சிறப்புக் கட்டுரை: எதை நோக்கிச் செல்கிறது இந்தியப் பொருளாதாரம்?

Published On:

| By Balaji

நா. ரகுநாத்

“தனியார் முதலீடுகள்தான் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரமாக விளங்க வேண்டும். தனியார் துறை சந்திக்கும் இக்கட்டான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில், அந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தரும் பணிகளில் பொதுத் துறை முதலீடுகளை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறையாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்”

ADVERTISEMENT

இது, பொருளாதாரத்தில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு என்ன என்பதைப்பற்றிய மோடி 1.0 அரசின் பார்வை. இதைப் பொருளாதார ஆய்வறிக்கை 2014-15 மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, 2019 பொதுத்தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்த மோடி 2.0 அரசு, தன்னுடைய முதல் பொருளாதார ஆய்வறிக்கையில் (2018-19) தனியார் முதலீடுகள் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

ADVERTISEMENT

“பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் கிராக்கியின் (demand) அளவு, தொழிலாளர்களின் உற்பத்தித் திறன், புதிய உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் என இவ்வனைத்தின் அளவையும் அதிகரித்து, பொருளாதாரத்தை உந்தி தள்ளுவது தனியார் முதலீடுகளே. கிழக்காசிய நாடுகளின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைச் சாத்தியமாக்கியது தனியார் முதலீடுகள் வழியே உருவாக்கப்பட்ட ஏற்றுமதிகளே. பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள், தனிநபர் வருமானம் மற்றும் சேமிப்புகளை அதிகரித்து மீண்டும் முதலீடுகள் செய்வதற்கு வழிவகுக்கும் பாதை இதுவே” என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை.

அதாவது, ஐந்தாண்டுகளில் தனியார் முதலீடுகள் பற்றிய மோடி அரசின் பார்வையில் எவ்வகை மாற்றமும் இல்லை. ஆனால், தனியார் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; இவை நேர்மறையான மாற்றங்கள் அல்ல என்பதுதான் நமக்குக் கவலையளிக்கிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் சோப்பு, பிஸ்கட், உள்ளாடைகள் தொடங்கி கார், ட்ராக்டர் வரை அனைத்து வகைப் பொருட்களுக்கான கிராக்கி குறைந்து வருவதால் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பொருள் விற்பனையில் பெரும் சுணக்கம் கண்டுள்ளன. ஏற்கனவே வலுவிழந்த நிலையில் இருக்கும் தனியார் துறைக்கு இது மேலும் ஒரு பின்னடைவு.

ADVERTISEMENT

தனியார் துறை ஏன் தடுமாறுகிறது?

பொருளாதாரத்தில் கிராக்கியின் அளவு ஏன் குறைந்துள்ளது? தனியார் துறை ஏன் தடுமாற்றம் காண்கிறது?

பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள், சேவைகளின் வளர்ச்சியையே குறிக்கும். உற்பத்தி வளர்ந்தால், இல்லாதவர்களும் அவற்றைப் பெற முடியும், அதனால் அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயரும் என்பதுதான் அதற்கு சாதகமாக வைக்கப்படும் வாதம். அதில் உண்மையே இல்லை என்று சொல்லி நாம் வளர்ச்சியைப் புறக்கணிக்க முடியாது. பொருளாதார வளர்ச்சி அவசியமான ஒன்றுதான்.

அதே நேரத்தில், அந்த வளர்ச்சியின் தன்மை என்ன, அதில் பங்கேற்பவர்கள் யார் யார், அதன் பலன்கள் யாருக்குச் செல்கிறது, அதன் எதிர்மறை விளைவுகள் என்ன எனும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்காமல், வளர்ச்சி பற்றிய விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்காது. மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் எத்தகைய மாற்றங்களைக் காண்கின்றன, அவற்றை நேர்மறைத் திசையில் செலுத்த அரசாங்கமும் சந்தையும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து, தகுந்த பரிந்துரைகளை வழங்குவதே பொருளியலின் நோக்கம் என்றால், அந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருப்பதை சாத்தியப்படுத்தும் கருவியாகப் பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும். இது நம் நாட்டில் நடந்துள்ளதா?

பொருளாதாரம் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறதா, இல்லை, மந்தமாகச் செயல்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள பங்குச்சந்தை, வணிக ஊடகங்கள் பயன்படுத்தும் குறுகிய காலக் குறியீடுகள் என்னென்ன? கார்கள், இருசக்கர மோட்டார் வாகனங்கள், குளிர்சாதனப்பெட்டிகள், ஏசிக்கள் (Air Conditioner – AC), ஸ்மார்ட்போன் போன்ற ஆடம்பர சாதனங்களின் விற்பனையும், விமானப்பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையுமே பொருளாதாரத்தில் கிராக்கியின் பிரதிபலிப்பாக அவர்கள் கருதுகின்றனர். இவையெல்லாம் நாட்டு மக்கள் அனைவராலும் நுகரப்படும் பொருட்களா?

