வித்யா சுப்பிரமணியம்
தமிழில் சிவராமன்
(காலைப் பதிப்புக் கட்டுரையின் தொடர்ச்சி)
வெறுப்பும் வன்முறையும் நிறைந்த கலாச்சாரமாக கனகச்சிதமாக தயார் செய்யப்படும் நரகத்துக்குள் நமது குடியரசு தலைகுப்புற விழும் காட்சிக்கு முடிவேதும் உண்டா? இருபதே ஆண்டுகள் முன்புவரை கூட அரசு நியாயமாக நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை மங்கிய போதிலும் 1992-93 இலும் 2002 இலும் நடந்த கோர சம்பவங்களுக்குப்பிறகும் பரந்த மக்களுடைய நற்குணத்திலும் நமது மகத்தான நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை இருந்தது.
ஒப்பீட்டளவில் அற்பசொற்ப அளவுக்கே காட்டுமிராண்டித்தனம் ஊடுருவியிருந்தது. நாட்டின் பல பகுதிகளில் வகுப்புவாதம் வளர்ந்துவந்தாலும் நமது சக தேசத்தினரில் பெரும்பாலோர் நம் குடியரசின் அடிப்படை விழுமியங்கள் சிலவற்றை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்று நாம் உணர்ந்தோம்.
“கடந்த மாதம், டெல்லியில் என் பல்கலைக்கழக நாட்களில் எனக்கு முஸ்லீம் நண்பர்களாக இருந்தவர்களில் இருவர் இந்தியாவைவிட்டு குடிபெயர்ந்து செல்வது குறித்து ஆலோசனை கேட்டு என்னை அழைத்தனர். அவர்கள் நல்ல நிதிவசதியுடனும் நல்ல வேலைவாய்ப்பிலும் இருந்ததால் ஏன் செல்கிறீர்கள் என கேட்டேன். ‘குழந்தைகள் பாதுகாப்பாக வளர்வது இந்நாட்டில் இனியும் சாத்தியமில்லை. பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது’ என இருவரும் கூறினர்”, என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
நான் கலந்துரையாடிய முஸ்லிம்கள் இந்தியாவில் முதல்முறையாக அத்துமீறுவதற்கு அஞ்சாத ஒரு அரசாங்கம் உள்ளது என்றும் சொல்லிலும் செயலிலும் அது தீயசக்தி போன்றது என்றும் அது வகுப்புவாத வெறியையும் வெறுப்பு உமிழ்வதையும் மதிக்கத்தக்கதாக மாற்றியுள்ளது என்றும் முஸ்லிம்கள் என்றாலே தேசவிரோதிகள் என்ற பார்வையை அது பரவலாகியுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.
முஸ்லீம் நலன்களெல்லாம் பிரிவினைவாத நலன்களாக மாறும், எனவே அவை தேசிய நலன்களுக்கு எதிராக இருக்கும் என்பதே இதன் தர்க்கரீதியான முடிவு. எப்போது தேசிய நலன்கள் காரணங்காட்டப்படுகிறதோ அப்போது முஸ்லிம்களுக்கு பாதகமளிக்கும் வகையில் ஆனால் இந்துப் பெரும்பான்மையின் முழு ஆதரவுடன் வரலாறு திருத்தியெழுதப்படலாம், புனித ஒப்பந்தங்கள் மீறப்படலாம். அரசியல்சட்டப்பிரிவு 370 இன் கீழ் நிலவிய காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கியதும் 5 ஆகஸ்ட் 2019 அன்று அதைத்தொடர்ந்து நடந்த இதர நிகழ்வுகளும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தைத் தவிர வேஅஎறு எந்த அரசாங்கத்திலும் நிகழும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது.
அது ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இல்லாமல் செய்ய சட்டமியற்றியது, மாநிலத்தை இரண்டாகக் கூறுபோட்டது மற்றும் பிரதான நீரோட்ட இந்திய ஆதரவு தலைவர்களை கைதுசெய்து சாமான்ய காஷ்மீரிகள் சகஜமாக பயணிக்கவும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும் முடியாதவண்ணம் முற்றுகையிட்டு முடக்கி அவர்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அதையடுத்த 100 நாட்களில் இம் முற்றுகை முடக்கம் ஓரளவுக்கே தளர்த்தப்பட்டது. முஸ்லீம் இளைஞர்களைப் பிடித்து தூக்கி செல்லுதல், கர்ப்பம்தரித்திருந்த பெண்கள் தமது குழந்தைகளை இழந்தது, வயதுமுதிர்ந்த பெற்றோர் தமது குழந்தைகளுடன் தொடர்பற்று போனது மற்றும் உளவியல்ரீதியில் உடைந்துபோனது உள்பட அம்மக்கள் உடல்ரீதியிலும் மனரீதியிலும் கடும் கஷ்டங்களை அனுபவித்தது குறித்து எண்ணற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரும் அயோத்தியும்!
