சிறப்புக் கட்டுரை: ஒரு இந்துவாக தலைகுனியும் நேரம்!

Published On:

| By Balaji

ராஜன் குறை

மானுட அரசியல் பிரச்சினையின் ஆதார இழையாக நாம் கருத வேண்டிய கேள்வி, எளியோரின் நலன்களை பாதுகாப்பது எப்படி? வலியோருக்கும் எளியோருக்குமான அதிகார சமமின்மை ஆதிக்கமாக, கொடுங்கோன்மையாக மாறாமல் தடுப்பது எப்படி? போரும், வன்முறையுமே இதற்கான விடை என்றால் அதில் பெரிய சிக்கல் எதுவுமில்லை. ஆனால் சமாதான சகவாழ்வில் எப்படி அனைவரின் நலன்களையும் ஒருங்கிணப்பது என்பதே அரசியலின் முன்னால் உள்ள மிகப்பெரிய கேள்வி.

மன்னராட்சியில் மன்னரிடம் அதிகாரம் ஆதிக்கமாக குவிந்திருந்தது. அவரது விருப்பம் இறுதி முடிவாக இருந்தது. சமூக வாழ்வை ஒருங்கிணைக்க நீதி, மதம், பண்பாடு ஆகியவையும், அரசதிகாரத்தை உறுதிப்படுத்த வாளும், வேலும், போர்க்களமும் என்ற பிரிவினை இருந்தது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றாலும், கருணையும் வீரமும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அது எப்போதும் நிகழவில்லை. பொதுவாக அதிகாரம் பெரும்பாலும் ஆதிக்கமாகவே நிலவியது.

மக்களாட்சி என்ற சிந்தனை வந்தபோது வன்முறை நீக்கம், சமாதான சகவாழ்வு, சமூக ஒருங்கிணைப்பில் உற்பத்தி பெருக்கம் ஆகியவை இலட்சியங்களாக முன்வைக்கப்பட்டன. அதனால் அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் அது ஒரு சுழற்சியாக ஆளும் பொறுப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. ஒரு நாடகக் குழுவில் ஒரு குறிப்பிட்ட நாடகத்திற்கு ஒருவர் இயக்குனராக இருப்பது போன்று தலைமை என்பது ஒரு பொறுப்புதானே தவிர ஆதிக்கம் செலுத்துவது அல்ல. அதிகாரம் ஒருபோதும் ஆதிக்கமாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் உருவானது. அதனால் அனைவருக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட வேண்டும். அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் சார்பாக ஆள வேண்டும் என முடிவானது.

மக்களாட்சியின் உள்முரண்கள்

குடியரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்ட திட்டங்களும் பொதுவானவை. அனைவருக்கும் தங்கள் விருப்பப்படி வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் உண்டு. யாரும் பிறரை அடிமையாக வைத்து உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்த முடியாது. இதெல்லாம் இலட்சியங்கள். ஆனால் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்போது பெரும்பான்மை என்பது மக்களின் ஆதரவின் அடிப்படையில் நிகழ்கிறது. எந்த கட்சியினர் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே ஆட்சி அதிகாரத்தை பெறுகிறார்கள். நவீன அரசும் போலீஸ், ராணுவம் என்று ஆயுதங்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறது. அதனால் ஆட்சி செய்பவர்களிடம் ஆயுத பலம் இருக்கிறது. அவர்கள்தான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும்.

இந்த ஏற்பாட்டில் குறைந்த அளவு வாக்குகளை, குறைந்த இடங்களை வென்றவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்கு உள்ளாகிறது. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய கட்சி ஆட்சி செய்கிறது. குறைந்த எண்ணிக்கையில் இடங்களை கைப்பற்றிய கட்சிகள் எதிர்கட்சிகளாக இருக்கின்றன. பெரும்பான்மை உள்ள கட்சி என்ன வேண்டுமானால் செய்யலாம் என்றால், சிறுபான்மை இடங்களை பெறுவதன் பொருள் என்ன என்ற கேள்வி வருகிறது.

இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. ஒரு தீர்வு சட்டத்தின் ஆட்சி. எவ்வளவு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினாலும் சட்டத்திற்கு உட்பட்டுதான் ஆளவேண்டும் என்பதால் யாரும் ஆதிக்கம் செய்ய முடியாது. எதேச்சதிகாரம், சர்வாதிகாரம் போன்றவை சாத்தியமில்லை என்பது குடிமைச் சமூக நம்பிக்கை. ஆனால் பெரும்பான்மை இடங்களை பெற்றவர்கள் சட்டத்தையே மாற்றினால்? அல்லது நீதிமன்றம் அவர்கள் வற்புறுத்தலுக்கு ஆட்பட்டால்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையில்லை. அதைவிட முக்கியமாக நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசுதானே நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தாவிட்டால் என்ன செய்யமுடியும்? சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை ஒரு பிரிவினரின் எதிர்ப்பின் காரணமாக நடைமுறைப் படுத்த முடியவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு குறித்த தீர்ப்புகளை நடைமுறைப் படுத்த முடியவில்லை. எனவே சட்டத்தின் ஆட்சி என்ற கருத்து பெரும்பான்மை அரசதிகாரத்தை கட்டுப்படுத்துமா என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