விரிவடையாத உள்நாட்டு சந்தை!

“1991இல் இருந்தே நாட்டில் பொருளாதார ரீதியாக மேல்தட்டில் இருக்கும் 10-12 கோடி மக்களின் நுகர்வை மட்டும் மையப்படுத்தியே நம்முடைய வளர்ச்சி வியூகம் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது” என்று பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் தொடர்ந்து எழுதி வருகிறார். இவர், நாட்டின் தலைமை அமைச்சருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழுவில் சமீபகாலம் வரை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 10-12 கோடி மக்கள் உள்நாட்டு சந்தையில் தங்களுக்குத் தேவையான பொருட்கள், சேவைகளைப்பெறுவதைக் குறைக்கும்போது, இவர்களின் நுகர்வை மையப்படுத்திய பொருளாதார வளர்ச்சி வியூகமும் ஆட்டம் காணத் தொடங்குகிறது. இந்தியப் பொருளாதாரம் வேகம் இழந்துள்ளதற்கு இதுவே முக்கியக் காரணம் என்பது ரத்தின் ராயுடைய வாதமாக உள்ளது.

அதாவது, உள்நாட்டு சந்தை விரிவடைவதில் உள்ள சிக்கல்களால்தான் பொருளாதார வளர்ச்சி தொய்வு கண்டுள்ளது. சுதந்திரம் பெற்று, திட்டமிட்ட வளர்ச்சிப் பாதையை நாம் தழுவிய காலத்திலிருந்தே இந்தப் பிரச்சினை இருந்துவந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சிலரிடமே சென்று குவிகிறது; அவர்களின் நுகர்வை மட்டுமே நம்பி வளர்ந்த பொருளாதாரம் இன்று ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுவாகவே, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சுணக்கம் ஏற்படும்போதெல்லாம் பொருட்களின் உற்பத்தியை பாதிக்கும் அளிப்பு சார்ந்த காரணிகளே (supply side bottlenecks) அதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுவது வழக்கம். இந்த நிலையைச் சரி செய்ய, நிலத்தைக் கையகப்படுத்தும் முறைகளை எளிதாக்க வேண்டும், தொழிலாளர் சந்தையில் நெகிழ்வுத்தன்மை வேண்டும் போன்ற தீர்வுகளே முன்வைக்கப்படும். பொருட்களின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றால், பொருளாதாரத்தில் மொத்த கிராக்கியின் அளவு உயர்ந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று ரத்தின் ராய் போன்ற பல பொருளியல் அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

18 காலாண்டுகளில் மிகக் குறைவான தனி நபர் நுகர்வு

2018 ஏப்ரல்-ஜூன் காலாண்டு தொடங்கி, 2019 ஏப்ரல்-ஜூன் காலாண்டு வரை தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்து வந்தது. 2018 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 8.1 விழுக்காடு வளர்ச்சி கண்ட பொருளாதாரம், 2019 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5 விழுக்காடு வேகத்தில் வளர்ந்தது. இந்த ஐந்து காலாண்டுகளில் வளர்ச்சியின் வேகம் சுமார் 3.1 விழுக்காட்டுப் புள்ளிகள் அளவுக்குக் குறைந்தது. அதிலும் குறிப்பாக, தனிநபர் நுகர்வின் (private consumption) வளர்ச்சி வெறும் 3.1 விழுக்காடு. இது தனிநபர் நுகர்வில் கடந்த பதினெட்டு காலாண்டுகளில் நாம் கண்டிராத மிகக் குறைவான வளர்ச்சி.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தீர்மானிப்பதில் தனிநபர், குடும்பங்கள் செய்யும் நுகர்வின் பங்கு கிட்டத்தட்ட 60 விழுக்காடு. மக்கள் பொருட்கள் நுகர்வதைக் குறைத்துக் கொண்டால் அது பல தொழில்களில் முதலீடுகளை பாதிக்கும்; அது வேலையிழப்புகளையும் ஏற்படுத்தும். வளர்ச்சியின் வேகம் குறையும்போது, பரவலாக பல துறைகளில் முதலீடுகள் குறையும். இதுதான் கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்துள்ளது.

2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பொருளாதாரம் எந்த வேகத்தில் வளர்ந்தது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், மின்ட் எனும் வணிகப் பத்திரிகையின் Mint Macro Tracker எனும் குறியீடு, இந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நுகர்வின் வளர்ச்சி, 2018 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியைவிடக் குறைவாகவே இருந்ததைப் பதிவு செய்கிறது.

