|குண்டர் சட்டத்தில் 8 ஏடிஎம் கொள்ளையர்கள் கைது!

Published On:

| By Balaji

வடமாநில கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 8 பேர் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த குற்றத்திற்காகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேடு அவிநாசி சாலை பகுதியில் கடந்த மாதம்(டிசம்பர் 10இல்) அதிகாலை நேரத்தில் இந்தக் கொள்ளை கும்பல் 3 தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் புகுந்து 2 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூபாய் 30 லட்சத்தைக் கொள்ளையடித்தது. இதைதொடர்ந்து 3ஆவது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றபோது முடியவில்லை.

இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கேஸ் வெல்டிங் இயந்திர உதவியுடன் ஏடிஎம்களை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அந்த ஏடிஎம் மையங்களில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் மீது கருப்பு நிற பெயின்ட் அடித்தும், அவசரகால அலாரத்தை செயலிழக்கச் செய்தும் திட்டமிட்டு கொள்ளை அடித்துள்ளனர்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர், ஹரியாணாவைச் சேர்ந்த 3 பேர், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேர் மீது பல்வேறு மாநிலங்களில் நடந்த ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பீளமேடு காவல் ஆய்வாளர் அன்பரசு பரிந்துரையின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கொள்ளையர்கள் 8 பேரையும், கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பெரியய்யா நேற்று(ஜனவரி 13) உத்தரவிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share