சிறப்புக் கட்டுரை: அழியும் பனையால் அழியும் பயன்கள்!

Published On:

| By Balaji

கேத்தரீன் கிலான்

அப்போது நேரம் சரியாக 6 மணி இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தின் நரசிங்கனூரில் இருந்தோம். இடுப்பில் ஒரு வார் கட்டி பனை மரத்தில் ஒருவர் ஏறிக் கொண்டிருந்தார். இந்த வாரைப் பயன்படுத்தி மிக விரைவாக மரத்தின் மேற்பகுதியை அவர் அடைந்துவிட்டார். அவருடைய பெயர் பாண்டியன் தேவசகாயம். அவருக்கு வயது 38. முந்தைய முறை மரத்தில் ஏறிக் கட்டியிருந்த பானைக்குள் இருக்கும் பனங்குருத்தை மீண்டும் சீவி பானைக்குள் வைத்தார். இந்தக் குருத்திலிருந்து பால் வடிய ஒரு நாளைக்கு மூன்று முறை இவ்வாறு மரத்தில் ஏறிச் சீவி விட வேண்டும்.

ஒரு கோப்பை கள்ளுடன் நம்மிடம் அவரது வாழ்க்கையைப் பற்றிப் பேசத் தொடங்கினார். நம்மாழ்வாரின் வானகம் சூழலியல் அறக்கட்டளையில் இயற்கை விவசாயம் குறித்து இவர் பயிற்சி பெற்றுள்ளார். இதற்கு முன்பிருந்தே பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். எங்களது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக மரம் ஏறும் தொழில் செய்து வந்தனர். என்னுடைய தந்தை என்னை இத்தொழில் செய்ய வேண்டாம் என்று கூறினார். இந்தத் தொழில் மிகவும் கடுமையானது என்பதால் அவர் வேண்டாமென்றார். ஆனால், மரம் ஏறும் தொழில் என்னை ஈர்த்துவிட்டது” என்கிறார் தேவசகாயம்.

தூத்துக்குடியில் உள்ள பண்டாரவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெனித். இவருக்கு வயது 21. இவரும் இதே கடுமையான தொழிலில்தான் ஈடுபட்டு வருகிறார். “பனைமரம் எனக்கான பாதையை உருவாக்கி என்னை அதில் இணைத்துள்ளது. நான் இதிலிருந்து வெளியேற மாட்டேன். இத்தொழிலில் இருந்தால் யாரும் எளிதில் பெண் கூடத் தர மாட்டார்கள்” என்கிறார் அவர்.

காவல் துறையின் கெடுபிடிகள் மரம் ஏறுபவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் மரம் ஏறுபவர்களின் எண்ணிக்கையும், மரங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தமிழ்நாடு பனை பொருட்கள் உற்பத்தி மேம்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் 5.1 கோடி பனை மரங்கள் உள்ளன. ஆனால், இப்போது லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கும், ஆலைகளுக்கும் அறுத்து அனுப்பப்படுகின்றன. மரம் ஒன்றின் விலை மிகவும் குறைவாக 100 ரூபாய் அளவில் கூட விற்கப்படுகிறது என்கிறார் தேவசகாயம்.

பனை உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டால் பனை மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வும் சிறக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நயம்பாடி கிராமம். இந்தக் கிராமத்தில் இரண்டு பனைத் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் யாவும் கிராமத்தின் பொது நிலங்களில் உள்ளன. “முப்பது வருடங்களுக்கு முன்பு பனை மரங்களைக் குத்தகைக்கு விடுவர். இதில் மரம் ஏறுபவர்கள் பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்வர்” என்கிறார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜி.கிருஷ்ணன்.

கிராம கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மரத்தைக் கூட வெட்ட இயலாது. ஆனால், அது பனை மரத்துக்கு மட்டும் பொருத்தமற்றதாகி விட்டது. மக்கள் இப்போது மெதுவாகப் பனை மரங்களை வெட்டத் தொடங்கிவிட்டனர். “முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் பனை மரங்கள் நிறைந்திருந்தன. ஆனால், இப்போது அதற்கான தடயம் கூட இல்லை” என்கிறார் கிருஷ்ணன்.

