ராஜன் குறை
சென்ற வாரம் சேகுவாரா, பிரபாகரன் ஆகியோரின் பிம்பங்களை சீமான் தன் கற்பனாவாத அரசியலுக்கான கவர்ச்சி பிம்பங்களாகப் பயன்படுத்துகிறார் என்று மின்னம்பலத்தில் எழுதியது முகநூலில் சர்ச்சைக்கு உள்ளானது. அரசியலில் போர் என்ற உருவகம் பயன்பட்டாலும் போர் என்பது அரசியல் அல்ல என்பதை புரிந்துகொள்வது, ஏன் இந்த பிம்பங்கள் இப்படி மேலோட்டமாகப் பயனாகின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.
அரசியல் என்பது என்ன?
அரசியல் என்பது என்ன, யார் சொல்வதைக் கேட்பது என்ற கேள்விதான். ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் நிலவும்போது எதன்படி நடப்பது என்பதைத் தீர்மானிப்பதுதான். இது பொருட்களை, நலன்களைப் பகிர்ந்துகொள்வது குறித்த மாறுபாடாக உருவானால் அப்போது முரண்கள் தீவிரப்படுகின்றன. யாருக்கு எவ்வளவு பங்கு போன்ற கேள்விகளால் சண்டைகள், சச்சரவுகள் ஏற்படுவது இயல்பு. இத்தகு நிலைகளில் மோதல்கள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் எதிர் தரப்பினரை எதிரிகள் என்று கொள்ளத் தேவையில்லை. முரண்கள் பகையாவது தேவையில்லை என்பது அரசியல் சிந்தனை. அதனால்தான் நாங்கள் எதிர்க்கட்சியே தவிர எதிரிக்கட்சியல்ல என்று அடிக்கடி அரசியல் தலைவர்கள் கூறுவார்கள். எதிர்ப்பு எல்லாமே எதிர்ப்பாளர்களை உருவாக்கலாமே தவிர, எதிரிகளை உருவாக்கக் கூடாது என்பதே பண்பாடு, அரசியல். எதிர்ப்பாளர்களுடன் போராடுவோம், எதிரிகளுடன் போர் புரிவோம்.
போரும் போராட்டமும்
போர் அல்லது யுத்தம் என்பது இரு நாடுகள் இடையே நிகழ்வது. இரு மன்னர்கள் அல்லது இறையாண்மை அடையாளங்களுக்கு இடையே நிகழ்வது. அவர்களுக்கு இடையே போராட்டம் நிகழாது. போர்தான் நிகழும். இந்தியாவும் பாகிஸ்தானும் போரிட்டன என்றுதான் சொல்வோம். போராடின என்று சொல்ல மாட்டோம். ஒரு நாட்டுக்குள்ளேயே ஒரு மக்கள் தொகுதி சில கோரிக்கைகளுக்காக அரசை எதிர்த்து கிளர்ச்சி செய்தால் அதைப் போராட்டம் என்று சொல்வோம். அப்படி ஒரு கிளர்ச்சி வன்முறையாகவும் இருக்கலாம், சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கலாம். அந்தக் கிளர்ச்சி நிரந்தரமாகி ஆயுதங்களை இரு தரப்பும் பயன்படுத்தினால் அதை உள்நாட்டுப் போர் என்போம். போராடும் தொகுதி விடுதலைப் போர் எனலாம்.
போர் என்பது எதிரியை அழித்தொழிப்பது, அடிமைப்படுத்துவது, ஆக்கிரமிப்பது போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டது. போராட்டம் என்பது எதிரியை அல்லது எதிர்த்தரப்பை தன் தரப்பை ஏற்கச் செய்வது. போராட்டத்தில் வன்முறை கலந்தாலும்கூட, ஆயுதப் போராட்டமானாலும் கூட அதன் நோக்கம் எதிர்த்தரப்பைப் பேச்சுவார்த்தைக்கு, உடன்படிக்கைக்கு நகர்த்துவதுதான். போர் என்ற சொல்லுடன் ஆட்டம் என்ற பின்னொட்டு சேர்வதால் அது போராட்டம் ஆகிறது. அதாவது போர் போல ஆடுவது.
