குன்னூர் தேயிலை : வீழும் விலையால் விவசாயிகள் கவலை!

Published On:

| By Balaji

குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் தேயிலை ஏலத்தில் தேயிலை விலையில் ஏற்பட்ட கடும் சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் தேயிலை பயிரிடப்படுகிறது. நீலகிரியில் மட்டும் 150க்கும் அதிகமான தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இங்குக் கிட்டத்தட்ட 60,000 தொழிலாளர்கள் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் தேயிலை தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையானது குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் மூலம் வாரந்தோறும் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வார ஏலச் சந்தையில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ.87.76 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் மிகப் பெரிய விலை வீழ்ச்சி ஆகும். இரண்டு வாரங்களுக்குப் பின்பு நடைபெற்ற ஏலத்தில் 87.93 ரூபாயாக இருந்த தேயிலை விலை இந்த வாரமும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் தீபாவளி சமயத்தில் 100 ரூபாயாக இருந்த ஒரு கிலோ தேயிலையின் விலை தொடர் சரிவுக்குப் பின் தற்போது ரூ.87.76 ஆகக் குறைந்துள்ளதால் தேயிலை விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share