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், காஷ்மீரில் சிவில் உரிமைகளை மீட்பது குறித்த பல அவசர மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு நேரம் கிடைக்கவில்லை. காஷ்மீர் உயிர் மற்றும் உரிமைகள் சம்பந்தப்பட்டதொன்றாக இருந்தது, இப்போதும் அப்படியே இருக்கிறது. ஆனால் இருப்பதிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதியரசர்கள் அதைவிட அயோத்யாவுக்கு முன்னுரிமை தந்தனர். அன்றாட அவசர விசாரணையின் மூலம் அவர்கள் அதைக் கையிலெடுத்தபோது தகறாரிலிருந்த இடம் முழுவதையும் இந்துக்களுக்கு தூக்கிக்கொடுக்க மட்டுமே அதைச் செய்தனர். நீதிமன்றமே முன்வைத்த வாதங்கள் மற்றும் தர்க்கங்கள்படி இது அநியாயமாக இருந்தாலும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
முன்பு இருந்த ராமர் கோவிலை இடித்தது தள்ளித்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற இந்து தரப்பின் மைய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மறுபக்கமோ, காலிகள் மீண்டும் மீண்டும் மசூதியின் புனிதத்தைக் கெடுத்து இறுதியில் அதைத் தரைமட்டமாக்கினர், இந்த நடவடிக்கைகள் முஸ்லிம்களை மோசமாகி காயப்படுத்தியுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. ஆனால் அவர்களது சொத்தை திருப்பி ஒப்படைப்பதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு மாற்று பரிகார நிலம் வழங்க நீதிமன்றம் முடிவு செய்தது.
மேற்குறிப்பிட்ட முஹம்மது ரியாஸ் கூறியது போல, “வழக்கோ சட்ட உரிமைகள் சம்பந்தப்பட்டது. உச்சநீதிமன்றம் செய்தது என்னவென்றால் நாங்கள் பெரும்பான்மையினரின் நாடு ஒன்றில் வாழும் சிறுபான்மையினர் என்று எங்களுக்கு தெரிவிப்பதற்கு ஒப்பானது”.
காஷ்மீர் முஸ்லிம்கள் எப்போதுமே இந்தியாவிலிருந்து அந்நியப்பட்டிருந்தனர். சமீப காலம் வரை இந்திய பிரதான நீரோட்ட முஸ்லிம்கள் அவர்களோடு தங்களை இனங் காட்டிக்கொள்ளவில்லை. இந்நிலை 5 ஆகஸ்ட் 2019 அன்று மாறியது. ஆட்சியாளர்கள் தாங்கள் மனதுவைத்தால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை அது உணரவைத்தது.
ரிசர்ச் மற்றும் அனாலிசிஸ் விங் (Research and Analysis Wing/RAW) முன்னாள் தலைவர் AS தௌலத் ஒரு பேட்டியில் என்னிடம் கூறியது போல, “ காஷ்மீரை ஒரு யூனியன் பிரதேசமாகத் தரம்குறைத்தது காஷ்மீரிகளை அவமானப்படுத்த மேற்கொள்ளப்பட்டது, அவர்களை இழிவுபடுத்திக்காட்ட மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, அயோத்யா தீர்ப்பும் இந்தியாவாழ் முஸ்லிம்களுக்கு அதையே செய்தது. அவர்களை அவமானப்படுத்தி இழிவுபடுத்தியது. அதன் விளைவாக, காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் இந்திப் பகுதி முஸ்லிம்களுக்குமிடையே இருந்த இடைவெளி குறைந்துவிட்டது. இருதரப்பினருமே ஒருவர் மற்றொருவருடைய மனக்கசப்புகளையும் பாதுகாப்பின்மைகளையும் புரிந்துகொண்டு ஒருவரோடொருவர் இனங்காட்டிக்கொள்ள முடியும்.
எல்லையையொட்டிய மாவட்டமான ராஜோரியைச் சேர்ந்த 26 வயதான காஷ்மீரி முஸ்லீம் அசார் அமிம் தன்னையும் இதர காஷ்மீர் முஸ்லிம்களையும் பொறுத்தவரை அயோத்யா தீர்ப்பு இரட்டிப்பு துரோகமாகும் என்றார்: “வரும் தாக்குதல்களுக்கு முடிவேயில்லை. காஷ்மீரில் மத்திய அரசு எங்களுக்கு செய்ததைக் கண்டு நாங்கள் ஏற்கனவே மனமுடைந்து போயிருந்தோம். இந்த தீர்ப்போ எங்களை முற்றிலுமாக நம்பிக்கையிழக்கச் செய்துவிட்டது. கடந்த சில மாதங்கள் எங்களுக்கு ஒரு பயங்கரக் கனவாக அமைந்தன. நாங்கள் நிரந்தர பதற்றத்தோடும் அச்சத்தோடும் இருந்துவந்துள்ளோம்”.