தொலைக்காட்சி விவாதம்
இதை நாம் மேலும் புரிந்துகொள்ள சமூக அமைப்பு என்பதன் அரசியல் வடிவத்தை எப்படியெல்லாம் யோசிக்கலாம் என்று பார்க்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி விவாதம் போன்ற வடிவத்தில் யோசிக்கலாம். தலைப்பு, ‘சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தைத் தீர்மானிப்பது எது?’ மூன்று அணிகள். ஒத்திசைவே என்று ஓர் அணி. ஒப்பந்தமே என்று ஓர் அணி. ஒடுக்குமுறையே என்று ஓர் அணி.

ஒத்திசைவு
ஒத்திசைவே என்ற அணியினர் எல்லோருடைய பொது நன்மை கருதிதான் அதிகாரம் சிலரிடம் இருக்கிறது என்பார்கள். காந்தி, செல்வந்தர்கள் தர்மகர்த்தாக்களாக இயங்க வேண்டும் என்று சொன்னாரில்லையா? அதைப்போல ஆசிரியர்கள், கணவர்கள், தந்தையர் எல்லாம் அதிகாரம் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்போ, கட்டுப்பாடோ அனைவரின் நன்மைக்குத்தான் என்று சொல்வார்கள். அப்படி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு நீதிக்கதைகள், இறை நம்பிக்கை ஆகியவை உதவும் என நம்புவார்கள். கருணை, அன்பு ஆகியவையே அனைத்தையும் சரிசெய்யும் என்று நினைப்பார்கள். மன்னராட்சி என்பது இதன் சிறந்த அரசியல் வடிவம்.
ஒப்பந்தம்
ஒப்பந்தமே என்ற அணியினர் லிபரலிசம் என்னும் சுதந்திரவாதிகள். இவர்கள் ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிமைகளும் கடமைகளும் உண்டு என்ற அடிப்படையில் சமூகம் ஒவ்வொருவரும் பிறருடன் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களால் ஆனது என நம்புவார்கள். அவற்றை சட்டத் திட்டங்களாக மாற்றிவிட்டால் யாரும் அதன்படி நடக்காவிட்டால் புகார் அளித்து விசாரித்து சரி செய்யலாம் எனக் கூறுவார்கள். சட்டத்தின் ஆட்சி, நீதியின் ஆட்சி என்ற நவீன சிந்தனை இவ்வகைப்பட்டது. இப்போது நிகழும் தேர்தல் சார் மக்களாட்சி இவ்வகைப்பட்டது.
ஒடுக்குமுறை
ஒடுக்குமுறையே என்று கூறுபவர்கள், சமூகத்தில் பல முரண்கள் இருக்கின்றன. அப்படி முரண்பட்ட சமூக அங்கங்கள் ஒன்றுடன் ஒன்று போராடுவதில்தான் சமூக இயக்கம் மேம்பட்டது, முன்னேற்றம் பிறக்கிறது என்று நினைப்பார்கள். ஒடுக்குமுறை இருவகைப்படும். ஒன்று கருத்தியல் ஒடுக்கு முறை. இது ஒடுக்கப்படுபவரே ஒடுக்குமுறையை ஏற்கும்படி செய்கிறது. இன்னொன்று தண்டனைகளால், வன்முறையான அதிகாரத்தில் நிகழும் ஒடுக்குமுறை. இது எதிர்ப்பவர்களை அடக்கி நசுக்கி ஒடுக்குமுறையைத் தொடர்கிறது. ஆயுதப் புரட்சியினால் ஒரு மக்கள் தொகுதியினர் ஆட்சியைக் கைப்பற்றும்போது அதை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து அடக்குமுறையைக் கைக்கொள்வது நிகழ்வது இயல்பானதாகவே இருக்கிறது.
