எஸ்.வி.ராஜதுரை
இந்திய அரசமைப்பு அவையின் கடைசிக்கூட்டம் 25.11.1949இல் நடந்தது. அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக்குழுத் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அந்தக் கடைசிக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் கூறிய முக்கிய விஷயங்கள் இரண்டைக் காண்போம்:
1. “பொருளாதாரம் என்பதை எடுத்துக்கொண்டால் பெரும் சொத்துகளை உடைய ஒரு சிலரையும் மிகக் கொடிய வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏராளமானோரையும் கொண்டுள்ள சமுதாயம் நம்மிடம் உள்ளது.
1950 ஜனவரி 26இல் நாம் முரண்பாடுகளுள்ள வாழ்க்கையில் நுழையப் போகிறோம். நமக்கு அரசியலில் சமத்துவமும் சமுதாய, பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வும் இருக்கும். அரசியலில் ‘ஒரு மனிதன் – ஒரு வாக்கு’ மற்றும் ‘ஒரு வாக்கு- ஒரு மதிப்பு’ என்ற நெறிகளை நாம் அங்கீகரிக்கப் போகிறோம். நமது சமுதாய, பொருளாதார வாழ்விலோ, நமது சமுதாய, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக, ஒரு ‘மனிதன் – ஒரு மதிப்பு’ என்ற நெறியை நாம் தொடர்ந்து மறுத்து வருவோம். முரண்பாடுகளுடைய இந்த வாழ்க்கையை எத்தனை நாளுக்குத்தான் தொடர்ந்து வாழ்வது? நமது சமுதாய, பொருளாதார வாழ்க்கையில் எத்தனை காலத்துக்குத்தான் நம்மால் சமத்துவத்தைத் தொடர்ந்து மறுத்துக்கொண்டே வர முடியும்? நீண்டகாலம் நாம் அதை மறுத்துக்கொண்டே வருவோமேயானால், நமது அரசியல் ஜனநாயகத்தை அபாயத்துக்குத்தான் உள்ளாக்குவோம். கூடிய விரைவில் நாம் இந்த முரண்பாட்டை அகற்றியாக வேண்டும். இல்லாவிட்டால் ஏற்றத்தாழ்வினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், இந்த அவை கடுமையாக உழைத்துக் கட்டெழுப்பியுள்ள அரசியல் ஜனநாயகம் என்ற கட்டமைப்பையே வெடிவைத்துத் தகர்த்துவிடுவர்”.

2. “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வெற்றி மக்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் நடத்தையைப் பொறுத்ததாக இருக்கும்.”
புதுப்பித்துக் கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள்
அம்பேத்கர் சுட்டிக்காட்டிய சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்தவரை கல்வி, வேலைவாய்ப்பு, சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீட்டின் காரணமாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகச் சிறு அளவு பலன் ஏற்பட்டிருக்கலாமே தவிர, அந்த ஏற்றத்தாழ்வுகள் புதிய புதிய வடிவங்களில் தம்மை உயிர்ப்பித்துக் கொண்டே வருகின்றன; எழுபது ஆண்டுகளுக்கு முன்புகூட இருந்திராதவகையில் சாதி அடையாளத்தை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ முன்நிறுத்தும் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பண்பாட்டுத் தளத்திலும் சாதிய உணர்வுகள் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகின்றன.
‘இந்துக்கள்’ என்பவர்கள் ஒரு சமுதாயமாகவோ, தேசமாகவோ அமைவதில்லை என்றும் தனித்தனி நலன்களையும் அக்கறைகளையும் விழுமியங்களையும் கொண்ட பல நெல்லிக்கனிகளை ஒன்றுசேர்த்துக் கட்டப்பட்ட மூட்டைதான் அவர்கள் என்று அவர் கூறியது இந்தியாவிலுள்ள பிற மத சமுதாயங்களுக்கும் கூடுதலாகவோ, குறைவாகவோ பொருந்தும். இதைவிட அக்கிரமமான விஷயம் என்னவென்றால் தலித்துகள் மீதான வன்கொடுமைகள், பழங்குடி மக்கள் மீதான கொடூரமான சுரண்டல் சிறிதும் தணியவில்லை. இந்த வக்கிரமான சாதிப் படிநிலை அமைப்பு தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதற்கான அடிப்படையான காரணம் ‘அகமண முறை’ என்று அம்பேத்கர் அடையாளப்படுத்தினார்.
