பிரதாப் பாஸ்கரதாஸ்
தமிழ் சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட் நடுத்தர குடும்ப நாயகன்/நாயகியின் வாழ்க்கையைப் பற்றிய கதை தான். மிடில் க்ளாஸ்”வாழ்க்கை மிகவும் பாவப்பட்டது; மிடில் கிளாஸ்ல பொறந்து பாருங்க அப்போ தெரியும் எங்க கஷ்டம்” என வசனங்கள் பேசிக் காட்டப்பட்ட இம்மாதிரியான கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம்.
பெரும்பாலான இயக்குநர்கள் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதாலும் மேலும் நடுத்தரக் குடும்பப் பார்வையாளர்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற இம்மாதிரியான படங்கள் இயக்குகின்றனர். ஆனால் இந்தப் படங்கள் சமூகத்தில் வீசிச்சென்ற நச்சு மிகக்கொடியது.

தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒவ்வொரு பதிவுகளிலும் மக்களினுடைய கருத்தாக்கங்கள் நிறைந்திருக்கின்றன. இன்று சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்படும் பதிவுகளான “ரிசர்வேஷன் கில்ஸ் இந்தியா”, ‘வயிறு பெருத்த ஒரு SC/ST பிரிவை சேர்ந்த மனிதர் பல குழாய்களில் இருந்து தண்ணீர் குடிப்பதும், ஒரு GENERAL பிரிவை சேர்ந்த மனிதர் ஒரு சிறிய குழாயில் இருந்து சொட்டும் தண்ணீரை நக்கிக் குடிப்பது போன்றும்’, கல்லும் முள்ளும் நிறைந்த ஓடுபாதையில் காலில் இரும்பு குண்டு கட்டிய General quota பெண்ணுக்கும், கோட்சூட் அணிந்து எவ்வித தடையுமற்ற சமதள பாதை ஒன்றில் ஓடும் SC/ST ஆணுக்கும் ஒட்டப்பந்தயப் போட்டி நடப்பது போன்ற பதிவுகளையும் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக; குறிப்பாக இளைஞர்கள் பகிர்வதை நாம் பார்க்கலாம். இவ்வாறான பதிவுகள் இட ஒதுக்கீடு மூலம் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளைச் சார்ந்த மக்களே இத்தனை ஆண்டு காலமாக பல மேன்மைகளை எவ்வித தடையுமின்றி அடைந்து வருவதாகவும் மற்ற பிரிவுகளை சேர்ந்த மற்ற வகுப்பினர் எவ்வித சலுகையும் இன்றி மிகவும் துன்புற்று , வாழ்க்கையில் மேலோங்குவதற்கான எவ்வித உதவியுமற்ற நிலையில் தள்ளப்பட்டு இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வாறு பகிரப்படும் பதிவுகளின் பின்புலத்தில் இடஒதுக்கீடு குறித்து எந்த ஒரு சிறுஅறிவும் இல்லாமையே இருக்கிறது.

இம்மாதிரியான இட ஒதுக்கீடு குறித்த பார்வைகள் எங்கு தோற்றுவிக்கப்பட்டது என்பதை ஆராயும்போது சினிமாவிற்கும் இதற்கும் மிகப் பெரும் தொடர்புள்ளதை நாம் பார்க்கலாம். தமிழ் சினிமா கதாபாத்திரங்களில் ஒரு சாதாரண குடியிருப்புகளை சேர்ந்த ஒரு இளைஞனை காட்சிப்படுத்தும்பொழுது, அந்த கதாபாத்திரத்தை பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் அல்லது துயரப்படுபவராக காட்டுகின்றனர். அது பார்வையாளர்களில் பெரும்பான்மையினராக இருக்கும் மிடில் கிளாஸ் அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அல்லது எஸ்சி,எஸ்டி பிரிவுகளைச் சேராதவர்கள் ஆகியோர் தங்களை அந்த கதாபாத்திரங்களாக பொருத்திக் கொள்ள உதவுகிறது. சில பெரும் பிராமணிய சித்தாந்த இயக்குநர்கள் தங்கள் படங்களில் இட ஒதுக்கீடு முறையால், சாதியப் படிநிலைகளில் மிகவும் மேலோங்கியதாக கருதப்படும் சாதிகள் கூட மிகவும் துயருற்ற வாழ்க்கை நிலையில் உள்ளனர் எனவும், எந்த ஒரு தகுதியும் இல்லாமல் இட ஒதுக்கீடு முறையால் சில பிரிவினர்கள் மட்டும் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும் சினிமாக்கள் எடுத்தனர்.