இந்த ஒத்திசைவு, ஒப்பந்தம், ஒடுக்குமுறை ஆகிய மூன்று அணிகளுமே யாரேனும் அநீதியாக நடந்துகொண்டால் அதற்கு எதிராக பாதிக்கப்படுபவர்கள் போராடுவதை ஏற்றுக்கொள்வார்கள். போராட்ட வடிவங்களைப் பொறுத்தவரை கருத்து மாறுபாடுகள் எழும். அஹிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை, வேலைநிறுத்தம், வரி கொடாமை என்றெல்லாம் பலவிதப் போராட்டங்கள் உண்டு. அப்படிப் போராடுபவர்கள் தண்டிக்கப்படும்போது வன்முறையும் தலைதூக்கும்.
ஆனால் வன்முறை நிரந்தர தீர்வல்ல. சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, சுதந்திரமான நடவடிக்கைகள் வன்முறையால் பாதிக்கப்படும் என்பதால் அரசியலின் லட்சியம் கூடியவரை வன்முறையைத் தவிர்ப்பதாகவே இருக்க வேண்டும். வன்முறையால் அரசைக் கைப்பற்றலாம். ஆனால் கருத்தியல் ஒத்திசைவு இல்லாமல், சமூக ஒப்பந்தங்களாகச் சட்டங்கள் பாரபட்சமின்றி இயங்காமல் அமைதியான சகவாழ்வு சாத்தியமில்லை.
எனவே மூன்று அணியாகப் பிரிந்து விவாதித்தாலும் ஒத்திசைவு, ஒப்பந்தம், ஒடுக்குமுறை தவிர்ப்பு ஆகிய மூன்றும் இணைந்ததுதான் சமூகம். போரே நிகழ்ந்தாலும், அமைதி திரும்பவும் நிலவ சமரசம், சமாதானம் எட்டப்பட வேண்டும். முரண்களின் மோதல்கள் தொடர்ந்து சமன் செய்யப்பட வேண்டும். சமூக நீதிக்காகத் தொடர்ந்து போராடவேண்டும்.

ரஜினியின் போர் முழக்கம்
அரசியல் கட்சியோ, இயக்கமோ… மாற்றுக் கருத்துகளுடன் போராடுவதால், பொதுவாக போர் குறித்து பேச்சும், குறியீடுகளும் அதிகமாக இருக்கும். நடிகர் ரஜினிகாந்த்கூட கட்சி தொடங்குவதாகச் சொல்லும்போது ‘போர்’ என்றுதான் முழக்கமிடுகிறார். இது ஓர் அரசியல் பழக்கம். நெருப்பு என்றால் வாய் வெந்துவிடாது என்பதைப் போல இங்கே போர் என்பது ஓர் உருவகம்தான்.
சில சமயங்களில் இந்த உருவகம் உண்மையிலேயே ஆயுதப் போராக மாறும்போது. வெற்றி சாத்தியமா என்றுகூட கவலைப்படாமல் மரணத்தையும் ஏற்கத் துணிந்து போர்புரிவது வீரமாகவும், தியாகமாகவும் இருந்தாலும் அரசியல் ரீதியாக கற்பனாவாதமாக மாறிவிடும். போரில் நியாயமான போர் என்று உண்டா என்பதும்கூட தத்துவார்த்தமாக விவாதிக்கப்படுவதுதான். அது எப்படியானாலும் அரசியல் என்பது வேறு, போர் என்பது வேறு என்றுதான் நாம் பார்க்க முடியும். போர் அரசியலின் மாற்று வடிவம் என்று கூறப்படுவது உண்டு. ஆனால், வடிவம் மாறியபிறகு எப்படி உள்ளடக்கம் அரசியலாக இருக்க முடியும் என்பதே கேள்வி.
அரசியலுக்குத் தேவை இவைதான்
காந்தி, பெரியார், அண்ணா, அம்பேத்கர் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் வன்முறையைத் தவிர்ப்பதை அரசியலின் முக்கிய அச்சாகக் கொண்டார்கள். அவர்களுக்குள் கருத்து மாறுபாடுகள் பல இருந்திருக்கலாம். ஆனால், அவை வன்முறையாக மாறவில்லை. அவர்கள் பிம்பங்களே நம் அரசியல் விழிப்புணர்வுக்கு அவசியமானவை, இன்றியமையாதவை.

(கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com)
