என்னதான் வங்கியில் சேமிப்புகணக்கு/நடப்புகணக்கு வைத்திருந்தாலும் ஃபிக்ஸ்டு டெபாசிட்(நிலையான சேமிப்பு)கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கியில் தனி மதிப்பு தான். இவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்திற்கு ஃபிக்ஸடாக டெபாசிட் செய்திருப்பார்கள். அவர்கள் டெபாசிட் செய்த தொகைக்கு குறிப்பிட்ட வட்டியை டெபாசிட் செய்யப்பட்டுள்ள வங்கி அளிக்கிறது. இந்த வட்டிவிகிதம் வங்கிக்கு வங்கி வேறுபடும்.
**டி.டி.எஸ் . (TDS) பிடித்தம்:**
எந்த வங்கியில உங்களுக்கு, ஃபிக்ஸ்டு டெபாசிட் உள்ளதோ, அந்த வங்கியில் டெபாசிட் தொகைக்கு ஒரு நிதி ஆண்டில் வட்டியாக ரூ.10,000-க்கு அதிகமானால், அந்த வங்கி டி.டி.எஸ். என்ற பிடித்தம் செய்து வருமான வரி துறைக்கு செலுத்துவார்கள். இது அனைத்து வங்கிலும் நடைமுறையில் உள்ளது.
**டி.டி.எஸ்ஸில் (TDS) இருந்து விலக்கு பெறுவது எப்படி?**

சேமிப்பிற்கு ஏற்ற வட்டி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்கிறோம். அதிலும், வரிபிடித்தம் ஆகிவிட்டதே என்று கவலை வேண்டாம். அவ்வாறு, பிடித்த டி.டி.எஸ் திரும்ப பெற, உங்கள் வங்கிக்கு சென்று ஃபார்ம் 15ஜி மற்றும்15 ஹெச்(சீனியர் சிட்டிசன்) பூர்த்தி செய்து தர வேண்டும். தற்போது இந்த ஃபார்ம்கள் புதுப்பிக்கபட்டுள்ளது உங்கள் டெபாசிட் வரிபிடித்தம் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய டிக்ளரேசனில் நீங்கள் கையெப்பமிட்டு வங்கி கிளையில் கொடுத்து, அதனை சமர்பித்ததர்க்கான படிவத்தை பெற்றிடவும்.
**யாருக்கு பொருந்தும்:**
இது அனைவருக்கும் பொருந்தாது.
ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சத்திற்கு குறைவாக பெறுபவர்களே இந்த படிவங்களை அளித்து வட்டி பிடித்தத்தில் இருந்து விலக்கு பெறலாம். மற்றவர்கள் வருமான வரி படிவம் சமர்ப்பித்து அதிகபடியான டி.டி.எஸ்.செலுத்தியதை திரும்ப பெறலாம். இது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வங்கியில் அளிக்கலாம். நீங்கள் என்.ஆர்.ஐ கஸ்டமராக இருந்தால் ஃபார்ம் 15ஜி/15ஹெச் ஃபார்ம் சமர்ப்பிக்க முடியாது.
**15ஜி/15ஹெச் பற்றி அறிந்து கொள்வோம்:**

வருமான வரிச் சட்டம் 1961-ன், ஃபார்ம் 15ஜி/15ஹெச் ஃபார்ம் பற்றி கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டம் 1961-ன், 194ஏ (3) (I) (ஏ) பிரிவின்படி நடப்பு நிதியாண்டில் வட்டித் தொகை அல்லது மொத்த வட்டித் தொகை, வரவாக வந்ததோ அல்லது செலவாக செலுத்தப்பட்டதோ அல்லது இனிமேற்பட்டு வர வேண்டியதோ அல்லது செலுத்த வேண்டியதோ ரூபாய் 10,000த்தை தாண்டும் பட்சத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து வரி பிடித்தம் செய்யப்படும்.
சில வருடங்களுக்கு முன்பு வரை ஃபார்ம் 15ஜி/15ஹெச் பழைய வடிவமைப்பிலேயே உபயோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் புது ஃபார்மாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிப்பிக்கப்பட்ட ஃபார்மாட்டில் உள்ள ஃபார்ம் 15ஹெச் -இன் குறிப்பு 4-ன் படி நடப்பு நிதியாண்டில் மொத்த வட்டித் தொகை வரவாக வந்ததோ அல்லது செலவாக செலுத்தப்பட்டதோ அல்லது இனிமேற்பட்டு வர வேண்டியதோ அல்லது செலுத்த வேண்டியதோ வரிவிதிப்புக்குரியவரின் தகுதிக்கேற்ப அத்தியாயம் VIஏ-ன் படி வரி மற்றும் பிடித்தங்களிலிருந்து விலக்கு பெறக்கூடிய உச்சவரம்பை மிஞ்சும் வகையில் ஃபார்ம் 15ஹெச் -இல் அமைந்துள்ள டிக்ளரேஷன்களை வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் ஏற்கக் கூடாது.
இதே போன்ற ஒரு வரையறை புதுப்பிக்கப்பட்ட ஃபார்ம் 15ஜி படிவத்தின் குறிப்பு 6 -இலும் உள்ளது.
ஃபார்ம் 15ஜி/15ஹெச் படிவத்தில் செய்யப்படும் டிக்ளரேஷனுடன் தொடர்புடைய வரிவிதிப்பிற்குட்படாத உச்சபட்சத் தொகை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

