தமிழகத்தின் கடைகோடியில் அமைந்திருக்கும் விளவங்கோடு வட்டார மக்களின் வாழ்க்கை, அரசியல், பண்பாட்டு உரசல்கள், மத மோதல்கள், மங்கி ஒலிக்கும் அறக்குரல்கள் ஆகியவற்றை கவனப்படுத்தியிருக்கும் முக்கியமான நாவல்- ‘குன்னிமுத்து’. தமிழகத்திலிருந்து சற்றே வேறுபட்ட அரசியல் தட்பவெட்ப சூழல் கொண்டது குமரி மாவட்டம். இந்துக்களின் மத நம்பிக்கையில் ஆழ வேரூன்றியுள்ள இந்துத்துவம் எதிர்ப்பின்றி பந்தய ஆட்டம் போடுகிறது. பெந்தகொஸ்து சபைகள் பெருகி இந்துத்துவம் குறி வைக்கும் மக்கள் பிரிவை மனநோயாளியாக மாற்றி வருகிறது. மக்களின் எதார்த்த வாழ்க்கையைச் சிதைக்கும் இந்த அவலத்தைப் புனைவுக் களத்தில் நமக்கு அறியத் தருகிறார் நாவலாசியர் குமாரசெல்வா.
இருளி என்ற பெண் பாத்திரம் சந்திக்கும் இன்னல்களை முதன்மையாக விவரித்துச் செல்கிறது நாவல். இருளி பூப்பெய்தாதவள். இருளி என்பது காரணப் பெயராக அவளுக்கு நிலைக்கிறது. அவளுக்கு முயற்சித்த வைத்தியங்கள் அனைத்தும் தோற்று போனதை ஒப்புக் கொள்கிறார் பங்கிராஸ் வைத்தியர். ஏழைப் பெண்ணான இருளி, வைத்தியருக்கு ஒத்தாசையாக அவர் இல்லத்தில் பணியாற்றுகிறாள். அடிதடி, சிறு திருட்டுகளில் ஈடுபடும் வண்டாளம் சிகிச்சைக்காக வைத்தியரிடம் வந்த நேரத்தில் இருளியைக் கண்டு விரும்புகிறான். திருமணத்துக்குப் பிறகு வண்டாளம் முன்பு இருந்ததை விடவும் மோசமாகிறான். தினமும் குடித்து விட்டு இருளியை அடிக்கிறான். அவனுடைய நண்பன் நடராசனுடன் இணைந்து இருளியின் தந்தையிடமிருந்த பணத்தைப் பறித்து விட்டு அவரை கொலையும் செய்கிறான். சிறிது காலம் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி விட்டு இறந்து போகிறான். வண்டாளத்துக்கும் அவன் இரண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தையை இருளி வளர்க்கிறாள்.
இருளியின் வாழ்க்கை வன்முறையின் பரிசோதனை நிலமாக இருக்கிறது. முதலில் வண்டாளம், அவன் இறப்புக்குப் பின் அவனது நண்பன் நடராசன், பிறகு அவள் கீழ்நிலை ஊழியராக பணிபுரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் என்று தொடர்ந்து பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகிறாள். கணவன் வண்டாளம் தனது மனதைக் காயப்படுத்தி விட்டு இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது தனது வாழ்வைச் சாபகரமானதாக எண்ணுகிறாள். விளைநிலைங்களைப் பிரிக்கும் கற்றாழை முள்ளை பிடுங்கி தனது பாலுறுப்பை கிழிக்கிறாள். சிறுமுட்டை வடிவ குன்னிமுத்துப் பரல்கள் உருண்டோடுவதைப் போல ரத்தம் பீறிடுகிறது. இருளியிடமிருந்து இயற்கையாகச் கசியாத ரத்தத்தை உணர்த்தும் குறியீடாக குன்னிமுத்து நாவலில் வருகிறது.
தன்னை துரத்தும் ஆபத்துகள் குறித்த பிரக்ஞைகளில் தாக்குண்டு அவள் தன்னிரக்கத்துக்குள் மூழ்கிவிடவில்லை. நிகழ்ச்சிப்போக்கில் அவள் வாழ்க்கை பயணித்தாலும் அவளிடம் வாழ்க்கை குறித்து பெரிய புகாரோ, ஏமாற்றமோ இல்லை. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்ற அசோகமித்திரன் கதாப்பாத்திரங்களின் புலம்பலை இருளியிடம் கேட்க முடியவில்லை. தனக்கு அனுபவ பாத்தியதை இல்லாத இடத்திலும் நடவுகள் நட்டு மக்களுக்கு பயன்படுகிறாள்.
