விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் பணியாற்றும் திமுக-அதிமுக நிர்வாகிகளுக்கு ஆயுதபூஜை விடுமுறை கிடையாது என்றும் சனி ஞாயிறு ஆயுதபூஜை தினங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளுமே இடைத்தேர்தல் திருவிழாவை தவிர தங்களுக்கு வேறு எதுவும் திருவிழா இல்லை என்று முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் அக்டோபர் 4 பிற்பகல் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு சென்று அங்கே பாஜக தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டதாகவும் இதன்படி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு கொடுக்கும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அதிமுக- பாஜக இடையே என்ன நடந்து வருகிறது என்பது ஜெயலலிதா இறப்புக்குப் பிறகான காலங்களிலிருந்து தெளிவாக தெரிந்தாலும், இந்த இடைத்தேர்தல் சீசனில் பாஜக முரண்டு பிடித்தது அதிமுக பணிந்து அதை சரி செய்தது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத்தில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் சந்தித்துப் பேசினார்கள். அப்போதுதான் பாஜக இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அளிக்க வேண்டுமெனில் ஐந்து மாநகராட்சி மேயர் சீட்டுகளை வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு தரவேண்டும் என்று கோயல் நிபந்தனை விதித்தார். அதை வேலுமணி மூலமாக எடப்பாடிக்கு தெரிவித்து எடப்பாடியும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அப்படியும் மசியாத பாஜக, “ நீங்கள் தலைமைக் கழக நிர்வாகிகளை அனுப்பி பாஜக அலுவலகத்தில் வந்து ஆதரவு கேளுங்கள். நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்று எடப்பாடிக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
இதை எதிர்பார்க்காத எடப்பாடி, குஜராத்தில் கோயலை சந்தித்தவரும் மீனவர் பிரிவுச் செயலாளரான. அமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பி வைத்துள்ளார். அதன்படி பாஜக அலுவலகம் சென்ற ஜெயக்குமாருக்கு காபி, சால்வைகள் உபசரிப்பு மேற்கொண்டனர். குஜராத்தில் கோயல் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவின்படி இரு தரப்பினரும் இடைத் தேர்தலில் இணைந்து பாடுபடுவது என்று முடிவெடுத்தனர்.
வெளியே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “அதிமுக இடைத்தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைப்போம்” என்று சொன்னதை அதிமுகவினரே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
