சம்பளம் வழங்கக் கோரி ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்!

Published On:

| By admin

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அருகே ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் முழு சம்பளம் வழங்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு வாரமும், காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு வாரமும் என தனித்தனியாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கூத்தக்குடி காலனி பகுதியைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில் ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சென்ற வாரம் வேலை செய்த ஊர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது. இதனால் இந்த வாரம் வேலை செய்யும் தங்களுக்கும் ரூ.150 சம்பளம்தான் வழங்குவார்கள் என நினைத்து ஆத்திரம் அடைந்த காலனி பகுதி தொழிலாளர்கள் கள்ளக்குறிச்சி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.273 முழு சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இதை ஏற்று தொழிலாளர்கள் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆழிவாய்க்கால் ஊராட்சியைச் சேர்ந்த தெற்கு நத்தம் பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரத்தநாடு – வல்லம் சாலையில் தெற்கு நத்தம் கிராமத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் விரைவாக வேலை வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து கூலி தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியிலும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share