“பனை மரங்கள் யாவும் விளைநிலங்களைச் சுற்றி வேலிகள் போல சூழ்ந்திருந்தன. அப்போதெல்லாம் நான் அதன்மீது எந்தக் கவனத்தையும் செலுத்தவில்லை” என்கிறார் தேவசகாயம். ஆனால் அதற்குப் பின்னர் வெள்ளம் மற்றும் வறட்சியால் தொடர்ந்து இவர் பயிர்களை இழந்துள்ளார். பிறகு சிதம்பரத்தில் நடந்த பனை மரம் குறித்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதற்குப் பிறகு நண்பரின் உதவியுடன் தனது வயலில் பனை மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கினார். இப்போது இந்தப் பனை மரங்களில் பானங்கள், பனை வெல்லம், பொம்மைகள் மற்றும் பென்சில்கள் தயாரிப்பில் இவர் ஈடுபட்டு வருகிறார். “கடுமையான காலநிலைகளிலும் பனை மரங்கள் தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டதாக இருப்பதால் மாற்று வருவாய்க்கான மூலதனமாகப் பனை மரம் இருக்கிறது” என்கிறார் தேவசகாயம்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு வயது 43. இவர் சூழலியல் செயற்பாட்டாளராகவும் உள்ளார். பனை மரம் வளர்ப்பு குறித்தும், பனை மரத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கும் பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார். பனை மரத் தயாரிப்பு பொருட்களின் நன்மைகளை விளக்குவதுதான் பனை மரத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழி என்றும் அவர் கூறுகிறார். “முன்பெல்லாம் வெள்ளைச் சர்க்கரை பயன்பாடு மிகவும் குறைவாகத்தான் இருந்துள்ளது. பனை வெல்லத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர். வெள்ளை சர்க்கரைதான், சர்க்கரை நோய்க்கு முக்கியக் காரணமாக உள்ளது” என்று கூறும் தண்டபாணி சர்க்கரை நோயாளிகள் பனை வெல்லத்தை மீண்டும் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார்.

மேலும் இவர் கூறுகையில், ”பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீரா பானம் ஊட்டச்சத்து மிக்க பானம். நீரா பானம், வெல்லம் குறித்து பள்ளி பாடத் திட்டங்களில் இணைத்தும், ஆவணப்படங்கள் உருவாக்கியும், நட்சத்திரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும் நாம் செய்ய வேண்டியுள்ளது” என்கிறார்.

கள் இறக்கத் தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்றும் தண்டபாணி அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார். கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் பனை மரம் ஏறுபவர்கள் பொருளாதார ரீதியாகப் பயனடைவார்கள் என்றும் இவர் கூறுகிறார். “சிகரெட்டுகள், மதுபானங்கள் விற்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், கள் இறக்க மட்டும் எதற்கு ஒழுங்குமுறை விதிகள்? கள் எங்களுடைய உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதி” என்கிறார் தண்டபாணி.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.சத்யா. இவருக்கு வயது 63. இவர் கிராமப்புற வேலைகளுக்கான மேம்பாட்டுச் சங்கத்தின் இயக்குநராக உள்ளார். இது ஒரு தனியார் தொண்டு நிறுவனமாகும். இவரும் தண்டபாணியுடைய கோரிக்கையுடன் இசைகிறார். “பனைமரக் கள்ளில் வெறும் 4.1 விழுக்காடுதான் ஆல்கஹால் உள்ளது. ஆனால், அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது வகைகளில் 48.5 விழுக்காடு ஆல்கஹால் கலந்துள்ளது” என்கிறார் இவர்.

பனை மர ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் ஒன்று ஏப்ரல் மாதத்தில் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கான அனுமதி பல்வேறு நிபந்தனைகளுடன்தான் அரசால் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாகப் பனை மரங்கள் வெட்டப்பட்டு விற்கப்படுவதைத் தடை செய்ய வேண்டுமெனவும், நீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் பனை மரங்களை அதிகமாக நட்டு வளர்க்க வேண்டுமெனவும் இவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதுமட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்ட பனை மர ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டுமெனவும், பனை மர ஊழியர்களை அங்கீகரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பனை மரம் ஏறுபவர்களும், சூழலியல் ஆர்வலர்களும் பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ரகுநாத பூபதி என்ற இளைய தலைமுறை பொறியாளர் ஒருவர் ’பனைகள் கோடி’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை மரங்களை நடுவதுதான் எங்கள் இலக்கு என்றும் அவர் கூறுகிறார்.

இவர் மேலும் கூறுகையில், “மரங்கள் நடுவதை ஒரு சமூகத் தொண்டின் தொடக்கமாகத்தான் செய்து வருகிறோம். கடினமான கால நிலைகளைத் தாங்கும் மரமாகப் பனை மரம் உள்ளது. பனைகள் கோடி அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் கடந்த ஓர் ஆண்டில் சில லட்சம் மரக் கன்றுகளை தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் நட்டுள்ளனர். மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் நீர் நிலைகளுக்கு அருகில் இந்த மரக் கன்றுகளை நட்டுள்ளோம்” என்கிறார் அவர்.