காஷ்மீர் பயங்கரவாதிகளின் மைய முகாம் என்று முத்திரை குத்தப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்றுவரும் அசார், “ காஷ்மீர் தகவல் தொடர்பு இருட்டடிப்புக்கு உள்ளாகியிருந்த நேரமெல்லாம் காஷ்மீருக்கு வெளியே வாழும் காஷ்மீரிகள் காஷ்மீருக்குள் வசிக்கும் தங்கள் உறவினர் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டனர். ஆனால் அயோத்தி தீர்ப்புக்கு முந்தைய நாட்களில் இதற்கு நேர்மாறாக நடந்தது. என் பாதுகாப்பு குறித்து அறிய என் தாய் என்னை பதற்றத்தோடு அழைத்தார்”, என்று கூறினார்.

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தைச் (AMU) சேர்ந்த ஷர்ஜீல் உஸ்மானி 22 வயது நிரம்பியவர். அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகமோ முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டது என்பதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கான காஷ்மீர் முஸ்லீம் மாணவர்கள் பயிலும் இடமாக இருவித சுமையை தாங்கியது. தீவிர அரசியல் கருத்துகள் உடையவராகவும் அவை குறித்து எழுதிவரும் மாணவர் இயக்க செயல்பாட்டாளராகவும் இருப்பதால் ஷர்ஜீல் உஸ்மானி பல்கலைக்கழக நிர்வாகத்தின் தண்டனை நடவடிக்கைக்கு குறிப்பிடத்தக்க இலக்காக விளங்கினார். அவருடைய பாதுகாப்பு அவரது பெற்றோர்களுக்கு தலையாய கவலையாக இருந்தது. அயோத்யா தீர்ப்புக்கு முந்தைய நாட்களில் அவர்கள் அதை மேலும் ஆழமாக உணர்ந்தனர்.
அடையாளமே ஆபத்துகளாயின
ஒரிஜினலாக அஜாம்கரைச் சேர்ந்தவரும் இப்போது AMUவில் ஆசிரியராகவும் உள்ள அவரது தந்தை, பிரார்த்தனைக்கு செல்லும் போதெல்லாம் முஸ்லிம்கள் பெரும்பாலும் அணிந்துகொள்ளும் ஸ்கல் தொப்பியை கைப்பையில் வைத்துக்கொண்டு செல்லுமாறும் மசூதிக்குள் சென்ற பின்னரே அதை அணிந்துகொள்ளுமாறும் அவருக்கு கறாராக அறிவுறுத்தியிருந்தார். ஷர்ஜீல் மரபு பழக்கவழக்கங்களைக்கொண்ட முஸ்லீம் குடும்பம் ஒன்றைச்சேர்ந்தவர். அக்குடும்பத்தினர் வழக்கமாக குர்தா-பைஜாமா அணிந்து கொள்வது வழக்கம். இப்போதோ அதே ஆடைகள் சுகமின்மைக்கு காரணமாயின. “ஜுனைத் சம்பவத்திற்குப்பிறகு என்னுடைய முஸ்லீம் அடையாளத்தின் காரணமாக நான் தொல்லைக்குள்ளாகக்கூடாது என அவர்கள் விரும்பினர்”, என்கிறார் ஷர்ஜீல்.
தீர்ப்புக்கு முந்தைய இரவு ஷர்ஜீல் டெல்லியில் இந்துக்கள் வசிக்கும் ஒரு பகுதியில் தன் நண்பர்களுடன் தங்கியிருந்தார். கவலையால் பீடிக்கப்பட்டு அவரது தந்தை அலிகர் திரும்ப அவருக்கு வாடகைக்கு கார் ஒன்றை நியமித்திருந்தார். ஷர்ஜீலின் தயக்கத்தைக் கண்டு AMUவைப்போலவே முஸ்லிம்கள் அதிகமாகப் பயிலும் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள தன் நண்பரை அழைத்து ஒரு சில நாட்கள் ஷர்ஜீலைத் தன்னோடு வைத்துக்கொள்ளும்படி கேட்டார். இறுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஓக்லாவில் சில நாட்கள் இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. “ஒக்லாவோ ஜாமியாவோ, முஸ்லிம்கள் எங்கு உள்ளார்களோ அங்கேயே போ. எனது பெற்றோர் நான் முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதி ஒன்றிலேயே (ghetto) இருக்க வேண்டுமென விரும்பினர் என்று ஷர்ஜீல் பாதி வேடிக்கையாகவும் அதேநேரத்தில் மிகவும் சீரியஸாகவும் நினைவுகூர்ந்தார்.