இதற்கான மற்றொரு தீர்வு அறம் சார்ந்த தீர்வு. அறம், தர்மம், ஒழுக்கம், மாண்பு என்று எந்த பெயரில் அழைத்தாலும் அதன் முக்கிய அம்சம் எளியோரின் நலன்களை வலியோரும் பாதுகாப்பது. சிறுபான்மையின் குரலை பெரிது மதித்து நடக்கும் பழக்கம் பெரும்பான்மை இடங்களை வென்ற கட்சியிடம் இருந்தால்தான் மக்களாட்சி என்பதற்கு பொருள் இருக்கும். ஆளும் கட்சி எதிர்கட்சியின் கருத்துக்களை கண்ணென மதிக்க வேண்டும். அவர்களுடன் விவாதித்து கருத்தொப்புமையை நிறுவ முயலவேண்டும். தன்னிடம் அதிகாரம் இருக்கிறது, பெரும்பான்மை இருக்கிறது என்று தான் தோன்றித்தனமாக நடந்துகொள்ளக் கூடாது. இப்படியான அரசியல் தர்மத்தை, உயரொழுக்கத்தை கடைபிடித்தால்தான் மக்களாட்சி பெரும்பான்மைவாதமாக மாறாதிருக்கும்.

பெரும்பான்மை மத அடையாளம்

பொதுவான அரசியல் கட்சி சார்ந்த பெரும்பான்மை, சிறுபான்மையே மேலே சொன்னபடி சிக்கலான கேள்விகளை எழுப்புகிறது. இந்த நிலையில் பெரும்பான்மை மத அடையாளம் உருவாக்கப்பட்டு அது அரசியல் அடையாளம் ஆனால் என்ன நிகழலாம் என்று அச்சம் முக்கியமானது. அப்போது சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்படுமா, அவர்களுக்கு எதிரான மனநிலை உருவாக்கப்பட்டு அவர்கள் சமூக பொருளாதார வாழ்வில் ஒதுக்கப்படுவார்களா, அவர்கள் உரிமைகள் பறிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன. அதனால்தான் நவீன அரசியல் என்பது மதம் சாராமல் செக்யூலர் எனப்படும் மதச்சார்பின்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த செக்யூலர் என்பதும் பெரும்பான்மை அடையாளம் சார்ந்ததாகவே இருக்கும் என்பதால் அதன் முதல் கடமை சிறுபான்மையினர் நலன்களை உறுதி செய்வது. ஒரு நல்ல மக்களாட்சியின் முதல் கடமை சிறுபான்மையினர் நலன்களை, உரிமைகளை பாதுகாப்பதுதான் என்றால் மிகையாகாது. ஆனால் இந்த உயர்குணம் சிறுபான்மையினரை மகிழ்வித்தல், மைனாரிட்டி அப்பீஸ்மண்ட் என்று ஏளனம் செய்யப்படும் தீய வழக்கம் உருவாகியது. தேசத்தந்தை காந்தியே இந்த உயர் பண்பிற்காக கொல்லப்பட்டார்.

பொதுவான தர்மம் என்ன? ஒரு பெரும்பான்மை மத அடையாளம் (அது கட்டமைக்கப்பட்டதாக இருந்தாலும்) சிறுபான்மை அடையாளத்திற்கு விட்டுக்கொடுப்பதுதான் தர்மமே தவிர, அவர்கள்தான் எங்களை அனுசரித்துப் போகவேண்டும் என கொக்கரிக்கக் கூடாது. பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் முரண்கள் வெளிப்படையானவை. வாழ்க்கை வழக்கல்ல; சகவாழ்வின் மேன்மையை அனுசரிப்பதும், விட்டுக்கொடுப்பதும்தான். ஆனால் அதை பெரும்பான்மை அடையாளம் கோருபவர்கள்தான் செய்ய வேண்டும். அதுவே உயரொழுக்கம்; மேலான அரசியல் நெறி. ஒரு இந்துவாக நான் இந்த வழக்கிற்காக, தீர்ப்பிற்காக, மனமார வருந்துகிறேன்.

நானும் இந்துதான்

சட்டப்படியும், பழக்க வழக்கங்கள், வளர்ப்பின் அடிப்படையிலும் நானும் இந்துதான். நான் இறைமுதல் வாதத்தை தத்துவ அடிப்படையில் இன்று ஏற்கவில்லை. அதனால் வழிபாடுகளில் மனப்பூர்வமாக ஈடுபட முடியாது. ஜாதி அடையாளங்களையும் நான் விரும்பாததால், பார்ப்பன குடும்பத்தில் பிறந்த நான், சடங்குகளில் பெரும்பாலும் பங்கெடுப்பதில்லை. இதன் பொருட்டு என்னை மத நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

ஆனால் இதையெல்லாம் விட முக்கியமாக சிறுவயதில், இளம் வயதில் நானும் ராம பக்தனாக இருந்திருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் தியாகய்யரின் பாடல்கள். எனக்கு தெலுங்கு தெரியாவிட்டாலும் பல வரிகளின் அர்த்தங்களை கேட்டு அறிந்துள்ளேன். அந்த கர்நாடக இசைப் பாடல்கள் எப்போதும் என் உள்ளத்தை உருக்கும். பாலமுரளி கிருஷ்ணா உத்சவ சம்பிரதாயக் கிருதிகள் என்ற பாடல்கள் அற்புதமான தருணங்களை வாழ்வில் தந்துள்ளன.