மீண்டும் காடுகளை உருவாக்குவதற்குப் பனை மரங்களை நாடுவதுதான் சிறந்த முயற்சி என்று கூறுகிறார் நரசிம்மன். இவர் ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர். “வறட்சியை எதிர்கொள்ளும் மரமாகப் பனை மரம் உள்ளது. முன்னோர்கள் ஏரிக் கரைகளிலும், வயல்வெளிகளை ஒட்டியும் பனை மரங்களை நட்டு வளர்த்தனர். இதன்மூலம் மண் அரிப்பைத் தடுத்தனர். சூறாவளிகளிலும் தாங்கி நிற்கும் மரமாகப் பனை மரங்கள் இருந்தன” என்கிறார் நரசிம்மன்.

“பனை மரத்தின் எல்லாப் பொருட்களும் பயனுடையதுதான். பனை மரத்தின் வேரிலிருந்து இலைகள் வரை உள்ள பொருட்களைக் கொண்டு 80க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களைத் தயார் செய்யலாம். நூற்றுக்கணக்கான கைவினைப் பொருட்களைத் தயார் செய்யலாம். பிளாஸ்டிக்குக்கு நிலையான மாற்றாகப் பனை பொருட்கள் இருக்கும்” என்கிறார் பூபதி. முகநூல் மூலம் பனை பொருட்களின் பயன்களை ஊக்குவித்து, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் பனை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் சாமிநாதன். இவர் இதற்காக ’செம்மை என்ற தன்னார்வ அமைப்பையும் செயல்படுத்தி வருகிறார்.

‘கருப்பட்டி காய்ச்சுவோம்’ என்ற புதுமையான முழக்கத்தை முன்வைத்து நகரங்களை நோக்கி இதன் விற்பனையையும், சந்தையும் நகர்த்தி வருகிறார் இவர். இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்கள் விற்பனையில் இளைஞர்களைச் சாமிநாதன் ஊக்குவித்து வருகிறார். “கோவாவில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பிறகு பனை பொருட்களின் பயன்பாடு அங்கு அதிகரித்திருக்கிறது. நாங்களும் இங்கு கோயில்களில் பிளாஸ்டிக் கூடைகளுக்குப் பதிலாக பனை பொருட்களால் செய்யப்பட்ட கூடைகள் பயன்பாட்டைக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம்” என்கிறார் சாமிநாதன்.

அண்டை மாநிலங்களான கேரளாவிலும், ஆந்திராவிலும் சட்டப் பூர்வமாக கள் இறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற வருவாயை உயர்த்தப் பயன்படுகிறது என்கிறார் சத்யா. இங்கு அண்டை கிராமங்களில் கள் இறக்கக் காவல் துறை ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வாரம் ஒன்றுக்குக் கேட்கிறது என்கிறார் தண்டபாணி. “கம்போடியாவைப் போல நாம் பனை மரத்தை முழுவதுமாக பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் நாம் தொழில் துறை பொருளாதாரத்தை மட்டும்தான் பார்க்கிறோமே தவிர, கிராமப்புற பொருளாதாரத்தை பார்ப்பதேயில்லை” என்கிறார் நரசிம்மன்.

பனை மரப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக இதுவரை 150 பேருக்கு பயிற்சியளித்துள்ளார் கணபதி. பேருந்து ஓட்டுநர்களுக்கான இருக்கைகள், தரை சுத்தம் செய்யும் பிரஷ்கள், கைத்தடிகள் போன்றவற்றை இவர் தயாரித்து வருகிறார். அண்மைக்காலமாக இயற்கை உணவுப் பொருட்களுக்குத் தேவை அதிகரித்து வருகிறது. நாங்கள் ஒரு கிலோ பனை வெல்லத்தைக் கிலோ ஒன்றுக்கு 340 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் என்று கணபதி கூறுகிறார்.

ஒருவேளை அரசாங்கம் பனை வெல்ல உணவுகளைப் பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் சேர்த்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதோடு, இத்துறைக்கும் பயனளிக்கும் என்கிறார் முருகேசன். இவரும் பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இவருடன் இணைந்து மரம் ஏறும் சண்முகம் கூறுகையில், “அரசாங்கம் பொது விநியோகத் திட்டத்தில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைச் சேர்த்தால் எங்களுக்குப் பயனளிப்பதோடு கிராமப்புற வருவாயும் உயரும்” என்கிறார்.

நன்றி: [வில்லேஜ் ஸ்கொயர்](https://www.villagesquare.in/2018/04/23/future-looks-up-for-palmyra-tree-climbers-of-tamil-nadu/)

**தமிழில்**: [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)

**நேற்றைய கட்டுரை:** [முழு நேரப் பணிகளின் எதிர்காலம் என்ன?](https://minnambalam.com/k/2018/06/11/7)

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com),”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share