ஷர்ஜீல் அவருடைய முஸ்லீம் நண்பர்கள் அனைவரும் ஒன்று டெல்லியை விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர் அல்லது முஸ்லிம்கள் குவிந்து வாழும் பகுதிகளிலோ அல்லது சேரிகளிலோ தஞ்சம் புகுந்த ஒதுங்கியிருந்தனர். நான் உரையாடிய பலர் கூறியது போலவே, “உண்மையில் கூறவேண்டுமானால், தீர்ப்பு வந்த தருணம் வரை நான் அறிந்த முஸ்லிம்கள் அனைவருமே “அல்லாவே அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர். முஸ்லிம்களுக்கு அனுகூலமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்கள் சிந்தனையில் அறவே இல்லை. இருப்பினும், “தீர்ப்பு வந்தவுடன் ஒரு கையறு நிலை உணர்வு ஏற்பட்டது, முஸ்லிம்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது என்ற உணர்வு ஏற்பட்டது”: “கோவிலை அங்கேயேதான் கட்டுவோம்” என்பதை நீதியியல் மொழியில் நீதிமன்றமும் கூறியது”, என்றார் அவர்.
ஜேஎம்யுவும் ஏஎம்யுவும்

அரசியல் செயல்பாடு AMU வளாகத்தின் மாணவர் வாழ்க்கையின் ஒருபகுதியாக எப்போதுமே இருந்து வந்துள்ளது. முஸ்லீம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் AMU ஒரு பாதுகாப்பான வட்டாரமாகக் கருதப்பட்டது. செப்டம்பர் 2015 இல் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் அக்லாக் அடித்துக்கொல்லப்பட்டதற்கு எதிராகவும் ஜூலை 2016 இல் காஷ்மீரில் புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கட்டமைத்தனர். ஆனால் 2016 இறுதியில் நிர்வாகம் அதிகரித்த தீவிரத்துடன் அனைத்து ஆர்ப்பாட்டங்கள் மீதும் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடத் தொடங்கியது. அநேகமாக ஹிந்துத்வாவின் எழுச்சியையும் உத்திரப் பிரதேசத்திலேயே வரவிருக்கும் ஆட்சி மாற்றத்தையும் மனதில் கொண்டு நிர்வாகம் இவ்வாறு செய்தது. JNU வளாகத்திலிருந்து ஒரு அராஜகச் செயல் என கண்கூடாகத் தெரியுமளவுக்கு நஜீப் அஹ்மது காணாமல் போகச் செய்யப்பட்டபோது AMU மாணவர்கள் அவருக்கு ஆதரவாக ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர். அன்று அவர்களை போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது மட்டுமின்றி அவர்கள் மீது டஜன் கணக்கில் FIR களையும் பதிவு செய்தது. “கொலைமுயற்சி, சூறையாடல் மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகளுடன் கண்மண் தெரியாமல் மாணவர்களுக்கு எதிராக FIR கள் பதிவு செய்யப்பட்டுள்ளன”.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து ஷர்ஜீல் முகநூலில் ஒவ்வொருமுறையும் பதிவு செய்தபோது UP போலீசின் மிக உயர்ந்த மட்டத்திலிருந்து தனக்கு எச்சரிக்கை அழைப்புகள் வந்ததாக ஷர்ஜீல் கூறினார்.
“அரசியல்சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது நான் டெல்லியிலிருந்தேன். முகநூலில் அதைக் கடுமையாக விமர்சித்தேன். பின்னர் அலிகர் திரும்பியபின் போலீசார் நெருங்கிய நண்பர் ஒருவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து என்னை தொலைபேசியில் அழைக்கும்படி கூறியது. நான் அவருடைய அழைப்புக்கு பதிலளித்தபோது பயந்துபோன என் நண்பன் தொலைபேசியை காவலர் ஒருவரிடம் கொடுத்தான். அவர் என் முகநூல் பதிவை நீக்கும்படியும் இல்லாவிட்டால் நானும் எனது பெற்றோர்களும் நினைத்துக்கூடப்பார்க்க முடியாத அளவுக்கு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெளிவாகக் கூறினார்”. முன்பு AMU வின் இஸ்லாமிய அடையாளம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக அமைந்தது என்றால் இப்போதோ அதுவே அதிகரித்த போலீஸ் அராஜகத்திற்கு அவர்களை இலக்காக மாற்றியுள்ளது”, என்று ஷர்ஜீல் வருத்தத்துடன் தெரிவித்தார்.