60 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் – ரூ. 2,00,000/-
ஹெச்.யூ.எஃப்-கள், அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்கள் – ரூ. 2,00,000/-
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்குட்பட்ட தனிநபர் வாடிக்கையாளர்கள் (பிறந்த தேதி, 31/03/1954 அல்லது அதற்கு முற்பட்டதாய் ஆனால் 31/03/1934 -க்கு பிற்பட்டதாய் இருப்பின்) – ரூபாய் 2,50,000/-
80 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் வாடிக்கையாளர்கள் (பிறந்த தேதி, 31/03/1954 அல்லது அதற்கு முற்பட்டதாய் இருப்பின்) – ரூபாய் 5,00,000/-
இந்தப் படிவங்கள், மூலாதார அடிப்படையில் விதிக்கப்படும் வரியிலிருந்து அவ்வைப்பு நிதிக்கு வட்டி வழங்கும் தரப்பினர் விலக்கு பெற பயன்படுகிறது.

பான் கார்டு (PAN Card) விவரம் தெரிவித்திருந்தால் டி.டி.எஸ். 10% ஆகவும், பான் கார்டு இல்லாவிட்டால் 20 சதவிகிதமாகவும் பிடித்தம் செய்வார்கள். மேலும், வைப்புத் தொகையை காலம் முடிவதற்குள் முடிக்க வேண்டிய நிலை இருந்தால், அச்சமயம் எவ்வளவு டி.டி.எஸ். பிடித்தம் செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். முன்னாலேயே முடித்திருந்தால், ஏற்கெனவே குறிப்பிட்ட வட்டியைவிட குறைந்த வட்டி, அது எத்தனை காலம் வங்கியில் வைக்கப்பட்டிருந்தது என்பதைப் பொறுத்து கிடைக்கும். ஆனால், டி.டி.எஸ். பழைய வட்டி விகிதத்தின்படி பிடித்தம் ஆகியிருக்கும். எனவே, டி.டி.எஸ். அதிகமாக செலுத்தியிருந்தால் அந்த நிதி ஆண்டு முடிந்தவுடன் வருமான வரி படிவம் சமர்ப்பித்து அதிகப்படியாக டி.டி.எஸ். செலுத்தியதைத் திரும்ப பெறலாம்.”
**தண்டனை என்ன தெரியுமா?**
ஃபார்ம் 15ஜி/15ஹெச் என்பது எல்லோரும் கொடுத்து விட முடியாது. வருமான வரிக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே சமர்பிக்கலாம். மாறாக வருமான வரி செலுத்துபவர்களும் தவறான முறையில் 15ஜி/15ஹெச் சமர்ப்பித்து டி.டி.எஸ்.தொகையை திரும்ப பெற்றால் தண்டனை என்ன தெரியுமா?
வருமான வரிச்சட்டம் 1961 sec(277)-ன் படி ஆறு மாதம் முதல் ஏழு வருடம் சிறை தண்டனை மற்றும் அபதாரம்.
ஆகவே, முறையான அறிக்கையை தாக்கல் செய்து ,டி.டி.எஸ்ஸில் இருந்து விலக்கு பெற்று சேமிப்பை பெருக்கிடுங்கள்.

கட்டுரையாளர்: ச.காளிராஜ்
விகடனில் மாணவப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கூடங்குளம் அணு உலை சம்பந்தமான நிறைய விஷயங்களை எழுதியுள்ளார்.
படங்கள்: கூகுள் இமேஜ்
[சிறப்புக் கட்டுரை: ஆகலாம் நீங்களும் தொழிலதிபர்!](https://minnambalam.com/k/2017/05/23/1495477812)
