சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதாரத்தில் நூறு நாள் வேலைத் திட்டம்!

Published On:

| By Balaji

பேராசிரியர் நா.மணி

பங்குனி மாதத்தின் உச்சி வெயில். கொதிக்கும் தார் சாலையில் சர்க்கரைப் பாகு ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி வேகமாக விரைந்து சென்று கொண்டு இருக்கிறது. அதிலிருந்து சர்க்கரை பாகு சொட்டுச் சொட்டாக தார்சாலையில் விழுந்து கொண்டே செல்கிறது. அந்த கொதிக்கும் வெயிலிலும் ஒரு கூட்டம் ஓடிச் சென்று அந்த நெற்றிப் பொட்டளவு சர்க்கரை பாகை நாக்கால் நக்கி பசியாற்ற முயற்சி செய்கிறது. 1930களில் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்தை விளக்கும் ஒரு திரைப்பட காட்சி இது. இவ்வளவு கொடிய நிலை ஏன் வந்தது என அன்றைய உலகறிந்த பொருளாதார மேதை ஜான் மேநார்டு கீன்ஸிடம் கேட்கிறார்கள். அரசு, சந்தை நடவடிக்கைகளில் தலையிடாமல் இருந்ததும் சமூக நலத் திட்டங்களுக்கு செலவு செய்யாமல் இருந்ததுமே காரணம்” என்கிறார் கீன்ஸ். “இப்போது முற்றாக முடங்கி கிடக்கும் பொருளாதாரத்தை எப்படி மீண்டும் மறுமலர்ச்சி அடைய செய்வது” என்று கீன்ஸிடமே கேட்கிறார்கள். “பொதுச் செலவை அதிகரிப்பது ஒன்றே வழி” என்கிறார் கீன்ஸ். “எல்லாப் பொருளாதார நடவடிக்கைகளும் நின்று கிடக்கும் போது எப்படி பொதுச் செலவை கூட எப்படி செய்வது” என்று கேட்கிறார்கள். “மக்களிடம் சென்று சமாதியை இடிக்கும் படி கூறுங்கள். மீண்டும் கட்டும் படி கூறுங்கள். இரண்டு வேலைக்கும் கூலி என்ற பெயரில் மக்களிடம் பணத்தை கொடுங்கள்” என்றார் அந்த மாமேதை கீன்ஸ்.

ADVERTISEMENT

ஆளும் அரசுகளுக்கு புரிந்தது. உடனடியாக செயல்பாட்டில் இறங்கின. ஏதோ ஒரு வேலையின் பெயரில் அரசின் பணம் மக்களின் கைக்கு போனது. மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனார்கள். பொருளுக்கு வாங்குவோர் கிடைத்ததும் சந்தை மறுமலர்ச்சி அடையத் தொடங்கியது. பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் சுற்றத் தொடங்கியது. மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாமல் அதாவது வேலை இல்லாமல், சந்தையில் உள்ள பொருட்களை வாங்க ஆளில்லாமல் பொருளாதாரம் முடங்கிப் போகும் போது அதனை அரசு இப்படித் தான் சரி செய்ய வேண்டும். இதுவே கீனிஸியப் பாதை.

இது ஒரு முன் கதை சுருக்கம். 1930களின் மந்தநிலை நீங்கி மீண்டும் நல்ல பொருளாதாரம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1980களில் மீண்டும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றத் தொடங்கியது. இதனைச் சரி செய்யும் வழி முறையாக தாராளமயமாக்கல், தனியார்மயம், உலகமயமாக்கல் நடைமுறைக்கு வந்தது. இப்போது பொருளாதார நெருக்கடிகளை சரிசெய்ய கீன்ஸின் தீர்வுகளுக்கு மாற்றாக பொதுச் செலவை குறைக்கும் நடைமுறையை தாராளமயமாக்கல் ஆதரவு பொருளாதார அறிஞர்கள் பரிந்துரை செய்தனர்.