36 வயதான சுயேச்சையான பத்திரிக்கையாளர் சையத் ஹசன் என்பவர் 1992 இல் பாபர் மசூதிக்கு என்ன நிகழ்ந்தது என்பது எல்லோர் முன்பும் உள்ள வெளிப்படையான விஷயம். நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றம் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே கோவிலைக்கட்ட அனுமதித்திருப்பது விளக்கமளிக்கப்படமுடியாத ஒரு விஷயம். “இன்று அந்நியமாகிப்போயிருக்கும் உணர்வு ஆழமாக நிலவுகிறது. என் வாழ்க்கையில் முதல் முறையாக அதிகாரபூர்வமாகவும் சட்டரீதியிலும் நான் ஒரு இரண்டாம்தர குடிமகன் என்று உணரவைக்கப்பட்டுள்ளேன். நூற்றுக்கணக்கான பொதுப் பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமிய என இரண்டேஇரண்டு மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு அயோத்யா தீர்ப்புக்கு முந்தைய நாட்களில் பகைமையுடன் கூடிய கவனத்துக்குள்ளாயின என்பது குறித்து நீங்கள் என்ன கூறமுடியும்? தீர்ப்பை விமர்சிக்கக்கூடாது என இரண்டு பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கூறப்பட்டது.
எங்களுக்கு பேச்சுரிமைகூட இல்லையா? சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்தது கோவிலா மசூதியா என்பது எனக்கு ஒருபொருட்டே இல்லை என்றார் சையத் ஹசன். “அது கோவிலா மசூதியா என்பது குறித்த விவகாரமில்லை. அது நீதி பற்றியது. மாறாக எங்களுக்கு கிடைத்ததெல்லாம் அவமானமே”.
நம்பிக்கை கொண்ட ஒரு சிறு எண்ணிக்கையினர்
நான் கலந்துரையாடியவர்களில் ஒரு சிறு எண்ணிக்கையினர் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களுக்கு ஏற்பட்டவை பெரும் ஏமாற்றங்கள், இருப்பினும் அவர்கள் இந்தியா குறித்து ஒரு சாதக உணர்வுடன் இருந்தனர். மேற்குறிப்பிடப்பட்ட முஹம்மது ரியாஸ் உச்சநீதிமன்ற தீர்ப்பு நங்கள் எதிர்கொள்ளும் பாரபட்சத்தின் ஒரு வெளிப்பாடு என அங்கலாய்த்தார். “ஆனால் நம்பிக்கையை இழக்க இதுவே காரணமாகாது. நாங்கள் முற்றிலும் இந்தியர்களே. இம்மண்ணின்மீது மற்றவர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வுளவு உரிமை எங்களுக்கும் இருக்கிறது. நீங்கள் எங்களை அச்சுறுத்தலாம், எங்களுக்கு நீதி மறுக்கலாம், ஆனால் நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்போம். எங்களுக்கு இந்நாட்டின் மீது விசித்திரமானதொரு நம்பிக்கை இருக்கிறது. ஏராளமான கோபம் இருந்தாலும் எங்கள் அடையாளம் குறித்த ஒரு பெருமையும் அதற்கான ஒரு அறுதியிடலும்கூட நிலவுகிறது. நான் முஸ்லீம், நான் இந்தியனும்கூட.”
வட இந்திய முஸ்லிம்கள்-தென்னிந்திய முஸ்லிம்கள்
நாற்பது வயதான சய்யது உபைதூர் ரஹ்மான் டெல்லியின் ஜாமியா நகரில் வசிக்கிறார், புத்தகங்கள் வெளியிடும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். வடஇந்திய முஸ்லிம்கள் தங்களை போதிய அளவு மேம்படுத்திக்கொள்ளவில்லை, எனவே தங்கள் கல்வித்தரத்தை பெருக்கிக் கொள்வதன்மூலம் ஏழ்மையையும் பாரபட்சத்தையும் எதிர்கொண்டுள்ள தென்னிந்திய முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு நிகராக இவர்கள் இல்லை.
“உச்சநீதிமன்றத்தின்மீது வலுவான நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. என்னதான் நடந்தாலும் மிக உயர்ந்த இந்த நீதிமன்றம் எங்களை விட்டுக்கொடுக்காது என நாங்கள் நம்பினோம். அந்த நம்பிக்கை ஆட்டங்கண்டுள்ளது. இருந்தாலும் எங்கள் எதிர்காலம் பிரகாசமாகவே உள்ளது என நான் நம்புவேன். முஸ்லிம்கள் முழுமையாக தங்களை இந்தியாவோடு இணைத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் அரசியல்சட்டரீதியான சமத்துவம் என்ற அடிப்படையில் தேசம் கட்டமைக்கப்படவேண்டும் என விரும்புகின்றனர் மற்றும் அவர்கள் தொடர்ந்து இந்த நாட்டுக்காக பணிபுரிவார்கள்”, என்றார் அவர்.