இணைகோட்டில் இன்னொரு கதை விரிகிறது. அது குமரி மாவட்டத்தில் நிலவும் அரசியல் அதிகாரத்துக்கான போட்டியை உரைக்கிறது. மதம் மூலமாக சமூக பலத்தைப் பெறக் கடைபிடிக்கப்படும் கீழ்மையான உத்திகளை நாவல் விவரிக்கிறது. நாவல் பதிவு செய்திருக்கும் இரண்டு சம்பவங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. ஒன்று, இந்துத்துவத்தின் அரசியல் செல்வாக்குடன் ஒரு சூத்திர பூசாரியின் வழிபாட்டு உரிமை பறிபோகிறது. அவர் இடத்தில் பார்ப்பனர் ஒருவர் அமர்த்தப்படுகிறார். பூசாரி மட்டும் மாறவில்லை. கோயிலின் தட்டையான கூரை உடைக்கப்பட்டு கோபுரம் கட்டி குடமுழுக்கு செய்யப்படுகிறது. பத்திரகாளியைத் துரத்தி விட்டு பத்ரேஸ்வரி வந்து அமர்கிறாள். வருமானமும், மதிப்பும் இழந்த பூசாரி தங்கநாடான் பழி வாங்கத் துடிக்கிறார். இந்து கட்சியின் (பா.ஜ.க) வேட்பாளர் பொன். சீதாராமனை எதிர்த்துப் போட்டியிட்டு போண்டியாகிறார்.
அடுத்தது, சி.எஸ்.ஐ சபையில் செயலாளராக இருந்த பொன்னையா கம்பவுண்டர் அதிலிருந்து வெளியேறுகிறார். அவர் கிறித்தவத்தின் இன்னொரு சமயக்கிளையான பெந்தகொஸ்து சபையை நிறுவி அதன் பாதிரியாகி விடுகிறார். மக்கள் கூட்டம் அவர் ஆராதனைகளை மொய்க்கிறது. குமரியைக் கடினப் புற்றுநோய்க் கட்டிகளாக இந்துத்துவமும், பெந்தகொஸ்துவும் தாக்கியிருப்பதை நாவலின் இந்த இரண்டு சம்பவங்களும் அறிவிக்கின்றன. ‘அப்பாலே போ சாத்தானே’ என்று விரட்டினால் ஓடி விடக்கூடியதா இந்துத்துவம்?
பொன்னையா கம்பவுண்டர் சி.எஸ்.ஐ-லிருந்து வெளியேறிய பின்னணி சூழ்ச்சியும், சுவாரஸ்யமும் கொண்டது. தீவிர இந்துத்துவவாதியாக இருந்து அவரை எதிர்த்துக் கொண்டிருந்த நடராசன் தனது மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கருதும் பலகீனமான தருணத்தில் மதம் மாறுகிறார். இந்துத்துவ அமைப்பில் அரசியல் சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்ட நடராசன் அதனைப் பிரயோகிக்கிறார். மாவட்ட திருச்சபையில் பொன்னையா கம்பவுண்டருக்கு எதிரான உறுப்பினர் ஒருவரின் ஆதரவைப் பெற்று சி.எஸ்.ஐ சபை செயலாளர் தேர்தலில் பொன்னையா கம்பவுண்டரை வீழ்த்துகிறார். அவமானத்தில் குமையும் பொன்னையா தனிச்சபை காண்கிறார்.
பொன்னையா கம்பவுண்டரின் மகன் ஸ்டீபன். மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர். மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தும் தந்தையின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கிறார். தந்தையின் கன்வென்ஷன் கூட்டத்திலே தோழர்கள் சிலருடன் உட்புகுந்து பிரசுரம் விநியோகித்து கைதாகிறார். ‘அப்பன் பிரசங்கியார்; மகன் கம்யூனிஸ்ட்’ என்று மற்றவர்கள் கிண்டலடிக்கும் போது கூனிக்குறுகுகிறார், பொன்னையா கம்பவுண்டர். ஆசிரியராக வேலை பார்க்கும் மகன் ஸ்டீபனுக்கு திருமணம் செய்து வைத்தால் அமைதியாகி விடுவான் என்று தந்தை நினைக்கிறார். ஆனால், ஸ்டீபன் அதற்கு உடன்படவில்லை. ஸ்டீபனின் நடவடிக்கையால் பெந்தகொஸ்து மதப் பிரிவு மக்களின் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்று பழி சுமத்தப்பட்டு கட்சியிலிருந்து அவரை வெளியேற்றுகிறார்கள்.