ஒரு வாக்கு பல மதிப்பு
அரசியலிலும் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருவதற்கு நம்நாட்டுத் தேர்தல்களில் கடைப்பிடிக்கப்படும் ‘வெஸ்ட்மின்ஸ்டர் முறை’யும் ஒரு காரணமாக உள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்று கூறும் தேர்தல் முறை வாக்காளர்களிடம் மறைந்து கிடக்கின்ற சாதி உணர்வையும் பண ஆசையையும் வெளியே கொண்டு வருகிறது. ஏழை எளியவர்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரும்கூட தங்கள் வாக்குகளை அதிக விலை தருபவர்களுக்கு விற்பதைக் கண்டு வருகிறோம். ‘ஒரு வாக்கு – ஒரு மதிப்பு’ என்பதும்கூட ‘ஒரு வாக்கு – பல மதிப்புகள்’ என்ற சந்தைத்தன்மை பெற்றுவிட்டது (ஒரு கட்சி ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், இன்னொரு கட்சி அதற்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கிறது). அந்த விலையும்கூட இடத்துக்கு இடம், தேர்தலுக்குத் தேர்தல் மாறுகிறது – சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கங்களைப் போல. அதுமட்டுமின்றி, தேர்தல் செலவு குறித்த இன்றைய சட்டங்களும் ஏற்பாடுகளும், நிதிவசதியில்லாத நேர்மையான எந்த மனிதரும் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி கனவுகூடக் காண முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வளவு கேவலமான நிலை இருந்திராத 1952ஆம் ஆண்டில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ‘வயது வந்தோருக்கு வாக்குரிமை’ என்ற அடிப்படையில் நடந்த முதல் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அண்ணல் அம்பேத்கராலும்கூட வெற்றி பெற முடியாமல் போயிற்று. அந்தந்தக் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு அவற்றுக்கான இடங்களை சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் பெற முடியும் என்ற தேர்தல் முறை இருந்திருக்குமேயானால், அம்பேத்கரால் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருக்க முடியும் என்று எளிதாக ஊகிக்கலாம்.
திரும்ப அழைக்கும் உரிமை
நமது தேர்தல் முறையிலுள்ள இன்னொரு பெரும் பலகீனம், வாக்காளர்களால் சரியாகவோ, தவறாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அந்த வாக்காளர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டால், அதாவது ‘வாக்காளர்களின் தீர்ப்பு’ (mandate of the electorate) என்று எல்லாக் கட்சிகளாலும் புனித மந்திரம் போல் ஓதப்படும் அந்தத் தீர்ப்புக்கு விரோதமாக, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரேனும் நடந்துகொண்டால், அவரைத் திரும்ப அழைத்துக்கொள்ள இன்னொரு வாக்கெடுப்பு நடத்துவதை நமது தேர்தல் முறை அனுமதிப்பதில்லை. எனவேதான் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, அதற்காக என் உயிரையும் (பணத்தையல்ல) விடுவேன் என்று சூளுரைத்து வெற்றி பெறுபவர், பணத்துக்காகவோ, பதவிக்காகவோ இன்னொரு கட்சிக்குத் தாவும்போது மக்களால் ஏதும் செய்ய முடிவதில்லை.
மாறாக, ஷேக்ஸ்பியரின் ‘ஜூலியஸ் ஸீஸர்’ நாடக வரி போல, “அதிகாரத்தில் நாய் அமர்ந்தாலும் அதற்குப் பணிந்து போகத்தானே வேண்டும்” என்கிற நிலை மக்களுக்கு ஏற்படுகிறது. இன்று நம் நாட்டிலுள்ள ‘கட்சித் தாவல் தடுப்புச் சட்டங்கள்’ எல்லாம், அரசியல் கட்சிகளில் எவற்றால் மற்ற கட்சிகளைவிட அதிகம் செலவு செய்தோ, அதிகாரத்தைக் காட்டி மிரட்டியோ, அதிக எண்ணிக்கையில் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களை இழுத்துக் கொண்டு வரமுடிகிறதோ, அதனால் மட்டுமே ஆட்சியை அமைக்க முடியும் என்பதை உத்தரவாதம் செய்கின்றன. ஒரே ஒரு ஆள் கட்சி தாவினால்கூட, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் வந்தாலொழிய இதற்குத் தீர்வு இல்லை. மேலும், கூட்டணியாகப் போட்டியிடும் கட்சிகளிடம் ஒரு குறைந்தபட்சப் பொதுத் திட்டம் இருந்தாக வேண்டும் என்ற சட்டமாவது இருக்க வேண்டும். மற்றபடி ‘தொகுதி உடன்பாடுதான் வைத்திருக்கிறோமேயன்றி, அரசியல் கருத்தொற்றுமை இல்லை’ என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான மோசடிகளிலொன்றுதான்.