இருப்பினும் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் மேலோங்கிய உணர்வு பெரும் ஏமாற்றமாகும். கோபத்தை எட்டும் அளவுக்கு அது உள்ளது. அரசின் மற்றும் பெரும்பான்மை சமூகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு இலக்காகியிருக்கிறோமே என்பதில் கோபம் மற்றும் தாங்கள் உள்ளுணர்வுடன் நம்பிய ஒரே நிறுவனத்தால் கைவிடப்பட்டோமே என்பதில் உள்ள கோபம்.
இந்த நம்பிக்கையின்மை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நிரந்தர பாதிப்பு குறித்து கவலைப்பட்டோ ஏனோ கருத்துரையாளர்கள் ஃபைஜான் முஸ்தாபாவும் அய்மான் மொஹம்மதும் முஸ்லீம் சமூகத்தின் மனோவலிமையை உயர்த்த 12 நவம்பர் அன்று தி இந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை பிரசுரித்தனர். ‘அயோத்யா தீர்ப்பு–முஸ்லீம் தரப்பில் வழக்காடியவர்களுக்கு கிடைத்த பல சாதகங்கள்’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில்,
“நீதிமன்றம் சட்டம் என்ன என்பதை சரியாக எடுத்துரைத்த பின்னரும் அதை யதார்த்த விவரங்கள் விஷயத்தில் தவறாக அமல்படுத்தியிருக்கும் போதிலும் பொதுவாக சட்டவழிப்பட்ட ஆட்சியையும் சிறுபான்மையினர் உரிமையையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க விரும்புபவர்களும், குறிப்பாக முஸ்லிம்களும், இந்த தீர்ப்பால் நிராசையடையத் தேவையில்லை”, என்று வாதிட்டுள்ளனர்.

அயோத்தி தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவான அம்சங்கள்
முஸ்தாபாவும் மொஹம்மதும் இந்த தீர்ப்பிலிருந்து முஸ்லிம்கள் ஆறுதல் பெறத்தக்க ஒன்பது சாதக அம்சங்களைக் கணக்கிட்டுள்ளனர். “கடவுள் ராமனே (அதாவது ராம் பிறந்த இடமே) நீதிவழிப்படி ஒரு தனிநபர் (judicial person) அல்ல” என்ற சன்னி வக்ஃபு வாரியம் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது எதிர்கால மதத்தகராறுகளை தவிர்க்க உதவும். ஒரு மதத்தின் பிரத்யேக வழிபாட்டுமுறை அடிப்படையிலேயே ஒரு இடத்திற்கு முழுமையான சொத்துரிமையை வழங்க இயலாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. “வேறு சொற்களில் கூறுவதானால், ஒரு மதத்தைவிட மற்றொரு மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது’, என முஸ்தாபாவும் மொஹம்மதும் கூறியுள்ளனர். தீவிர பெரும்பான்மையாதிக்கத்தின் தாக்குதலை நாள்தோறும் அனுபவித்துவரும் பன்மைக்கலாச்சாரத்தன்மை (multiculturalism) ஆதரவாளர்களின் செவிகளில் இது மகிழ்ச்சி சங்கீதமாக ஒலித்திருக்கும்”.
மத உரிமை சொத்துரிமையாகுமா?
அனைத்தையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால் “ராமர் கோவில் ஒன்றை இடித்துத் தள்ளி மசூதி கட்டப்படவில்லை என்ற முஸ்லீம் தரப்பு வாதிகளின் மைய வாதத்தை நீதிமன்றம் திட்டவட்டமாக ஏற்றுக்கொண்டுவிட்டது”. இதன் மூலம் “இந்து வலதுசாரிகளின் முதன்மையான சொல்லாடல் தெளிவாக நிராகரிக்கப்பட்டுள்ளது”. மேலும், “முன்பு நிலவிய கட்டுமானத்தின் மிச்சசொச்சங்கள் மசூதியைக் கட்டப் பயன்படுத்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது”. சொத்துரிமையை மதநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமேயோ அல்லது தொல்லியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு முடிவுசெய்ய முடியாது என்ற முஸ்லீம் தரப்பு வாதிகளின் வாதத்தையும் கூட நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது “லேசுப்பட்ட வெற்றியல்ல. எதிர்கால தாவாக்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”.