இருளியின் வளர்ப்பு மகள் சுந்தரியை திருமண ஆசை காட்டி கெடுக்கும் பத்ரேஸ்வரி அம்மன் கோயிலின் பார்ப்பன போற்றியை தோழர்களுடன் இணைந்து அடித்து துவைக்கிறார். இருளிக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார். கிறித்தவ வீடுகள் இருக்கும் திசைநோக்கி ஒலிபெருக்கிகளை அலற விட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் இந்துத்துவக் கயமையை சட்டரீதியில் முறியடிக்கிறார். தனது தந்தை சேர்த்த சொத்துகள் அனைத்தையும் அவரது மரணத்துக்குப் பின் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கிறார். ஒரு அறக்குரலாக ஸ்டீபனின் பணிகள் நாவலில் ஒலிக்கின்றன.
ஒரு பக்கம் பொன்னையா கம்பவுண்டர் போன்ற மதவாதிகள் மக்களை மத நம்பிக்கையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் இந்துத்துவவாதிகள் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். போலியான லட்சியவாதத்தை முன்வைத்து இளைஞர்களை ஈர்க்கிறார்கள். நடராசனின் மகன் சுரேஷ் என்ற அரவிந்தன் மணிகண்டன் ஒரு இந்துத்துவவாதியாக வீழ்ச்சியுறுகிறான். எப்போதாவது மட்டுமே தாயையும், தந்தையையும் பார்க்க வருகிறான். மதபாட சாலைகள், ஷாகா கூட்டங்கள், சிலுவை உடைப்புப் போராட்டம் என்று ஏராளமான வேலைத்திட்டங்களுடன் இந்துத்துவ தலைமை பீடம் இளைஞர்களை வசப்படுத்திக் கொள்கிறது.
சிலுவை உடைப்பு போராட்டத்தை அறிவிக்கிறது இந்து தேசப்படை. இதற்கு நடராசனின் மகன் சுரேஷ் என்ற அரவிந்தன் மணிகண்டன் செல்கிறார். (இந்த பாத்திரம் இந்துத்துவக் கட்டுரையாளர் அரவிந்தன் நீலகண்டனை பல வகைகளிலும் நினைவுபடுத்துகிறது.) இந்து தேசப்படையின் கலவர சதியை முறியடிக்க கிறிஸ்தவர்கள் பெருமளவுக்கு சிலுவை மலை உச்சியில் கூடுகின்றனர். அப்போது பிளஸ்ஸி என்றொரு பொறியியல் மாணவி அவர்களுடன் செல்கிறாள். வீட்டிலே செல்லமாக வளர்க்கப்படும் அவள் வழியிலே அமர்ந்து விடுகிறாள். சிலுவை உடைப்புக்கு வந்த சுரேஷ் என்ற அரவிந்தன் மணிகண்டன் அவளை கண்ணுறுகிறான். தனது இந்துத்துவ முகத்தை மறைத்து அவளுடன் தான் ஏற்கனவே பழகியதை நினைவுபடுத்தி நெருக்கமாகிறான். தான் ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்டாக பணியாற்றுவதாக தெரிவிக்கிறான்.
குமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் திட்டமிடும் கலவரங்களின் தன்மையை ஆராயவும் இந்த நாவல் உதவி செய்கிறது. குமரியில் இந்துத்துவம் அழுத்தமாக வேர் விட்டாலும் குஜராத் அல்லது உ.பி. போன்று நீடித்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸால் நடத்த முடியவில்லை. சிறு சிறு கலவரங்களாக மட்டுமே அவை வெடித்து ஆறுகின்றன. நடராசன் இந்துத்துவ அமைப்பில் இருந்த போது பொன்னையா கம்பவுண்டரை கொலை செய்ய முயற்சி செய்கிறான். சில தனிப்பட்ட கணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கு இந்துத்துவம் நடராசனுக்கு இங்கு பயன்படுகிறது. குஜராத் போன்று சிறுபான்மை மக்களை நிரந்தர அச்சத்தில் உழல வைக்க இயலவில்லை.
