கூட்டுறவு வங்கிக் கடன்: விதிமுறைகளைத் தளர்த்த வலியுறுத்தல்!

Published On:

| By Balaji

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதற்கான விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

கூட்டுறவுச் சங்கங்கள் கடன் வழங்கக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால், கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ. 3 லட்சம் வரை எவ்வித ஆவணங்களும் இன்றி கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கான அதே நடைமுறையைக் கூட்டுறவு வங்கிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பயனாளிகளுக்கு கடன் வழங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது..

இந்நிலையில், கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளைத் தளர்த்த வலியுறுத்தி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று (செப்டம்பர் 19) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான முதலீடு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் தமிழக அரசின் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கல் விதிகள் மாற்றப்படவில்லை. இதனால் வணிக வங்கிகளுடன் ஒப்பிடும் போது கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும் கடன் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில் வட்டி மிகவும் அதிகமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை விவசாய நகைக்கடன் வழங்க அரசு அனுமதிக்க வேண்டும்” என்று அன்புமணி கேட்டுகொண்டுள்ளார்.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும், 4,645 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள் செயல்படுகின்றன. அவற்றில் 75 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தான் கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள். அவர்களுக்குப் பயனுள்ள வகையில் கடன் வழங்கினால் தான் அவர்கள் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். ஆனால், வணிக வங்கிகள் எந்த ஆவணமும் இல்லாமல் 4சதவிகித வட்டியில் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.32,000 மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அதற்கு 7சதவிகித வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகை குறைவாகவும், வட்டி அதிகமாகவும் இருந்தால் உழவர்கள் கூட்டுறவு வங்கிகளை நோக்கி எப்படி வருவார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2017 மற்றும் 18 ஆம் ஆண்டில் ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.2,000 கோடி மட்டும் தான் கடன் வழங்க முடிந்தது. நடப்பாண்டில், ரூ.8,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் 3 மாதங்களில் 61,851 உழவர்களுக்கு ரூ.417 கோடி மட்டுமே பயிர்க்கடன் வழங்கப் பட்டுள்ளது. பயிர்க்கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை முழுவதும் கடனாக வழங்கப்படா விட்டால் கூட்டுறவு வங்கிகளுக்குத் தான் இழப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், குறுவை நெற்பயிர் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்திலும் சம்பா பயிருக்கு உரம் வைக்க வேண்டிய நேரத்திலும் இந்தப் போராட்டம் நீடிப்பது பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, கூட்டுறவு வங்கி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு அரசு கொண்டு வர வேண்டும். என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share