சபரிமலை: உச்ச நீதிமன்றத்தின் முரண்பட்ட தீர்ப்புகள்!

Published On:

| By Balaji

பா.சிவராமன்

சபரிமலை நிர்வாகம் பெண்கள் வழிபாட்டைத் தடை செய்திருப்பதற்கு ஆதாரமாக விளங்கும் கேரள இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகளில் உள்ள 3ஆவது விதி, கேரள இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) சட்டம் 1965ஐ மீறியதாகாது என்றும் தீர்ப்பளித்திருந்தது.

இதற்கு எதிராக இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் 10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களை வழிபாட்டுக்கு உத்தரவாதம் செய்யும்படி கேரள அரசாங்கத்துக்கும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கும் (அறநிலையத் துறை), சபரிமலை கோயில் தந்திரி எனப் பெயர் கொண்ட தலைமை பூசாரிக்கும் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டருக்கும் உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைப் பதிவு செய்தது. இதே வழக்கில் தாங்களும் வாதிகளாகப் பெண்ணுரிமை அமைப்பு ஒன்றும் இணைந்து கொண்டது. அவர்கள் சார்பாகப் பிரபல பெண்ணியவாதி வழக்கறிஞரும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒன்றுக்கு முன்னால் வந்தது.

கேரள உயர் நீதிமன்றம் எழுப்பிய அதே சட்டப் பிரச்சினைகள் உச்ச நீதிமன்ற மூவர் பெஞ்சின் முன்னாலும் மறுபரிசீலனைக்கு வந்தன. இப்பிரச்சினைகளின் தீவிரத்தன்மையை உத்தேசித்து இந்தச் சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும்படி கோரி இந்த மூவர் பெஞ்ச் இந்த வழக்கை மேலும் உயர்மட்ட பெஞ்சான ஐவர் பெஞ்சுக்கு மாற்றியது. ஆக, இந்த ஐந்து பிரச்சினைகளுக்கு விடை காணுவதே வழக்கு. பெண்ணுரிமை அமைப்பின் சார்பாக வழக்கில் இணைந்துகொண்டிருந்த இந்திரா ஜெய்சிங்கும் இதே சட்டப் பிரச்சினைகளைத்தான் எழுப்பியிருந்தார். இவற்றைத் தாண்டி கூடுதல் பிரச்சினைகள் எதுவும் உச்சநீதிமன்றம் முன் வரவில்லை.

எழுப்பப்பட்ட இந்தப் பிரச்சினைகளில் ஒரு நிலையெடுத்து ஐவர் பெஞ்ச் செப்டம்பர் 28 அன்று தீர்ப்பளித்தது. இந்தப் பிரச்சினைகள் மீது வழக்கு விசாரணையின்போது எழுப்பப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் யாவை என்றும் இவை குறித்து தீர்ப்பில் ஐவர் பெஞ்ச் என்ன நிலையெடுத்தது என்பதைக் காண்போம்.

ஐவர் பெஞ்சில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.எம்.கான்வில்கர் கூட்டாக ஒரு தீர்ப்பையும் இதோடு உடன்பட்டு ஆனால் கூடுதலாக சில விஷயங்களில் தன் கருத்தையும் தெரிவித்து ஆர்.எஃப்.நாரிமனும், அதேபோல உடன்பட்டுக் கூடுதல் கருத்துகள் தெரிவித்திருந்த நீதிபதி சந்திரசூட்டும் தனித்தனி தீர்ப்புகளை வழங்கினர். இந்தப் பெரும்பான்மை தீர்ப்புகளோடு மாறுபட்டு, சபரிமலை கோயிலில் பெண்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லை என்று கூறித் தீர்ப்பளித்த சிறுபான்மை தீர்ப்பாக நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பளித்தார். இவ்வாறாக நான்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. பெரும்பான்மை தீர்ப்புபடி உச்ச நீதிமன்றம் பெண்களுக்கு வழிபாட்டு உரிமை வழங்கியுள்ளது.

**நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் தீர்ப்பு**

பெண்களின் வழிபாட்டுத் தடை நீடிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்த பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவ உரிமை வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 14 தங்கள் மதக் கோட்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி மத நடைமுறைகளைப் பின்பற்றுவதை அனுமதிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 25க்கு மேலானது அல்ல என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அரசியல் சட்ட தார்மிக நெறி ஒவ்வொரு தனிநபரும் மத உட்பிரிவும் அல்லது மதக்குழுவும் தங்கள் மதக் கோட்பாடுபடி – அது பகுத்தறிவு ரீதியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி – தர்க்க ரீதியானதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி – தங்கள் மத நடைமுறைகளைப் பின்பற்ற அனுமதிப்பதை உள்ளடக்கியது என்றும் வாதிட்டிருந்தார்.

ஐயப்ப பக்தர்கள் மத உட்பிரிவா, இல்லையா என்பது எதார்த்த விவரங்கள், சட்டம் ஆகிய இரண்டும் கலந்த பிரச்சினை. இது தக்க சிவில் நீதிமன்றம் ஒன்றால் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் தம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அதாவது இது இன்னும் சட்டரீதியாக முடிவுக்கு வராத பிரச்சினை என வாதிட்டிருந்தார்.

குறிப்பிட்ட வயதைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே என்ற அளவுக்குப் பெண்கள் தடை செய்யப்பட்டிருப்பது தீண்டாமை ஒழிப்பு பிரிவான அரசியல் சட்டப் பிரிவு 17இன் கீழ் வராது எனவும் தம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

கேரள இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகளில் உள்ள 3ஆவது விதி கேரளா இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) சட்டம் 1965ஐ மீறியதாகாது என மேலும் அவர் வாதிட்டிருந்தார்.

(இதர நான்கு நீதிபதிகள் கூறியது என்ன? அந்தத் தீர்ப்புக்குப் பிந்தைய நிகழ்ச்சிகளின் தாக்கம் என்ன? நாளை…)

**முந்தைய பகுதி : [உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்!](https://minnambalam.com/k/2019/01/09/20)**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share