்தமும் உறுப்புகளை அடையாமல் போகும். உடலுறுப்புகள் தன்னிடம் குறையிருந்தால் அதை சுட்டிக்காட்ட பயன்படுத்தும் ஆயுதம் வலி. எனவே பிராணவாயு கிடைக்காமல் போனதை வலியின் மூலம் வெளிப்படுத்தும். மற்ற வேதனைகளோடு சேர்த்து இதையும் ஒருவர் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
(source link: https://www.theguardian.com/science/2004/apr/08/thisweekssciencequestions)
**இவற்றில் கவனிக்கப்பட வேண்டியது இரண்டு விஷயங்கள்**
ஒன்று, இந்த துன்பங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பொறுமையாக வருவதில்லை. இது அனைத்தும் மேலும் பல வேதனைகளும் ஒரே சமயத்தில் தண்டனைக்குள்ளானவரை தாக்கும். இரண்டு, இவற்றை விவரிக்க பத்து நிமிடங்களே அதிகம். ஆனால், இந்த துன்பங்கள் தண்டிக்கப்பட்டவர் சாகும் வரை அனுபவிக்க வேண்டும். அவர் இறப்பதற்கு சில நாள்களானால், அதுவரை இந்த வேதனைகள் அனைத்தும் அவரைத் தாக்கிக்கொண்டே தான் இருக்கும்.
– பா. அபிரக்ஷன்,”