அம்பேத்கர் கூறிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், 70 ஆண்டுகளில் – குறிப்பாக – மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு கடுமையானவையாகியுள்ளன என்பதற்கு, இன்றைய ஒன்றிய அரசாங்கம், தனது அதிகாரத்துக்குட்பட்ட நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களைக்கூட வெளியிட மறுப்பதும் அல்லது அவற்றைச் சிதைப்பதுமே சான்றுகளாக உள்ளன. எனினும், அங்கொன்றும் இங்கொன்றுமான போராட்டங்களைத் தவிர, “ஏற்றத்தாழ்வினால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள், இந்த அவை கடுமையாக உழைத்துக் கட்டெழுப்பியுள்ள அரசியல் ஜனநாயகம் என்ற கட்டமைப்பையே வெடிவைத்துத் தகர்த்துவிடும்” நிலை உருவாகவில்லை.
கட்சிகளின் நடத்தை
அம்பேத்கர் அரசமைப்பு அவையில் வரைவுக் குழுத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அவருடன் பலவகையில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தவர்களை எதிர்கொண்டார். ஆயினும் அவர்களிலும்கூட பெரும்பாலானவர்கள், தனிப்பட்ட முறையில் நேர்மையானவர்களாக, ஒழுக்கமுடையவர்களாக இருந்ததாகவே அவர் கருதியிருக்க வேண்டும். அந்தத் தலைமுறையினருக்குப் பிறகு வருகின்ற மக்கள் பிரதிநிதிகளும் அவ்வாறே இருப்பர் என்று அவரது நன்னெஞ்சம் கருதியிருக்க வேண்டும். அதனால்தான் அவர் மேற்சொன்ன இரண்டாவது கருத்தைக் கூறினார் என்று கருதலாம்: “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வெற்றி மக்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் நடத்தையைப் பொறுத்ததாக இருக்கும்”.
மக்களிடம், வாக்காளர்களிடம் மேற்சொன்ன பலகீனங்கள் இருந்தாலும்கூட அவற்றையும் ஏமாற்று வேலைகளில், நம்பிக்கை மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் (தேர்தலின் மூலம் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின்) நேர்மையீனத்தையும் சரிசமமானவையாகக் கருதிவிட முடியாது. இந்த நேர்மையீனத்தின் மிக உச்ச வடிவம் அண்மையில் மகாராஷ்டிரா விவகாரங்களில் வெளிப்பட்டது.
நேரு குடும்பத்தை அறவே வெறுக்கும் பிரதமருக்கு, சில நாட்களுக்கு முன் திடீரென்று இந்திரா காந்தி நினைவுக்கு வந்துவிட்டார். அதற்குப் பல காரணங்கள் உள்ளன என்றாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு நாளை ஒட்டி, பிரதமர் மோடியின் நினைவுக்கு வந்த விஷயம், அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அல்ல. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தம்தான். அது இந்திய மக்களின் கடமையை வரையறுக்கும் சட்டத் திருத்தம். தேசப்பற்று, தேச ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை பற்றிய சட்டத் திருத்தம். தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு என்பன ஆளும் கட்சிகளால் வரையறுக்கப்படுபவை. பாஜக கூறும் ‘தேசப்பற்றுக்கும்’, ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கும்’ எதிராக யாரேனும் பேசினால் அவர் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் ‘கடமைகளி’லிருந்து வழுவியவராகிவிடுவார்.

பிரதமருக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, காபினட் அமைச்சரவையின் ஒப்புதலின்றியே மகாராஷ்டிராவிலிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ளும்படி பரிந்துரைத்த பிரதமர் மோடியைவிட ஒருபடி தாண்டிச் சென்றுவிட்டார் குடியரசுத் தலைவர் கோவிந்த். ‘அரசமைப்புச் சட்ட’த்தின் 70ஆம் ஆண்டு நிறைவையொட்டி, 25.11.2019இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி உரையாற்றிய குடியரசுத் தலைவர் கூறினார்: . “அரசமைப்பு அவையில் தாம் நிகழ்த்திய உரைகளொன்றில், ‘அரசமைப்பு ஒழுக்க நெறியின்’ முக்கியத்துவத்தை வலியுறுத்திய டாக்டர் அம்பேத்கர், ‘அரசமைப்பு ஒழுக்க நெறியின் சாராம்சம்’ என்பது, அரசமைப்புச் சட்டம்தான் கருத்தியல் வேறுபாடுகள் எதனைக் காட்டிலும் உயர்ந்தது என்று கருதுவதாகும்” என்று கூறினார்.
அண்ணல் அம்பேத்கரின் அறிவுரைக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு துக்கிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கட்டுரையாளர் குறிப்பு

கட்டுரையாளர் எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.