சிறப்புக் கட்டுரை: காதல் என்பது மிட்டாய் அல்ல!

Published On:

| By Balaji

ஆஸிஃபா

அபிராமிகளின் செயல்களைப் புரிந்துகொள்ள ஆழமான உளவியல் ஆய்வு தேவை

கடந்த சில நாட்களுக்கு முன்பு “அபிராமி” என்ற சொல் அதிகமாக உச்சரிக்கப்பட்ட சொல்லாக இருந்தது. அபிராமி, திருமணத்திற்கு வெளியிலான உறவு காரணமாக, தன் இரு குழந்தைகளையும் கொன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்கள் இரண்டு நாட்களுக்குப் பொங்கின. ஆனால், சரவெடி ‘சடசட’ என்று நொடிகளில் வெடித்துத் தீர்வது மாதிரி, இதுவும் முடிந்துவிட்டது. நம் மக்களுக்கு அவ்வப்போது இப்படி ஏதாவது ஒரு விஷயம் கிடைக்கிறது. புதிதாக ஒரு விஷயம் வந்ததும் பழைய விஷயம் மறக்கப்படுகிறது. அபிராமி என்னும் சொல்லும் அப்படித்தான் நினைவடுக்குகளில் பின்னால் போய்விட்டதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

சரி, இப்போது ஏன் அபிராமி பற்றிய கட்டுரையை எழுத வேண்டும்? எப்போதுமே, ஒரு சம்பவம் நடந்ததும் அதற்கு எதிர்வினை (react) ஆற்றாமல், பதிலளிக்கவே (respond) நான் விரும்புவேன். ஒரு பிரச்சினை நடந்ததும் அதைப் பற்றி எழுதுவதால் நமக்குக் கிடைப்பது ஒரு செய்தி மட்டுமே, அல்லது அந்தச் செய்தியின் தாக்கத்தில் எனக்கு ஏற்பட்ட கருத்து. அவ்வளவே. ஆனால், அந்தப் பிரச்சினை சற்று ஆறிவிட்டால், அப்பிரச்சினையின் பல கோணங்கள் நம் கண்ணுக்குத் தெரியும். சில நேரங்களில் அந்தக் கதையின் யாருக்கும் தெரியாத ஒரு பாகம் நமக்கு வெளிப்படலாம்.

**அபிராமி ஏன் அதிகம் பேசப்பட்டார்?**

ADVERTISEMENT

இந்த ஆண்டு மே 18 அன்று இதே மாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது, நினைவிருக்கிறதா? சென்னையில், புஷ்பம் என்ற 18 மாதக் குழந்தை, பெற்றோரால் கொலை செய்யப்பட்டது. பணமில்லாததால் குழந்தையின் கை காலை உடைத்துப் பிச்சை எடுத்திருக்கிறார்கள்; பல நாள் கொடுமைக்குப் பிறகு, குழந்தையின் வயிற்றில் மிதித்துக் கொன்றுவிட்டார் தாய் பிரியங்கா. அபிராமி செய்ததைவிட இது பெரிய வலிதானே? பெரிய கொடுமைதானே? பிறகு ஏன் இது நம் நினைவில் இல்லை? ஏன் இது அபிராமி அளவிற்குப் பேசப்படவில்லை?

காரணம், அபிராமி விஷயத்தில் ‘கள்ளக்காதல்’ என்ற சொல் இருக்கிறது. குழந்தைகளை அபிராமி கொலை செய்த சம்பவத்திற்குப் பிறகு வருவோம். ஏன் அபிராமிக்குத் திருமணத்திற்கு வெளியில் ஓர் உறவு ஏற்பட்டது, அபிராமிக்கு மட்டும்தான் இது ஏற்படுகிறதா என்ற கேள்விக்கான விடை தெரிந்தால்தான் அந்தச் சம்பவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

ADVERTISEMENT

முதலில் “கள்ளக்காதல்” என்ற சொல்லே அநாகரிகமானது. திருமணத்திற்கு வெளியிலான உறவு என்று சொல்லலாம். அபிராமிக்கு அப்படி ஓர் உறவு ஏற்படுவதற்கான நியாயமான காரணமாகக் கூறப்படுவது. ‘அவர் கணவன் அவரைக் கவனிக்கவில்லை; அன்பு செலுத்தவில்லை; தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை’ என்பதுதான். இதுவும் ஆண்களின் பக்கம் நியாயத்தைத் தக்கவைக்க செய்யும் முயற்சி மட்டுமே. உண்மையில், நம் வாழ்வில் ஈர்ப்பு ஏற்படுவது நிற்பது கிடையாது. அனைவருக்கும் இது பொருந்தும். பிறகு ஏன் எல்லாரும் திருமணத்திற்கு வெளியிலான உறவில் ஈடுபடுவதில்லை என்று கேட்கலாம். இரண்டு காரணங்கள்:

1. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் பலரும் வாழ்கிறார்கள். ஈர்ப்பு ஏற்பட்டாலும், கட்டுப்படுத்தி, நம் பெயர் கெட்டுவிடும், குடும்பம் குலைந்துபோகும் என்ற பயத்தில் வாழ்கிறார்கள். தந்தைவழிச் சமூகத்தில் (patriarchal society) இருக்கும் மிகப் பெரிய வெற்றியே இதுதான். “நீ செய்வது தவறு” என்று சில இயற்கையான விஷயங்களைப் பெண்களின் ஆழ் மனதில் பதித்துவிட்டார்கள்.

