ராஜன் குறை
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில், பெரியார் பங்கேற்ற 1971ஆம் ஆண்டு சேலம் திராவிடர் கழக ஊர்வலம் குறித்து சில பிழையான, மிகையான சித்திரிப்புகளைச் செய்தது பெரியாரிய இயக்கங்களின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. துக்ளக் பத்திரிகையைப் பாராட்டி பேசுமிடத்து அவர் பெரியாரின் இறை மறுப்பை நினைவுகூர்ந்து பேசியது, அந்த ஊர்வலம் குறித்து சமூக அமைதியைக் குலைக்கும்படி சித்திரித்த துக்ளக் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதை முன்னிட்டு என்றாலும், துக்ளக் பத்திரிகையின் வளர்ச்சிக்கு அந்த நிகழ்ச்சி காரணம் என்றெல்லாம் கூறியது புனைவு. அவருடைய உட்கிடக்கை பாரதீய ஜனதா ஆதரவு மேடையில் பெரியாரின் இறை மறுப்பு கொள்கையைச் சுட்டி, அதை மிகைப்படுத்தி சித்திரித்துப் பேசுவதுதான் என்று தோன்றுகிறது.
ரஜினிகாந்தின் இந்த விழைவு புதியதல்ல என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஏற்கனவே பாபா திரைப்படத்தில் அவர் முயன்ற அரசியல்தான் இது. அவருடைய திரையுலகப் பயணத்தில் பெரிய அதிர்ச்சியை கொடுத்த படம் பாபா. பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா என்று பெரும் வெற்றிகளாக, முக்கிய பொதுவெளி நிகழ்வுகளாக மாறியிருந்த அவரது படங்களுக்குப் பிறகு திடீரென ஒரு தோல்விப் படமாக அமைந்தது பாபா. ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருப்பது போல தோல்விக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு முக்கிய காரணத்தை நாம் பரிசீலிக்க வேண்டும்.
பாபாவின் மனமாற்றம்
பாபா படத்தில் இரண்டு பாபாக்கள். ஒரு பாபா இமயமலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக ரஜினியே கூறிய பாபாஜி என்ற பாபாஜி நாகராஜ். இன்னொன்று, அவருடைய அருளால் குழந்தையாக மறுபிறப்பு எடுத்த அவருடைய சீடர்களில் ஒருவரான ரஜினிகாந்த் பாத்திரமான பாபா (இந்தப் பாத்திரத்தை ரஜினி பாபா என்று குறிப்பிடுவோம்). குழந்தையே இல்லாமல் எல்லா தெய்வங்களையும் வேண்டித் திரியும் தம்பதியருக்கு இந்த தெய்வீகக் குழந்தை பிறக்குமென்பது சாதுக்களால் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோரிடம் அந்த குழந்தை என்ன செய்தாலும் குறுக்கிட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தை இன்பங்களைத் துய்க்கும் ஒரு முரட்டு நாத்திகனாக வளர்கிறது. பாபாவின் லீலை என்னவென்றால் அந்த மனிதன் அவனாகத் தன்னுணர்வு பெற்று தன்னுடைய அருட்பிறப்பை உணர்ந்து மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்பதுதான். பல்வேறு அதிசய நிகழ்வுகள் மூலம் பாபாவின் சக்தியை ரஜினி பாபா புரிந்துகொண்ட பிறகு, மனமாற்றம் அடைந்து பாபாவிடம் செல்ல நினைக்கிறான். ஆனால் இதற்கிடையில் சில ரெளடிகள், அரசியல் தலைவர்களுடன் வரும் மோதலால் அரசியல் ஈடுபாடும் வருகிறது. தேர்தலில் ஒரு நல்ல மனிதனை வெற்றி பெற வைத்துவிட்டு இமயமலைக்குச் செல்லும்போது, அந்த மனிதர் கொல்லப்படுவதால் ரஜினி பாபா மக்களை நோக்கி திரும்பி வர படம் முடிகிறது.