சரிந்துகொண்டே போகும் தனியார் முதலீடுகள்!

அடுத்து நாம் தனியார் முதலீடுகளுக்கு வருவோம். பொருளாதாரம் வேகமிழந்துள்ளதால் தனியார் முதலீடுகள் வலுவிழந்து நிற்கின்றனவா… இல்லை, தனியார் முதலீடுகள் வலுவிழந்து நிற்பதால் பொருளாதாரம் வேகமிழந்து உள்ளதா எனும் சிக்கலான கேள்விக்கு மேலோட்டமான பதிலை அளித்துவிட்டு நாம் கடந்துவிட முடியாது.

2003-2008 பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததால், இந்தியாவின் பெரு முதலாளிகள் சகட்டு மேனிக்கு பொதுத் துறை வங்கிகளிடம் மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கடன் வாங்கினர். அப்பணத்தை சாலைகள், நெடுஞ்சாலைகள், எரிசக்தி, மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் என உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் முதலீடு செய்தனர்.

ஆனால், 2009-க்குப் பிறகு, வட்டி விகிதம் உயர்ந்ததாலும், அரசின் கொள்கை முடிவுகள் பலவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டதாலும், பல திட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர அரசின் அனுமதியும், வங்கியிலிருந்து கடனும் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பெரு முதலாளிகள் கடனைத் திருப்பித்தர முடியாத நிலைக்கு வந்தனர்; பொதுத் துறை, தனியார் வங்கிகளின் செயல்படாத சொத்துகளின் (NPA) பங்கு வேகமாக வளர்ந்தது. செயல்படாத சொத்துகளைச் செயல்படவைக்க வங்கிகள் முயற்சி செய்தபோதும், அவற்றில் பல சொத்துகள் வாராக்கடன் (bad debts) ஆகிவிட்டன. 2018 மார்ச் முடிவில் ரூ. 10.4 லட்சம் கோடி மதிப்புள்ள செயல்படாத சொத்துகளை வங்கிகள் வைத்திருந்தன.

வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாதபோது, புதிய முதலீடுகளைத் தனியார் நிறுவனங்கள் எப்படி மேற்கொள்வது? 2010-11 முதல் 2016-17 வரை ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் கார்ப்பரேட் வருமானவரி செலுத்திய நிறுவனங்கள் தாக்கல் செய்த வருமானவரி அறிக்கைகள் வழியே, தனியார் முதலீடுகள் குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை நாம் அட்டவணையில் பார்ப்போம்.

அட்டவணை 1: முறை சார்ந்த பெருநிறுவனங்களின் முதலீடுகள், உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அவற்றின் பங்கு 2010-11 – 2016-17

ஆதாரம்:https://www.thehindu.com/opinion/op-ed/a-politically-inconvenient-data nugget/article29214638.ece

புதைகுழியில் பொருளாதாரம்

பணமதிப்பழிப்பு நடைபெற்ற நிதியாண்டில் முதலீடுகளின் மதிப்பு முந்தைய நிதியாண்டை விட 60 விழுக்காடு குறைவாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 2010-11 – 2016-17 காலத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தனியார் முதலீடுகளின் பங்கு தொடர்ந்து சரிந்துகொண்டே வந்தது என்பதே.

2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தனியார் நிறுவனங்கள் அறிவித்த புதிய முதலீட்டுத் திட்டங்களின் (new private sector investment projects) மதிப்பு, சென்ற காலாண்டைவிட 5 விழுக்காடு குறைவு; 2018 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அறிவிக்கப்பட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பைவிட 70 விழுக்காடு குறைவு என்று Centre for Monitoring Indian Economy (CMIE) தரும் தரவுகள் தெரிவிக்கின்றன. உற்பத்தித் துறை, சேவைத் துறை இரண்டிலுமே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், இது கடந்த 16 ஆண்டுகளில் நாம் காணாத வீழ்ச்சி என்கிறது CMIE. இதற்கு முற்றிலும் மாறாக, பொதுத் துறை முதலீடுகள் 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 36 விழுக்காடு அதிகரித்து இருந்தாலும், 2018 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அறிவிக்கப்பட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பைவிட46 விழுக்காடு குறைவு.

பொருளாதாரத்தில் கிராக்கி பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், நிதித்துறை (வங்கிகள் + வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள்) வாராக்கடனில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருப்பதாலும், தனியார் பெருநிறுவனங்கள் வாங்கிய கடனைத் திருப்பித்தர இயலாமல் தடுமாறுவதாலும் நாட்டில் பொருளாதாரம் வேகமிழந்துள்ளது. பலமுனைகளில் தொலைநோக்கோடு செயல்பட்டால்தான் இந்தப் புதைகுழியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

கட்டுரையாளர் குறிப்பு : நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share