2. இரண்டாவது காரணம், மாறி வரும் சமூகத்தில், சில வீடுகளில் பெண்ணியத்தின் தாக்கம் ஏற்பட்டு, பெண்கள் பயமில்லாமல், தயக்கமில்லாமல், தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வெளி இருக்கிறது. மனதிற்குள் மறைத்து வைக்கும் விஷயங்கள்தான் ஆபத்தானவை. இப்படி அனைத்தையும் பகிர்ந்துகொள்பவர்களுக்குப் பிரச்சினை இல்லை.

Lust Stories என்ற படத்தில் ராதிகா ஆப்தேவின் பாகம் மிக அழகாக இந்தச் செய்தியைக் காட்சிப்படுத்தும். “ஒரு நபரால் எப்படி எல்லாமுமாக இருக்க முடியும்?” என்ற முக்கியமான கேள்வியை முன்வைத்திருப்பார். சிறந்த நண்பனால், காதலனாக முடியாமல் போகலாம் என்பதை ஏற்றுக்கொள்வது போல, சிறந்த காதலனால் சிறந்த காமம் கிடைக்காமல் போகலாம்; சிறந்த கணவனுக்குக் காதலே செய்யத் தெரியாமல் போகலாம் என்ற கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாததே அபிராமி போன்ற பெண்களின் பிரச்சினையின் ஆணிவேர்.

**ஈர்ப்பு என்பது இயல்புதான்**

கணவன் அன்பாக இல்லாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. கணவன் வையத்தில் சிறந்தவனாகவே இருந்தாலும், இன்னொருவர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு என்பதுதான் நம் அடிப்படைப் புரிதல்களில் முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி ஈர்ப்பு வரும் பட்சத்தில், அதை எப்படிக் கையாள்வது என்பது அடுத்த குழப்பமாக இருக்கும்.

ஒருவரால் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிக்க முடியும்; அது ஒன்றும் மிட்டாய் கிடையாது, ஒன்று கொடுத்தால் தீர்ந்துபோகும் என்று சொல்வதற்கு. அது அன்பு, கொடுக்கக் கொடுக்கப் பெருகும். படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும் ஒன்றல்ல; ஒட்டுமொத்தத் திருமண வாழ்வையும் காதலையும் காமத்தை விட்டுப் பிரிக்க வேண்டிய கட்டாயம் நம்மிடம் இருக்கிறது. அனைத்தையும், உடலோடு முடிச்சுப் போடுவதைத் தவிர்த்தால் இந்தப் பிரச்சினைகள் குறையலாம்.

மீண்டும் அபிராமிக்கு வருவோம். இன்று தோழர் சுதர்ஷனிடம் பேசும் போது சொன்னார், அபிராமி மீதான வசைகளுக்குக் காரணம் நம் ஆழ்மன வக்கிரங்களே என்று. தனது பதிவில் அவர் மிக அழகாக எழுதியிருந்தார்:

“ஒரே நேரத்தில் இரண்டு உறவென்று வரும்பொழுது அது ‘கள்ளக்காதல்’ எனும் கவர்ச்சிமிகு பத்திரிகைத் தலைப்பாகிவிடுகிறது. அதைப் படிப்பதற்கு மக்கள் அவ்வளவு சுவாரசியம் காட்டுகிறார்கள். அதை மீண்டும் மீண்டும் உரையாடி இன்பம் காண்கிறார்கள். சுடும் வார்த்தைகளால், அவர்களை எப்படியெல்லாம் வன்புணர்ந்து கொல்லலாம் என்றெல்லாம் பொதுவெளியில் எழுதுகிறார்கள். அவளுடைய பெண்ணுறுப்புக்குள் எதையும் நுழைக்கலாம் என்று எழுதுகிறார்கள்.”

அபிராமி செய்தது தவறென்றால், இவர்கள் செய்வது குற்றம். தவறு செய்துவிட்ட ஒருத்தியை / ஒருவனை என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் என்பது எவ்வளவு பெரிய தவறு? தான் ஒழுக்கவாதி என்பதை நிரூபிக்கும் செயல்களாகத்தான் இதை நான் பார்க்கிறேன். நான் அசிங்கமாக அவளைப் பேசிவிட்டால், “பார், இவளல்லவா தமிழ்ப் பெண்?” என்று வியந்து என்னை யாரும் குறை கூற மாட்டார்கள் எனும் எண்ணமே அல்லாமல் இது வேறின்றுமில்லை.