இந்தத் திரைப்படத்தின் கதையைத் தான் ஒரே நாள் மாலையில் உருவாக்கியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதற்குமுன் பாபாவின் படம் இருந்த நூலிலிருந்து சில ஒளிப்புள்ளிகள், கீற்றுகள் அவருக்குள் சென்றதாக, அதனால் அவருள் பல மாறுதல்களை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். படம் வெளிவந்த சமயத்தில் தான் இமயமலையில் பாபாவைப் பார்த்ததாகக் கூறினார். பாபா யேசுநாதர் இமயமலைக்கு வந்தபோது அவரைப் பார்த்தவர், அவருக்கு யோக சித்திகளை வழங்கியவர் என்பதையும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் தன் குருவாக பாபாவை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் படத்தில் தன் பெயரையே பாபா என்று வைத்துக்கொண்டார். அதன் மூலம் தன்னை பாபாவின் அம்சம் பொருந்தியவராகக் கூறிக்கொள்கிறார் எனக் கருதலாம். படத்தின் முக்கியமான திருப்புமுனை, இறை நம்பிக்கையில்லாத ரஜினி பாபாவை மாயமாக இமயமலைக்குக் கொண்டு சென்று பாபாஜியை சந்திக்க வைக்கும் காட்சி. இதில் ரஜினி ஐயத்துடனும், விளையாட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறார். பாபா அவருக்கு அவரது எல்லைகளை உணர்த்தி, ஒரு பரீட்சையாக மந்திர உபதேசம் செய்து, ஏழு முறை அந்த மந்திரத்தைச் சொன்னால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று கூறிவிடுகிறார். ரஜினி அந்த மந்திரத்தைப் பரிசோதிக்க அதை விரயம் செய்வதும், பின்னர் சக்தியை உணர்வதும், மனம் மாறுவதும் கதை. ஆனால் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது மதுவோ, மாமிசமோ அருந்தியிருக்கக் கூடாது என்பது ஒரு முக்கிய நிபந்தனை. பொதுவாகவே மாமிசமோ, மதுவோ அருந்தக் கூடாது என்று சொல்லும்போது ரஜினி அதெல்லாம் இல்லாமல் தான் இருக்க முடியாது என்று கூறுவார்.
அதனால் மந்திரம் சொல்லும்போதாவது அவற்றை உட்கொள்ளக் கூடாது என்று நிபந்தனை மாற்றப்படும்.
தன்னை ஆசாபாசங்கள் உள்ள, நாத்திக மனோபாவம் கொண்ட ஒரு சாதாரண நபராகக் காட்டிக்கொண்டு தான் மெள்ள, மெள்ள நம்பிக்கை கொள்வதை, தெய்வீக மனிதராக மாறுவதைச் சித்திரித்தால், தன் ரசிகர்களும் பாபாவின் ஆற்றல்களையும், பாபாவின் அருளைப் பெற்ற தன் ஆற்றல்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என ரஜினி கருதியிருக்கலாம். படையப்பா படத்தில் கிட்டத்தட்ட தெய்வமாகவே மாறிவிட்ட தன் கதாநாயகப் பிம்பத்தை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டுபோவது என்ற சிந்தனையில் இந்த கதை ரஜினி மனத்தில் தோன்றியிருக்கலாம்.
முற்றிலும் எதிர்பாராத விதமாக ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் இந்தப் படத்தை நிராகரித்துவிட்டார்கள். தானே தயாரித்த இந்தப் படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டார் ரஜினி. இது அவருடைய தொழில் வளர்ச்சிக்கு இந்தத் தோல்வி மிகப்பெரிய ஒரு பின்னடைவாக அமைந்தது. ரஜினி படம் என்றால் வசூல் மழை பொழியும் என்ற எண்ணம் நிச்சயம் தகர்ந்தது.
மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் மூலம் மீண்டார். ஆனாலும் வசூல் அளவில் அவருடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது சவாலாகத்தான் இருந்தது. சந்திரமுகியைத் தொடர்ந்து சிவாஜி வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து வெளியான குசேலன் சொதப்பியது. பின்னர் எந்திரன் வெற்றிக்குப்பிறகு லிங்கா, கோச்சடையான் என இரண்டு தோல்விகள். அதன் பிறகு கபாலி, காலா என்று ஓரளவு சுதாரித்தார். இப்போது பழைய படங்களின் ரீமேக் போல பேட்டை, தர்பார் என்று வருடத்திற்கு ஒரு படம் நடித்து அஜித், விஜய் போன்றவர்களுடன் வசூலில் போட்டியிட முயற்சி செய்கிறார். நான் யானையல்ல குதிரை, விழுந்தால் எழுந்து ஓடுவேன் என வசனமெல்லாம் பேசினார். ஆனால் முற்காலம்போல ஓட முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒருவிதத்தில் ரஜினி பிம்பத்தின் முதல் தகர்ப்பு பாபா என்றால் மிகையாகாது. அதற்குக் காரணம் அவர் கட்டமைக்க முயற்சி செய்த நாத்திகம், ஆத்திகம் முரண்.