முஸ்தாபாவும் மொஹம்மதும் நல்லெண்ணத்தில்தான் இதைக்கூறியிருக்கிறார்கள் என்பது கண்கூடு. ஆயினும் நான் கலந்துரையாடிய முஸ்லீம் பேட்டியாளர்கள் மத்தியில் இந்த கட்டுரை ஆசிரியர்கள் பட்டியலிட்டிருக்கும் சாதக அம்சங்கள் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது என்ற உணர்வுக்கே மேலும் வலுவூட்டியுள்ளது.
முஸ்லீம் தரப்பு வாதிகள் எழுப்பிய வாதங்களில் பெரும்பான்மையானவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதென்றால், சர்ச்சையிலிருந்த இடத்துக்கு பதிலாக ஒரு துண்டு நிலத்தை அளிப்பதற்கு மாறாக சர்ச்சையிலிருந்த இடத்தையே ஏன் முஸ்லிம்களுக்கு அளிக்கவில்லை?
இந்த தீர்ப்பையடுத்த முஸ்லீம் மனபேதலிப்பை மொஹம்மது சஜ்ஜத்தும் ஜீஷான் அஹ்மதும் தொகுத்து வழங்கினர். நம்பிக்கையற்ற நிலையிலும் நம்பிக்கை கொண்டிருப்பதே இந்தியாவுக்கு ஒரே வழி என்ற தலைப்பில் நியூஸ்கிளிக் இணையதளத்தில் 17 நவம்பர் 2019 அன்று வெளியிட்ட கட்டுரையில் இந்த கட்டுரையாளர்கள் இந்த தீர்ப்பு “ஆழ்ந்த கோளாறுகளையும் பிரமிக்கவைக்கும் முரண்பாடுகளையும் கொண்டுள்ளது” என்று ஒப்புக்கொண்டாலும் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற முஸ்லீம் தரப்பு கட்சிக்காரர்களின் முடிவின் விவேகத்தன்மை குறித்து கட்டுரையாளர்கள் கேள்வியெழுப்பினர்.
5 ஏக்கர் நிலத்தை ஏற்காவிட்டால்…
நாங்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்பதே முஸ்லீம் தரப்பு கட்சிக்காரர்களின் நிலையாக இருந்துவந்துள்ளது. சாதகமற்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஹிந்துத்வா தரப்பு மறுத்ததற்கு நேரெதிராக இது இருந்தது. இப்போது அவர்களுக்கு பதிலீடாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நிலத்தை முஸ்லிம்கள் மறுப்பார்களேயானால் “சிக்கலான பாபரி தகராறுக்கு சுமுகமானத்தீர்வை அடைய அவர்கள் எப்போதுமே விழையவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். ‘இரண்டாவதாக, மறுபரிசீலனை மனு இந்த தீர்ப்பில் பட்டவர்த்தனமாகத் தென்படும் கோளாறுகள் வேண்டுமென்றே இல்லாமல் தெரியாத்தனமாக இழைக்கப்பட்ட தவறுகள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே நிச்சயமாக இருக்கும். ஆனால் நீதியரசர்கள் மத்தியில் நிலவிய ஒருமித்த உடன்பாடு இதைக் காட்டவில்லை. எனவே, நீதிமன்றம் விரும்பினால் தாமாகவே முன்வந்து (suo motto review) இதை மறுபரிசீலனைக்குள்ளாக்க ஏன் விடக்கூடாது?”
ஆனால் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு ஆலோசனை வழங்க சஜ்ஜத்தும் ஜீஷானும் இதைவிட அதிக மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு காரணத்தையும் முன்வைத்தனர்…”இந்தியா பெரும்பான்மையாதிக்கத்தில் பெருமளவு முன்னேறியிருப்பதாலும், அது வெளிப்படையாகத் தெரியவில்லையெனினும் அரசு உடந்தையாக இருப்பதாலும் முஸ்லீம் தரப்பினர் பரிசீலனை மனு ஓன்றை தாக்கல் செய்வார்களேயானால் அதை அச் சமூகத்தில் அச்சம் மற்றும் பதற்றத்தின் மட்டத்தை அதிகரிக்கும். இந்திய முஸ்லிம்கள் பலர் இந்த வழக்கில் தங்கள் தரப்பு தோற்கவேண்டுமே என பிரார்த்திக்க வேண்டிய சங்கடமான நிலையில் இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். சர்ச்சையிலிருந்த நிலம் இந்து தரப்பினருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடனேயே அவர்கள் ஒரு நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். கோபங்கொண்ட மதவெறிபிடித்த இந்துக்களுக்கு அவர்களைத் தாக்க காரணமெதுவும் இல்லை, குறைந்தது இந்த சந்தர்ப்பத்தில் இல்லை…”
2010 தீர்ப்பும் 2019 தீர்ப்பும்

இத்தகைய நிலைமைகளில் மறுபரிசீலனை கோர விரும்பும் முஸ்லீம் தரப்பு கட்சிக்காரர்கள் “முஸ்லிம்களின் பாதுகாப்பை பற்றி அதிகம் கவலைப்படவேண்டும். இந்தப் பிரச்சனை தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பது அவர்களது பதற்றத்தை அதிகரிப்பது திண்ணம்” என்று சஜ்ஜத்தும் ஜீஷானும் கூறினர்.