காலம் காலமாக சாதியப் படிநிலைகளில் மேலே அச்சாணியிட்டு உச்சமர்ந்திருக்கும் சாதிகளான பிராமண சாதிகளே நாட்டில் உள்ள எல்லா உயர் பதவி வேலைவாய்ப்புகளையும்,கல்வி வாய்ப்புகளையும், அதன்மூலமாக கிட்டும் பொருளாதார வாய்ப்புகளையும் அனுபவிக்கின்றனர். எனவே, அதை உடைத்து பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பிரிவினர் உட்பட எல்லா பிரிவினருக்கும் அவ்வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்கும் வகையில், வருணாசிரம முறையை உடைத்து கொண்டு வரப்பட்டது தான் இந்த இடஒதுக்கீடு என்பதை மறைத்து, அதற்கு மாறாக எடுக்கப்பட்டு வெகுவாக திரையில் ஓடிய படங்கள் தமிழ் சினிமாவில் மிக அதிகம். இம்மாதிரி உண்மையை திரித்த படங்கள் வெகுவாக ஓடியதற்கு முக்கிய காரணம், இட ஒதுக்கீடு முறையை அறவே பிடிக்காத பிராமணிய சித்தாந்தங்கள் கொண்ட இயக்குநர்களும், எழுத்தாளர்களும், பழமைவாதிகளும் தாங்கள் உருவாக்கும் படைப்புகளில் இட ஒதுக்கீடு முறையானது பிராமணர் உட்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் எதிரானது என்பதை இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்ட அக்காலந்தொட்டு இன்றுவரை சித்தரித்து வருகின்றனர்.
இட ஒதுக்கீடு முறையை ஒழித்தால் மட்டுமே தங்களுடைய அக்கால மேம்பட்ட வருணாசிரம கலாச்சாரத்தை மீண்டெழுப்ப முடியும் என்ற நோக்கில், அவர்கள் சமூகத்தை கிளர்த்தெழுப்பக்கூடிய ஆயுதமான திரைப்படங்கள் மூலம் இந்த இட ஒதுக்கீடு முறையை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் எதிரானது என பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களைத் தூண்டிவிட்டனர். மேலும் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள் தற்பொழுது முன்னேறிவிட்டனர் ஆகையால் இட ஒதுக்கீடு முறையானது இனியும் தேவை இல்லை எனவும், இங்கே ஒரு மாற்று இடஒதுக்கீடு ஒழிப்பு வாதமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாதத்தை இவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினரிடம் அவர்களுக்கே தெரியாமல் உட்புகுத்தி விட்டனர்.
இது ஒருபுறம் இருக்க இடஒதுக்கீடு குறித்த இம்மாதிரியான கருத்தாக்கம் நிலவி வருவதற்கு முக்கிய காரணமான சினிமாவில் இருந்து பெறப்பட்ட இம்மாதிரியான இடஓதுக்கீடு குறித்த பார்வைகளுக்கு அச்சினிமாவே பதில் சொல்லும் நிகழ்வுகளும் இங்கே நடந்தேறியுள்ளன.

வாழ்க்கையில் வெறுத்துத் துயருரும் மிடில் கிளாஸ் மாதவன்கள், மிடில் கிளாஸ் ஜென்டில்மேன்கள் மூலம் மிடில் கிளாஸ் வீரப்பன்களை லோ-கிளாஸ் காளிகளுக்கு எதிராக வெறியூட்டிய தமிழ் சினிமாவானது நவீன காலம் எனப்படும் கட்டாய சமத்துவகாலமான கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக (அதற்கு முன்பு ஓரிரண்டு வந்து இருந்தாலும்) சாதியைப் பற்றிய, இட ஒதுக்கீடு பற்றிய, இட ஒதுக்கீடுக்கு முன்பிருந்த இந்திய பின்பற்றுதலை கேள்வியெழுப்பும் சினிமாக்கள் வரத்தொடங்கிய நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படமானது பெரும்பாலான தமிழ்சினிமாப் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
தமிழ்ச்சமூக சாதியச்சூழல்களை பேசியபோதும் அப்படமானது தமிழ் சினிமாப் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இடம்பெறும் இறுதிக் காட்சியில் மேசை மேலே இருக்கும் ஒரே வடிவிலான இரண்டு குவளைகளில் ஒன்றில் பாலினாலான தேநீரும், மற்றொன்றில் வெறும் வரட்டுக்காப்பியும் என இரண்டு விதமான தேநீர்கள் இருக்கும் காட்சிக்கும், பரியேறும் பெருமாள் படத்தின் மூன்றாம் வார பார்வையாளர்களுக்கும், இடஒதுக்கீட்டிற்கும் தொடர்புள்ளது.
