சிறப்புக் கட்டுரை: இங்கே எரிந்துகொண்டிருப்பது உயிர்கள்; அரசியல் அல்ல!

Published On:

| By Balaji

நரேஷ்

அமேசானே இன்னும் அணைந்தபாடில்லை, அதற்குள் ஆரம்பித்துவிட்டது இந்தோனேசிய காட்டுத் தீ அரசியல். காட்டுத் தீ ஏற்படுகிறது என்றால், அங்கே ஏராளமான உயிர்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் செய்தி. ஆனால், உலக ஊடகங்களோ அரசியலை மையமாக்கி, ஆபத்தை அடுத்த இடத்தில் வைக்கின்றன. பிரேசிலில் பொல்சனாரூ என்ற ஒருவர் குற்றம்சாட்டப்பட்டார் என்றால், இந்தோனேசியாவில் பரவிவரும் காட்டுத் தீயில் ஒட்டுமொத்த மலேசியா எரிந்துகொண்டிருக்கிறது. இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீக்கான காரணமாக, அந்நாடு மலேசியாவைக் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத் தீ நிகழ்வுகளைப் பொறுத்தவரை, இந்த நாளில் இவ்வாறு ஆரம்பித்தது என்பதை அறுதியிட்டுக்கூற முடியாது. இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ நிகழ்வு, எல்லா வருடமும் ஏற்படக்கூடியதுதான். கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால், உருவான புகை அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூருக்கும் பரவி, அந்நாட்டு மக்களும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த வருடம் இன்னும் கூடுதலான வீரியத்துடனும், கட்டுப்படுத்த முடியாத புகையுடனும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது இந்தோனேசிய மழைக்காடுகள்.

இது எவ்வளவு அபாயகரமான சூழல் என்பதை அறிந்துகொள்ள, இந்தோனேசிய ஊடக செய்திகள் உதவியாக இருக்கும். காற்று மாசு காரணமாக மட்டும் 400 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 10,000-த்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வான்வழிப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. மேலும், காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், சில வேளைகளில் சுமார் 300 மீட்டர் வரை மட்டுமே பார்க்க முடிகிறது. சுமத்ராவில் இருக்கும் விமான நிலையம் மூடப்பட்டது. பல்வேறு விமான நிலைய சேவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ரியாவ், ஜாம்பி ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம், அபாயகரமான அளவை எட்டியிருக்கிறது.

இதுவரை 5,062 தீ ஏற்படும் பகுதிகளில் காட்டுத் தீ நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 ராணுவ வீரர்கள் மூலமாக 239 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறது இந்தோனேசிய அரசு. இங்கே எரிந்துகொண்டிருக்கும் தீ, மலேசியாவில் புகைய ஆரம்பித்தது. மலேசிய மக்கள் பாதிக்கப்படுவதற்கு இந்தோனேசியாதான் காரணம் என்று மலேசிய அரசாங்கம் குற்றம்சாட்ட, ‘மலேசியாவில் நிலவும் காற்று மாசுக்குக் காரணமான எல்லா புகையும் இந்தோனேசியாவிலிருந்து வந்தவையல்ல. “இந்தோனேசிய அரசாங்கம் காட்டுத் தீயை அணைக்க அதன் திறனுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு வருகிறது” என்று இந்தோனேசிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் சிடி நுர்பய பகர் (Siti Nurbaya Bakar) பதிலளிக்கிறார். தீயணைப்பு பணியில் ஏற்கனவே 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக 17 ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் தனியார் வசம் உள்ள ஹெலிகாப்டர்களையும் பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கூடவே, இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீக்கு மலேசியாவில் செல்வாக்கு பெற்ற பாமாயில் தொழிற்சாலையுடன் சேர்த்து நான்கு நிறுவனங்கள்தாம் காரணம் என்று இந்தோனேசியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது இந்தோனேசிய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று மலேசியா மறுதளித்துள்ளது.

அரசியல் சண்டைகள் இவ்வாறு அனல் பறக்க, மக்கள் வேறு வழியில்லாமல் பிரார்த்திக்க ஆரம்பித்தனர். சுமத்ராவில் உள்ள பேகன்பர் நகரின் ஆளுநர் அலுவலகத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். “நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். தற்போது அல்லாவிடம் மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளோம்” என்றார் அந்நகரின் துணை ஆளுநர்.

இங்கே மக்கள், நாடு, அரசியல் என்பதைத் தாண்டி பூமியின் மிகப்பெரிய இயற்கை வளமான மழைக்காடுகள் அச்சுறுத்தும் அளவில் அழிந்துவருகிறது என்பதுதான் நாம் கவனத்தில்கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி. ஒரு பிரச்சனை, இயற்கை சார்ந்த பேரழிவாக இருக்கும் வரை அதற்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. அது அரசியலாக்கப்படும்போதே ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. “அமேசான் காடுகள் எரிந்தபோது எல்லாரும் கதறினாங்க. எல்லா ஊடகமும் குறைந்தபட்சம் செய்தியையாவது வெளியிட்டது. இந்தோனேசிய காடுகள் எரிந்துகொண்டிருப்பதை பற்றி ஒரு செய்தியைக்கூட பார்க்க முடியலையே. ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுகிற பேரழிவுகள் குறித்து உலக ஊடகங்களும் சரி, உள்ளூர் ஊடகங்களும் சரி, கவனிக்கிறதுகூட இல்லை. இதுதான் இங்கே சுற்றுச்சூழல் பத்தி பேசுறவங்ககிட்ட இருக்கிற பிரச்சினை. இரண்டுமே மழைக்காடுகள்தானே? அதை ஏன் நாடுகளா பிரித்துப் பார்க்கிறோம்?” என்றார் நீயா நானா நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி.

இது இரு நாடுகளுக்கான பிரச்சினை அல்ல. இது அரசியலுக்கான களம் அல்ல. இது ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்துக்கான வளம். அவை அதிவேகமாக அழிக்கப்படுகிறது என்றால், மனித குல வரலாறு கடைசி பக்கங்களில் முற்றுபெறுகிறது என்பது பொருள். இதை மனிதர்கள் புரிந்துகொள்ளும் கணத்தில் செயலாற்றுவதற்கான நேரம் இருக்காது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share