சாதிய ஆதிக்க நிலையை இழந்த நாயர்களின் மனதிலிருந்து மறைந்து வெளிப்படும் துவேசத்தை விளக்கியிருக்கும் இடம் சிறப்பு. பொன். சீதாரமனுக்கு எதிராக போட்டியிடும் பத்திரகாளி அம்மன் கோயிலின் பழைய பூசாரி தங்கநாடானிடம் பத்மனாபன் தம்பி என்ற ஒரு நாயர் பேரம் பேசுகிறார். இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு தேர்தலில் பின்வாங்கச் சொல்கிறார். பத்மனாபன் தம்பி யாரை ஆதரித்துப் பேசுகிறார் என்று தெரியாமல் குழம்புகிறார் தங்கநாடான். தனது நோக்கத்தின் ஒரு பகுதியை மட்டுமே சொல்கிறார் பத்மனாபன் தம்பி. தான் பூ கட்சிக்கு (பா.ஜ.க) ஆதரவாக அல்ல; கம்யுனிஸ்ட் வேட்பாளருக்கு (சி.பி.எம்) ஆதரவாகத் தான் செயல்படுவதாக தெரிவிக்கிறார். பத்ரேஸ்வரி அம்மன் கோயிலின் நிர்வாகக் குழுவில் இருக்கும் பதமநாபன் தம்பி எதற்காக கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்கிறார் என்று தெரியாமல் துணுக்குறுவார், தங்கநாடான்.
பத்மனாபன் தம்பி மனைவியிடம் தனது உள்ளக்கிடக்கையை கொட்டுகிறார். ஏடி பார்கவி, நன்னா மனசிலாக்கிக்கோ (புரிந்து கொள்). கம்யூனிஸ்ட் ஜெயிச்சா எம்.பி.யாட்டு தன்னே இரிக்கும். பொன். சீதாராமன் (பொன். ராதாகிருஷ்ணன்) ஜெயிச்சாலோ மந்திரி ஆவும், கேட்டோ. ஈ (இந்த) பனையேறி பூறிமக்க சென்ட்ரல் மினிஸ்டர் ஆவுந்நதா? கொள்ளாம்!” என்பார்.
சென்னையின் ஏழை சேரி மக்களை நம்பியிருப்பது போன்ற நிலையில் பெந்தகொஸ்து சபைகள் குமரியில் இல்லை. பெரும் செல்வந்தர்கள் அவற்றை ஆதரிக்கிறார்கள். ஏழைகளை ஒருவிதமாகவும், பணக்காரர்களை நல்ல விதமாகவும் நடத்துகிறார்கள் பெந்தகொஸ்து பாதிரிகள். தசமப் பாகம் (வருமானத்தின் பத்தில் ஒரு பங்கு) கேட்டு நச்சரித்து ஏழைகளைச் சுரண்டும் பாதிரிகள், பணக்காரர்களிடம் அவ்விவதம் கோருவதில்லை. கொடுப்பதை கைகளை அணைத்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு ஏழை வீட்டுத் திருமணத்தை நடத்தச் செல்லும் பொன்னையா கம்பவுண்டரின் பகட்டு எடுபடாமல் போகிறது. மணமகன் தனக்கு ஸ்தோத்திரம் சொல்லவில்லை என்று எகிறுகிறார். மண்மகனின் மீசை அவரை உறுத்துகிறது. சாத்தானின் மீசை அது என்று பழித்து அதனை எடுத்தால் தான் கல்யாணம் செய்து வைக்க முடியும் என்று அறிவிக்கிறார். மணமகன் மீசையை மழிக்க முடியாது என்று அறிவித்து விட்டு பெண்ணை அழைத்துக் கொண்டு பத்திரப்பதிவு அலுவலகம் செல்லத் தயாராகிறார். நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதை உணர்ந்த ஊழியக்காரர்கள் சிலர் பாதிரியார் பொன்னையாவை மனமிரங்க வைக்கிறார்கள். திருமண ஆராதனை நடக்கிறது. நாவலின் இந்த பகுதி மிக சுவாரஸ்யமாக செல்கிறது.
வட்டார மொழியில் பாத்திரங்களின் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. பொது வாசகருக்கு ஏற்படும் சங்கடங்களை கருத்தில் கொண்டு வட்டார சொற்களுக்கு இறுதியில் பொருள் விளக்கம் அளித்துள்ளார் நாவலாசிரியர். ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, தோப்பில் மீரானின் கடலோர கிராமத்தின் கதை வரிசையில்குன்னிமுத்து தமிழகத்தின் மையநீரோட்டம் அறிந்திராத ஒரு எல்லை பகுதி மக்களின் வாழ்க்கை சிக்கல்களை அறிய தருகிறது. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் எழும் அற உணர்வுடன் இந்த நாவலை படைத்திருக்கிறார் குமாரசெல்வா.,”