ஏன் மூன்றாம் வார பார்வையாளர்களாக இங்கே இக்காட்சியைக் குறிக்க வேண்டும் என்றால் சினிமா பார்வையாளர்களையும் நாம் ஓவ்வொரு விதமாக பிரித்துவிடலாம். முதல் நாள் பார்வையாளர்கள்,முதல் வார இறுதி பார்வையாளர்கள் மற்றும் அதற்கடுத்தக் காட்சிப் பார்வையாளர்கள் என பிரித்துவிடலாம். இந்த மூன்று வகை பார்வையாளர்களையும் நாம் மூன்று விதமான பொருளாதார பின்புலத்துடன் பொருத்திக்கொள்ளலாம். பரியேறும் பெருமாள் படத்தின் முதல் நாள் பார்வையாளர்கள் நிச்சயம் அப்படத்தின் அரசியல் அறிந்து வந்தவர்கள்.
பரியேறும் பெருமாள் முதல் நாள், முதல் காட்சி பார்வையாளர்கள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டின் அங்கமாக அதைப்பார்க்க வந்திருந்தமையால், ஊடகங்களின் நேர்மறையான விமர்சனங்களுக்கும், அவர்களின் தன்னிச்சையான ஈர்ப்புக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் பரியேறும் பெருமாளின் அதற்கடுத்த காட்சிகளுக்கான பார்வையாளர்கள் அதாவது இரண்டாம், மூன்றாம் வார பார்வையாளர்கள் சமூக ஊடகங்களின் விமர்சனங்களினாலும் பார்த்திருக்கக்கூடும். எனவே, இதன்மூலம் இரண்டாம் வார, மூன்றாம் வார காட்சிகளில் அனைத்து வகையான பார்வையாளர்களும் அரங்கை நிறைத்திருந்தனர் எனலாம். இங்கே ஏன் முதல் சிலநாட்களை தவிர்த்து இரண்டாம் மற்றும் மூன்றாம் வார பார்வையாளர்களைப் பற்றி விளக்கவேண்டும் என்றால்,முதல் சில காட்சிகளின் பார்வையாளர்கள் அதாவது கொள்கையின் ஈர்ப்பினால் வந்தப் பார்வையாளர் அப்படத்தை எவ்விலை கொடுத்தேனும் பார்த்துவிடவேண்டும் என்று பார்த்திருக்கக்கூடும். ஆனால் இரண்டாம் ,மூன்றாம் வாரப் பார்வையாளர்கள் பெரிதும் கூட்டமில்லாத நாட்களில் தங்களுடைய பொருளாதார வசதிக்கேற்றக் கட்டண வரிசை இருக்கைகளில் அமர்ந்திருந்திருப்பர். இதை ஒருபுறம் வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது பரியேறும் பெருமாள் படத்தின் இறுதி காட்சியின் மையக்கருத்தை முதலில் அறிவது அவசியம். அக்காட்சியில் ஒரே மேசையில் இருக்கும் ஒரே வடிவிலான இரண்டு கண்ணாடிக் குவளைகளில், ஒன்றில் பாலினால் ஆனா தேநீரும் மற்றொன்றில் வெறும் வரட்டுக்காபியும் இடம்பெறுமல்லவா?. இது காட்சிப்படுத்தப்படும் நோக்கம் என்னவென்றால் , சாதிப்பிரிவினையால் ஆயிரமாயிரம் தீண்டாமை முறைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும் சமூகத்தில் ,சில சமூக சீர்திருத்தங்களினாலும் (இடஒதுக்கீடு தவிர்த்து), நவீன கால மாற்றங்களினாலும் முன்பு இருந்த இரட்டைக்குவளை முறை ஓரளவிற்கு தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டு,வியாபார சூழலில் அனைவரும் பொதுவெளியில் சமமாக நடத்தப்படவேண்டியக் கட்டாயத்தினால் ஓரளவிற்கு மாற்றமடைந்திருக்கிறது. ஆனால், குவளையின் உள்ளே இருக்கும் கருப்பொருளை சாதியினால் தொடர்ந்த வர்க்க வேறுபாடுகளே இன்றும் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது என்பதையே குறிக்கிறது.