ADVERTISEMENT

100 நாள் வேலைத் திட்டத்தின் பின்னணி

1990 களின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக நியமித்தது. அவர் தாராளமயமாக்கல் கொள்கைகளை முழுமையாக அமலாக்கம் செய்யும் வண்ணம் இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைத்தார். அவர் ஒரு கீனிஸிய பார்வை கொண்டவர். இந்த தாராளமயமாக்கல் கொள்கைகள் நீண்ட காலத்தில் ஏழை பணக்காரர் ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்து ஒரு பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்று துல்லியமாக மதிப்பீடு செய்தார். அவரது மதிப்பீடு சரி என்பதை நடப்பும் ஆய்வுகளும் நிரூபிக்கிறது. 1930களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலை போல மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் ஏற்பட்டு இந்தியப் பொருளாதாரம் முட்டுச்சந்தில் நின்றுவிடக் கூடாது என்று நினைத்தார் மன்மோகன். அதன் விளைவே 100 நாள் வேலை உத்திரவாத சட்டம் வந்ததன் பின்னணி.

தற்போது மகாத்மா காந்தி வேலை உத்திரவாத சட்டம் என்று அறிப்படுகிற “100 நாள் வேலை திட்டம்” ஒன்று மட்டுமே ஒரு சட்டத்தின் வழியாக உருவானது. இதற்கு முன்னர் உருவான அனைத்தும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள். இது ஒன்று மட்டுமே வறுமை ஒழிப்புக்கான செயலை செய்யும் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த திட்டம்.

ADVERTISEMENT

வேலை உத்திரவாத சட்டத்தை மன்மோகன் சிங் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?

தாராளமயமாக்கல் கொள்கைகள் மூலம் வருவாய் வேறுபாடுகள் அதிகரித்து மக்களின் வாங்கும் சக்தி இழந்து அதன் மூலம் உருவாகும் பொருளாதார மந்தநிலையை தடுப்பதே அவரது எண்ணம்.

தற்போதைய நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட தகுதியானவர்கள் என்று அடையாள அட்டை பெற்று இருப்போர் எண்ணிக்கை 12.8 கோடிப் பேர். இதில், 7.4 கோடி பேர் தொடர்ந்து 100 நாள் வேலை பெறுவோர் பட்டியலில் உள்ளனர். கடந்த நிதி ஆண்டில் மட்டும் 234 கோடி நபர்கள் வேலை பெற்று உள்ளனர். அதாவது (234×229=53586) 53,586 கோடி ரூபாய் அளவுக்கு கூலியாக பெற்று உள்ளனர். இந்த பணத்தை கூலியாக பெற்று உள்ள உழைப்பாளி மக்கள் ஒரு ரூபாய் கூட சேமிக்கப் போவது இல்லை. அனைத்தையும் சந்தைக்கு கொண்டு வந்து ஏதேனும் ஒரு பொருளை வாங்கி செலவிட்டு விடுகிறார்கள். சந்தைக்குள் செல்லும் பணம் அவர்கள் வாங்கும் பண்டங்கள் வழியாக பல்வேறு சிறு குறு நடுத்தர தொழில்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று எல்லாவற்றுக்கும் சென்று சேரும். முதலீடுகளை ஊக்குவிக்கும். வேலை வாய்ப்புகளை பெருக்கும்.

புரிந்துகொள்ள மறுக்கும் மத்திய அரசு

மன்மோகன் சிங்கின் இந்த தொலைநோக்கு திட்டம் செவ்வனே நிறைவேற்ற மத்திய அரசு மறுக்கிறது. இந்தத் திட்டத்தின் உள்ளார்ந்த நோக்கத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரவு செலவு திட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யும் நிதி அதிகபட்சம் அக்டோபர் மாதத்திற்குள் முடிந்து விடுகிறது. கடந்த நிதியாண்டில் 55,000 கோடி ஒதுக்கீடு செய்தது. இது பெரும் தொகை என்று ஊடகங்கள் பேசியது. ஆனால் இதில் கடந்த ஆண்டின் கொடுக்கப்பட வேண்டிய நிதியும் ஒளிந்து கொண்டு உள்ளது. இதோ இப்போதும் கூட கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தின் கூலி கிடைக்காமல் மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

ஒரு நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யும் நிதி ஒரு நிதி ஆண்டிற்கு போதுமானது இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஒதுக்கீடு செய்து நிதியின் 80 விழுக்காட்டை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முன் கூட்டியே அனுப்பி வைத்து விடுகிறது. இந்த நிதி தீரும் வரையில் ஒழுங்காக கூலியை கொடுப்பது இல்லை. பயன்படுத்திய நிதிக்கு ஒழுங்காக கணக்குகளை சமர்ப்பிக்காமல் இருப்பது, வங்கிக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே கணக்கு சரிபார்த்தலில் உள்ள இடைவெளி இப்படி பல காரணங்களால் போதுமான நிதி மாநில அரசுகள் கையில் இருக்கும் போது கூட உடனுக்குடன் கூலி பட்டுவாடா செய்ய இயலவில்லை.