நாற்பதாண்டுகளுக்கு முன்னால் திருவையாறு உற்சவத்தில் அனைத்து பாடகர்களும் ஒன்றாகச் சேர்ந்து பஞ்சரத்தினக் கீர்த்தனங்களை இசைக்கும்போது மனமுருகி அந்த காவிரி ஆற்றில் மீனாக, புழுபூச்சியாக மாறிவிட மாட்டேனா என எண்ணியுள்ளேன். இந்த மானுட பிரக்ஞையின் பாரத்தை தொலைத்து இயற்கையில் கலந்துவிட வேண்டும் என ஏங்கியுள்ளேன். பக்தி பரவசம் என்பார்கள். தன் வசமாக இல்லாமல் பிறிதின் வசப்படுவதுதானே பரவசம். எனக்குத் தெரிந்த ராம பக்தி அப்படி சுயமிழந்து பரவசமாவதுதான். அந்த ராமனின் பெயரால் வன்முறை என்பது கொடூரமானது.

ராமனுக்கும், ராமாயணத்திற்கும் ஏற்பட்ட வரலாற்று அர்த்தங்களை அறிவேன். அவை என் மனதை என்றும் புண்படுத்தியதில்லை. பெரியாரும், திராவிட இயக்கமும் ராமாயணத்தை வடவர் ஆதிக்கத்தை சொல்லும் கதையாக வாசித்தார்கள். அதை நான் ஏற்கிறேன். ராமன் என்பதை உயர் தத்துவமாகக் கொள்வதே காந்தியின் நோக்கமாக இருந்தது. அதையும் நான் புரிந்துகொள்கிறேன். தன்னுடைய பெயரான ராமசாமி என்பதை பெரியார் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை. பெயரில் என்ன இருக்கிறது என்பதாக இருக்கலாம். அந்த வார்த்தைக்கான பொருளை நாம்தானே உருவாக்குகிறோம். தமிழகத்தில் மிகப் பரவலான பெயர் ராமசாமி. ராமசாமிகளின் மாநாடு ஒன்றைப் பற்றிய அங்கதக் கதையை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒரு சில ராமர் கோயில்களே உள்ளன. இந்து மதம் என்று சுட்டப்படும் எதுவும் அளப்பரிய பன்மை கொண்டது. அது ஒரு கடவுளையோ, ஒரு புனிதத் தலத்தையோ, ஒரு புனித நூலையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் சிறப்பம்சமே அதன் பன்மைதான்.

இந்து அடையாள அரசியல் செய்பவர்கள் அந்த பன்மையை, எளிமையை மறுக்கிறார்கள். பக்தியின் பொருட்டல்ல, அரசியல் நோக்கத்திற்காக ராமன் பெயரை கையில் எடுக்கிறார்கள். மேற்கத்திய தத்துவத்தில் விஷமே மருந்தாக, மருந்தே விஷமாக இருப்பது பற்றிய சிந்தனை உண்டு. பார்மேகான் என்பார்கள். தியாகய்யருக்கும், காந்திக்கும், இளவயதில் எனக்கும் பரவசமாக்கி நெகிழவைக்கும் பெயராக இருந்தது அவர்களை வன்முறைக்கு தயார் செய்கிறது. எளிய பக்தர்கள் மனதில் குடியேறும் இறைவன், அரசர்கள் மமதையாக எழுப்பும் கோயில்களில் குடியேற மாட்டான் என்பதே எனக்குத் தெரிந்த ஆன்மீகம்.

ஒரு இந்துவாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கும், அந்த இடத்தில் ஒரு கோயில் உருவாகப் போகிறது என்ற நிதர்சனத்திற்கும் வெட்கி தலைகுனிகிறேன்.

அதே சமயம், சட்டத்தின் ஆட்சியை நாடும்போது தீர்ப்பினை ஏற்கிறேன்; அதற்கெதிரான கசப்பை பரவவிடுவதும், வன்முறைக்கு வாய்ப்பளிப்பதையும் நான் விரும்பவில்லை. அவ்விதமே வன்முறை தவிர்க்கும் என் அனைத்து சிறுபான்மை, பெரும்பான்மை அடையாளமேற்கும் நண்பர்களையும் வணங்குகிறேன்.

நம் மனங்கள் நெகிழட்டும்; நம் அடையாளங்கள் கலக்கட்டும். வெறுப்பின் வியாபாரிகளை புறக்கணிப்போம். அன்பின் பாதைகளில் பயணிப்போம். அதுவே நமது வெற்றி.

கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share