இக்காட்சி எப்படி பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டாம் ,மூன்றாம் வாரப் பார்வையாளர்களிடம் பிரதிபலித்ததென்றால் , தற்போதய சூழலில் திரையரங்குக்குள்ளே முன்பு இருந்த வடிவிலான தீண்டாமை முறையானது செயல்படுத்த வாய்ப்பில்லை. எனவே முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு அனைத்து வகையான மக்களும் படம் பார்ப்பதற்கான சூழல் இருக்கிறது. அவரவர்களுக்கு நிலபுலன்கள் மற்றும் அதனை சார்ந்த வருமானங்கள், உழைப்புச் சம்பளங்கள், கடன்தொகை என ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையில் பொருளாதாரச்சூழல் நிலவுகின்றது. இவ்வாறு இருக்கும்போது நவீனத்துவம் அடைந்துவிட்ட தற்கால திரையரங்கினுள் ஒருவர் அமரும் வரிசையை அவருடைய பொருளாதாரப் பின்னணி அல்லது அவரது அன்றைய கையிருப்புப் பொருளாதாரச் சூழலே தீர்மானிக்கின்றது.
பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு கிடைத்த ஆரவாரங்கள் மற்றும் கைத்தட்டல்கள் பார்வையாளர்களின் சமூகப்பொருளாதார நிலையை எப்படிப் பிரதிபலித்ததென்றால், படத்தில் இடம்பெறும் “டாக்டர் அம்பேத்கர் ஆகப்போறேன்னு சொன்னேன்” எனும் காட்சியின்போது தோராயமாக குறைந்தபட்சம் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான ஆரவாரங்கள் திரையரங்கின் முதல் ஓரிரண்டு அதாவது குறைந்தபட்சக் கட்டண வரிசையிலிருந்தே வந்திருந்ததை நாம் கவனித்திருந்தால் புரிந்துகொள்ள முடியும். (இடஒதுக்கீட்டு முறைக்கு காரணமானவர் என அம்பேத்கர் மீதான வெறுப்பாக மீதமுள்ளோர் அக்காட்சியை வரவேற்காமல் இருந்ததை இப்போது தவிர்த்துவிடுவோம்) ஓரிரு ஆரவாரச் சத்தம் மற்றும் கைத்தட்டல்களே மேல் வரிசை அதாவது கீழ்வரிசைகளை விட கூடுதலான மற்றும் அதிகபட்ச கட்டண வரிசையிலிருந்து வந்திருந்ததை கவனித்திருக்கலாம்.
இந்நிகழ்வை அப்பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்த, நாம் மேலே குறிப்பிட்டுள்ள பரியேறும் பெருமாளின் இறுதிக்காட்சியான ஒரே மேசையில் இரண்டு விதமான தேநீர் குவளைகளுடனும், அதை யார் யார் பருகுகிறார்கள் என்பதுடன் ஒப்பிட்டோமேயானால், மேல் வரிசையாளர்களை பால் தேனீருடனும், கீழ் வரிசையாளர்களை வரட்டுக்காபியுடனும் தொடர்புபடுத்தி விளங்கிக்கொள்ளமுடியும்.

இது பரியேறும்பெருமாள் படக்காட்சிகளின் மூலம் மட்டும் புரிந்துக்கொள்ளப்படக்கூடிய விடயமில்லை. இதுதான் தமிழ்சமூகச்சூழலிலும், தமிழ்சமூகங்கள்கூடும் இடங்களிலும் நிகழும் இம்மாதிரியான நிகழ்வுகள் மூலம், இடஒதுக்கீடு குறித்து நாம் புரிந்துப் பொருட்படுத்திக்கொள்ள வேண்டியனவாகும்.
இதன்மூலம் சமூக வலைத்தளங்கள் உட்பட இன்னபிற தளங்களிலும் “இட ஒதுக்கீடு முறை தேவையற்றது, தாழ்த்தப்பட்ட எஸ்சி/எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு முறையால் ஏற்கனவே பயனடைந்து முன்னேறி விட்டனர்”என்று கூறப்பட்டு வரும் இன்றைய சூழலில், எப்படி இன்றும் இடஒதுக்கீடு இன்னும் முழுதாக அவர்களுக்கு சென்றடையவில்லை என்பதையும், அதன் காரணியான சாதிய படிநிலைகளானது பொருளாதார ரீதியாக எப்படி இன்னுமின்னும் சமமின்மையாக இம்மக்களை பிரித்தாளுகின்றது என்பதையும் புரிந்துக்கொள்ளலாம்.