ஆகவே, திருமணத்திற்கு வெளியில் அபிராமி வைத்துக்கொண்ட உறவு, நாம் நினைப்பது மாதிரி சாதாரண விஷயம் கிடையாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் வெகு சிலதையே நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு விஷயத்தில் இருக்கும், உடல் சம்பந்தமான உறவு எனும் ஒரு சிறு புள்ளிதான் நமக்குத் தெரிகிறது. ஆனால், அது சிக்கலான ஒரு பெரிய சுழல். மனம் திறந்த உரையாடல்களும் புரிதலுமே அதற்கான தீர்வு.

**காரணம் அறியவியலாத காரியம்**

அடுத்தது, குழந்தைகளைக் கொலை செய்த சம்பவம். ஒரு குழந்தைக்கு ஏழு வயது, இன்னொரு குழந்தைக்கு ஐந்து வயது. அபிராமி, தான் விரும்பிய சுந்தரத்துடன் சென்றுவிட்டதாகவும், மீண்டும் அவரை அழைத்து வந்து வீட்டில் வைத்ததாகவும் சொல்கிறார், அபிராமியின் கணவர் விஜய். இது வரையிலான தகவல்கள் தெளிவாக இருக்கின்றன. இதற்குப் பிறகு ஏன் குழந்தைகளைக் கொலை செய்தார் என்று அனுமானிக்கத்தான் நம்மால் முடியும்.

இதே போன்ற சம்பவம், கடந்த 12ஆம் தேதி திருப்பூரில் நடந்தது. கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிந்ததும் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அதற்கு முன்பு தன் இரண்டரை வயது மகளைக் கொன்றுவிட்டார். அவர் தூக்கு மாட்டுவதற்குள், கணவன் வந்துவிடவே பொய் சொல்லித் தப்பித்தார். இதுவும் ஏறத்தாழ இதே பிரச்சினைதான். ஆனால், “நான் இல்லையென்றால், என் குழந்தை எதற்கு உனக்கு? யார் என் குழந்தையைக் கவனிப்பார்கள்?” என்ற அடிப்படையில் நிகழ்ந்த கொலை இது.

அபிராமியோ, “நம் உறவிற்குத் தடையாக குழந்தைகளைத்தானே காரணம் காட்டுகிறார்கள், அவர்களே இல்லையென்றால்?” என்று நினைத்திருக்கலாம். அவர்களுடைய எண்ணம் எதுவாக இருந்தாலும், கொலை செய்வது, அதுவும் தன் குழந்தைகளைத் தானே கொலை செய்வது என்பது அசாதாரணமானது. குழந்தைகள் பிறந்து சில நாட்கள் முதல் ஆண்டுகள் வரை தாய்க்கு post partum depression ஏற்படும். அச்சூழலில், குழந்தைகளைக் கொலை செய்யும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தன் குழந்தையைத் தானே கொலை செய்வதற்கு ஆங்கிலத்தில் filicide என்று சொல்கிறார்கள். தனியான ஒரு சொல்லை உருவாக்கும் அளவிற்கு இது பரவலான பிரச்சினையாகவே இருக்கிறது. ஆனால், நாம்தான் கண்டுகொள்வது கிடையாது.

அபிராமியைப் பொறுத்தவரை, அவருக்கு நிச்சயமாக ஏதோ உளவியல் பிரச்சினை இருந்திருக்கிறது. அதை ஏன் உடனிருக்கும் கணவனாலோ, பெற்றோராலோ, நண்பர்களாலோ கண்டுபிடிக்க முடியவில்லை? ஏனென்றால், நமக்கே அதைப் பற்றிய புரிதலில்லை. முன்னெப்போதையும் விட, அதிகமான உளவியல் சிக்கல் ஏற்படும் காலம் இது. உளவியல் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உடனடியாக ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இப்படி, முன்னேற்றத்திற்கான செயல்களைச் செய்ய வேண்டுமே தவிர, இணையத்தில் அறம் தவறிப் பேசுவது முறையல்ல.

பிரச்சினையின் ஆணிவேரை ஆராய வேண்டும். விளைவுகளை அல்ல. பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண முயல வேண்டும். நம் வக்கிரங்களை அதில் சென்று கொட்டக் கூடாது. அறமும் புரிதலும் முன்னெப்போதையும்விட இப்போது நமக்கு மிகவும் முக்கியமாக இருக்கின்றன!

நன்றி:

1. சுதர்ஷன் சுப்பிரமணியம்

2. Deccan Chronicle https://www.deccanchronicle.com/nation/crime/030918/killer-mom-caught-by-cops-in-nagercoil.html

3. Tamil Samayam https://tamil.samayam.com/latest-news/state-news/tirupur-lady-killing-her-child-because-suspicion-on-the-husband/articleshow/65780348.cms

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share