சென்னையில் 60 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் 10 மணி நேரத்தில் மீட்டனர். பணத்துக்காக வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணே குழந்தையைக் கடத்தியது தெரியவந்துள்ளது.
சென்னை ஷெனாய் நகர், செல்லம்மாள் தெருவை சேர்ந்தவர் அருள் ராஜ், ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி நந்தினி தனியார் மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களது குழந்தை அன்விகா. மூன்றரை வயதுக் குழந்தையான அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று (ஜூலை 18) பள்ளி முடிந்து மதியம் 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். நந்தினி சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்க அன்விகா, அவர்களது வீட்டில் பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த அம்பிகாவுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இருவரும் மாயாகி உள்ளனர்.இருவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது நந்தினியின் செல்போனுக்கு அம்பிகாவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர் தன்னையும், குழந்தையையும் யாரோ கடத்திவிட்டார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதுகுறித்து பணியில் இருந்த தனது கணவர் அருள்ராஜுக்கு நந்தினி தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அருள் ராஜுக்கு ஒரு ஆண் போன் செய்து, உங்கள் குழந்தை வேண்டுமானால் ரூ.60 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து தன் குழந்தை கடத்தப்பட்டதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் அருள் ராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அருள் ராஜின் வீடு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அம்பிகா எவ்வித அச்சமும், பதட்டமும் இன்றி ஒரு காரில் ஏறி செல்வது பதிவாகியுள்ளது. அம்பிகாவே குழந்தையைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. தொடர்ந்து அவரது செல்போன் நம்பரை போலீசார் ட்ரேஸ் செய்துள்ளனர். அதே சமயத்தில் அம்பிகாவுக்கு ஒரு நம்பரில் இருந்து அடிக்கடி போன் வந்திருக்கிறது. அந்த நம்பரை ட்ரேஸ் செய்ததில், அவரது பெயர் கரிமுல்லா சயீத் என்ற நபருடையது எனவும் நெற்குன்றத்தில் இருந்து பேசியதும் தெரியவந்தது. பின்னர் நெற்குன்றம் சென்று கரிமுல்லா சயீத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரிமுல்லா சயீத்திடம் நடத்திய விசாரணையிலும், அம்பிகாவின் நம்பரை ட்ரேஸ் செய்ததிலும் அவர் கோவளத்தில் உள்ள லாட்ஜில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அம்பிகாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர்..
விசாரணையில், கரிமுல்லா சயீத், புழலில் உள்ள கேஎஃப்சி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்ததும், அம்பிகாவும் இவரும் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
அம்பிகா வேலைக்காக அருள் ராஜ் வீட்டில் சேர்ந்ததும் அவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டு குழந்தையைக் கடத்தினால் பெரிய தொகை பெறலாம் என்று திட்டமிட்டு இருவரும் குழந்தையை கடத்தி ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் சந்தேகம் வராமலிருக்க அம்பிகா தன்னையும் யாரோ கடத்தியதாக நாடகமாடிறிருக்கிறார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து 10 மணி நேரத்தில் அன்விகாவை மீட்ட காவல் துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆன்லைன் விளம்பரத்தின் அடிப்படையில் ஒரு மாதத்துக்கு முன்புதான் அம்பிகாவை நந்தினியும், அருள்ராஜும் வேலைக்கு சேர்த்துள்ளனர் என்றும் அந்த ஆன்லைன் நிறுவனம் குறித்தும், முன்பு அம்பிகா எங்கே வேலை செய்தார் என்பது குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
,”