2010 இல், என் கேள்விகளுக்கு செவிமடுத்த முஸ்லிம்கள் இந்திய அரசைப்பற்றி பெருநம்பிக்கை எதையும் கொண்டிருக்கவில்லை , இருப்பினும் நம்பிக்கையுடனிருந்தனர். அவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து விமர்சனங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் தாங்கள் போகிறபோக்கில் அதையும் கணக்கிலெடுத்துக்கொண்டனர். அந்த தீர்ப்பும் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றும் தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது. ஆனால் தங்களைப்பற்றியே அவர்கள் கொண்டிருந்த உணர்வுகளை அது பாதிக்கவோ காயப்படுத்தவோ இல்லை. 2010 இல் நான் உரையாடியவர்களுள் ஒருவரான டெல்லி பல்கலைக்கழகத்தில் போதிக்கும் அஃப்தாப் ஆலம், “ஆம். நான் நமது 2010 உரையாடலை நினைவுகூர்கிறேன். இன்றைய நோக்கிலிருந்து பார்த்தால் 2010 எவ்வளவோ மேல் என்றும் அதிக சமன்நிலையைக்கொண்ட ஒன்று என்றும் தோன்றுகிறது. அனைத்துத் தரப்பினருக்குமே ஏதோ கொஞ்சம் கிடைத்தது இம்முறையோ நான் முற்றிலும் பேச்சற்றுப்போனேன், ஆழமாக பாதிக்கப்பட்டேன். என்ன கூறுவது? எனது அடையாளம், எனது குடியுரிமை, சமூகத்தில் சம அந்தஸ்து ஆகியன சூறையாடப்பட்டுவிட்டதாக உணர்கிறேன்…இந்தியாவின் எந்த நிறுவனத்தின் மீதும் எந்த நம்பிக்கையும் இல்லை. நீங்கள் உங்கள் தேசத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வே கொள்ளை போகுமானால் அது அபாயகரமானது….நான் மிகவும் கவலைப்படுகிறேன்”, என்றார்.
சக்கரம் முழு சுற்றை சுற்றிவிட்டது எனத் தோன்றுகிறது. இன்றைய இளம் முஸ்லிம்கள் தங்களுடைய பெற்றோர்கள் எந்த பாபர் மசூதியை விட்டு அவர்கள் தொலைதூரம் சென்றுவிட்டார்களோ அந்த பாபர் மசூதி இடித்துநொறுக்கப்பட்டதையடுத்து எந்த நிலைமையிலிருந்தார்களோ அதே நிலைமையில் இன்று தாங்கள் இருப்பதாகக் காண்கின்றனர்.
கட்டுரையாளர் குறிப்பு : வித்யா சுப்ரமணியம் அவர்கள் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான தி ஹிந்து மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளர். அவர் 2014 வரை புது டெல்லியை அடிப்படையாகக் கொண்டு தி ஹிந்துவின் இணை ஆசிரியராக பணிபுரிந்தவர். நாற்பது ஆண்டுகளுக்கு நீடித்த பத்திரிக்கையாளர் பணியில் அவர் சென்னை, மும்பை, லக்னோ மற்றும் டெல்லியில் இண்டியன் எக்ஸ்பிரஸ், தி இண்டியன் போஸ்ட், தி இன்டிபென்டென்ட், தி ஸ்டேட்ஸ்மென் போன்ற பல பத்திரிக்கைகளின் நியூஸ் பீரோக்களில் பணிபுரிந்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் தலையங்கப் பக்க எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். 2013 இல் ‘வர்ணனை மற்றும் பொருள்படுத்திக்கட்டும் படைப்புகள்’ என்ற வகையினத்தில் தலைசிறந்த பத்திரிகை படைப்புக்கான ராம்நாத் கோயங்கா விருதையும் பெற்றவர்]
Related Link:
மேலும் படிக்கக்கூடியவை: அயோத்யா தகறாரில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பு [PDF 3.86 MB மற்றும் 106 KB]. அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான தி ஹிந்து மையம், நவம்பர் 9 2019. [ https://www.thehinducentre.com/resources/article29929805.ece]
[அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம்கள் தோற்றாக வேண்டுமே என பிரார்த்தித்த தருணம்!](https://minnambalam.com/k/2019/11/26/14)