பெரியாரின் நாத்திகமும், சமூக நீதியும்
பாபா படத்தில் நாத்திகராக இருக்கும்போது பெரியாரைக் குறிப்பிடுவார். திராவிட அரசியலில் முக்கியக் குறியீடாக, பிம்பமாக இருக்கும் பெரியாரை நாத்திகராகச் சித்திரித்து அவர் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடலாம் என்ற விழைவே இதில் தென்படுகிறது. இதில் மிகப்பெரிய பிழை என்னவென்றால் பெரியாரின் இயக்கத்தின் மையம் நாத்திகப் பிரசாரம் அல்ல. அது சமூக நீதி எனப்படும் ஏற்றத் தாழ்வு நீக்கத்தையே மையமாகக் கொண்டது. பார்ப்பனீய இந்துமதம் சாதீய ஏற்றத் தாழ்வைப் பேணுவதால், பார்ப்பனர்களை உயர்பிறப்பாளர்களாகக் கருதுவதால் அதை எதிர்ப்பது அவசியமாகியதே தவிர, கடவுள் மறுப்பையே இறுதி லட்சியமாகக் கொண்டவரில்லை பெரியார். அப்படி இருந்திருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையே சாத்தியமில்லை. சமூக நீதியே முக்கியம், பகுத்தறிவு, நாத்திகம் போன்றவை அதற்கு உறுதுணை மட்டுமே என்பதால்தான் கோயில்கள் இருக்கும்வரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப முடிகிறது.
இது மக்களுக்கு இயல்பாகப் புரிகின்ற விஷயம். அதனால்தான் அவர்கள் கடவுளை வழிபட்டாலும், பெரியாரையும் பெரிதும் மதிப்பார்கள். பெரியாரும் கடவுள் பற்றாளர்களுடன் சேர்ந்து இயங்க மறுத்ததில்லை. தன்னுடைய இயக்கத்தின் செயல்பாடுகளுக்குக் கடவுள் மறுப்பை முன் நிபந்தனையாக வைத்ததும் இல்லை. குன்றக்குடி அடிகளாருடன் அவருக்கு இருந்த நல்லுறவே இதற்கு முக்கியச் சாட்சி. மக்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளைப் பேணுவதற்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக இருக்கக் கூடாது என்பதால், கடவுள் கொள்கையைக் கேள்வி கேட்கும் ஆற்றலை வலியுறுத்தினாரே தவிர, கடவுள் மறுப்பு மட்டுமே சமூகத்தை மாற்றிவிடும் என்று எண்ணும் அளவு எளிய மனம் படைத்தவரல்ல பெரியார்.
இதனால் பெரியாரின் கடவுள் மறுப்பை மையப்படுத்தி, அதை மறுத்து, மக்களின் இயல்பான பாதுகாப்பின்மை சார்ந்த இறையுணர்வை, புனிதங்களுக்கான ஆசையைத் தூண்டிவிட்டால் திராவிட இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என நினைப்பது பயன் தராது. ரஜினி இதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
வேறொன்றையும் அவர் நினைவில்கொள்ள வேண்டும். அவர் என்ன தத்துவம் பேசுகிறார் என்பதற்காக யாரும் அவர் படங்களுக்குச் செல்வதில்லை. அவரது ஸ்டைல் எனப்படும் அங்க சேஷ்டைகளுக்காகத்தான் செல்கிறார்கள்.
பாபாவில் ஆன்மிகம் பேசி வீழ்ந்த பிம்பத்தை, சந்திரமுகியில் வேட்டையனாக “லகலகலகலக” என்று வில்லத்தனமாக ஒலியெழுப்பிதான் மீட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. எந்திரனில் “மே” என்று ஆடு போல கத்தியபோது அரங்கம் அதிர்ந்தது. இதை வைத்துக்கொண்டு அரை நூற்றுண்டுக்காலம் தமிழ் சமூகத்தை மானமுள்ள சமூகமாக மாற்ற ஓய்வின்றி உழைத்த ஒரு மாமனிதனை கேள்விக்கு உட்படுத்திவிடலாம் என நினைப்பது அறியாமையின்றி வேறொன்றும் இல்லை.
பாபா படத்தில் ஒரு பாட்டு கவிஞர் வாலி எழுதியிருப்பார். ‘ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்’ என்று. அந்த அதிசயங்களில் ஒன்றாக நாத்திகம் மறைந்து ஆத்திகம் பூப்பதும் வரும். அந்த வரிகளைக் கவனிக்க வேண்டும்.
*கடவுளை மறுத்து
இவன் நாள் தோறும்
கூறினானே நாத்திகம்
பகுத்தறிவாளனின்
நெஞ்சினிலே பூத்த
தென்ன ஆத்திகம்
திருமகன் வருகிற
திருநீரை நெற்றி மீது
தினம் பூசி
அதிசயம் அதிசயம்
பெரியார் தான்
ஆனதென்ன ராஜாஜி*
பெரியார், ராஜாஜி ஆகும் அதிசயம் பாபாவின் ஜாதகத்தில் இருக்கலாம். தமிழக வரலாற்றில் அதற்கு இடம் கிடையாது. இங்கு பெரியார்கள் மட்டுமே பெருகுவார்கள். ஏனெனில் பெரியார் என்பது நாத்திகமல்ல; சமூக நீதி.