மந்தநிலையை போக்கவே 100 நாள் வேலைத் திட்டம்

100 நாள் வேலைத்திட்டத்தின் கூலி விகிதம் 29 மாநிலங்களில், அதன் குறைந்த பட்ச சட்டக் கூலியை காட்டிலும் குறைவாகவே உள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு செய்யும் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.3 விழுக்காடு மட்டுமே. இந்த தொகை பொருளாதார மந்தநிலையை போக்க, தாராளமயமாக்கலை மனித முகத்துடன் நடைமுறைப்படுத்த பயன்படுகிறது என்ற புரிதல் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதை கூலி கொடுபடாமல் இருக்கும் போக்கு காட்டுகிறது. இது ஏழைகளின் வறுமையை குறைப்பதற்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் அதனை மந்தநிலைக்கு தள்ளிவிடாமல் இருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

100 நாள் வேலை பெறும் உரிமை கோரும் அடையாள அட்டையை பெற்றுள்ள ஒருவர் தனக்கு வேலை வேண்டும் என்று கோரினால் அவருக்கு 15 நாட்களில் வேலை தர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இப்போது வேலை கேட்டும் வேலை செய்தும் வருவோருக்குக் மத்திய அரசு முழுமையாக வேலை வழங்க வில்லை. சராசரியாக 40 முதல் 50 நாட்கள் மட்டுமே ஒருவருக்கு வேலை கிடைக்கிறது. தகுதி உடைய அனைவருக்கும் 100 நாட்களும் வேலை கொடுத்தால் அரசுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 அளவு மட்டுமே செலவாகும். அதாவது சுமார் ஒரு இலட்சம் கோடி இந்த ஏழை எளிய மக்கள் வழியாக சந்தைக்கு வரும். பொருளாதார சுழற்சி வழியாக பல்வேறு சேவைகளை செய்யும்.100 நாள் வேலை திட்டம் வழியாக இந்தப் பணம் சென்று சேர்வது என்னவோ எந்தவித வாய்ப்பு வசதியும் அற்ற மக்களுக்கு. எந்தவித அதிகாரமும் இல்லாத மக்களுக்கு.

100 நாள் வேலைத் தீட்டம் நீர்த்துப்போனால்: பாதிப்புகள்?

இத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படும் பற்றாக்குறை. மத்திய அரசிடம் இருந்து மக்களுக்கு வந்து சேர்வதில் ஏற்படும் சுணக்கம். வேலையை செய்துவிட்டு கூலிக்காக ரோட்டில் கூப்பாடு போட்டு நிற்க வேண்டிய அவலம் எல்லாம் சேர்த்து 100 நாள் வேலை திட்டத்தின் மீதே பெரிய அவநம்பிக்கையை . நூறு நாள் வேலைத் திட்டம் நீர்த்துப் போகும். இதன் காரணமாக பொருளாதார மந்தநிலையை மட்டுப்படுத்தும் ஒரு கருவி காணாமல் போவது மட்டுமல்ல, இந்திய இயற்கை வள மேலாண்மையில் இத்திட்டம் உள்ளிட்ட பணிகளில் அது செய்துள்ள மகத்தான பங்களிப்பும் நின்று போகும்.

அத்தோடு இப்போது மத்திய அரசு செய்யத் துணிந்துள்ள தூய்மை இந்தியா திட்டம் பாரத் மிஷன் திட்டம் பாரதப் பிரதமர் வீட்டு வசதி திட்டம் ஆகிய பல திட்டங்களின் திட்டச் செலவுகள் பன்மடங்கு உயரும். இதுதவிர வறட்சி மேலாண்மை, வேளாண்மை நெருக்கடியை சமாளித்தல், வானம் பார்த்த பூமியில் வாழும் மக்களின் வாழ்வுக்கு உதவுதல் போன்ற பணிகளிலும் 100 வேலைத் திட்டத்தின் சிதைவு பாதிக்கும். எனவே மத்திய அரசு இந்த பொருளாதார கணக்கீடுகளை நாட்டின் நலன் கருதி புரிந்து கொண்டு 100 வேலை திட்டத்தை இதய சுத்தியோடு நடைமுறைப்படுத்த முயல் வேண்டும்.

கட்டுரையாளர் : பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share