கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தாக்குதல் : சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்க – அருண் ராஜ்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஒடிசா, சத்தீஸ்கர், கேரளா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது சிறுபான்மையினர் மீது வலதுசாரி கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழக கொள்கைப்பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வலியுறத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று (டிசம்பர் 25) அவர் தனது எக்ஸ் பதிவில், “அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாக உலகம் எங்கும் கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் பெருவிழா. உலகில் உள்ள அனைத்து மக்களும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதும், அதனை ஆதரிப்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், மதச்சார்பின்மை மண்ணான நம் இந்தியத் திருநாட்டில் தற்போது உலக நீதி மற்றும் இயல்புக்கும் எதிரான சில நிகழ்வுகள் நடந்தேறி உள்ளதாகச் சில தகவல்கள் வந்துள்ளன. மனதை வேதனையுறச் செய்யும் அவை நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால் விடுவதாக உள்ளன.

ADVERTISEMENT

டெல்லியின் ஒரு பகுதியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.

ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற ஓர் ஏழைக் குடும்பத்தை சிறுவன் ஒருவன் கொடுமைக்குள்ளாக்கி விரட்டி அடித்திருக்கிறான்.

ADVERTISEMENT

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற சிறுமியை அவளுடைய பிறவிக் குறைபாட்டை ஏளனமாகப் பேசியவர் யார் தெரியுமா? அஞ்சு பார்கவ் என்ற பா.ஜ.க.வின் மாவட்டத் துணைத்தலைவராம்.

உத்தரகாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் நடத்தக்கூட விடாமல் ரத்து செய்ய வைக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இவையெல்லாம் வடமாநிலங்களில் என்றால், நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளது யார் தெரியுமா? தீவிர ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர்தான்.

இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், இனி வரும் காலங்களில், இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெற அனுமதிக்கவே கூடாது. இதுபோன்ற வன்செயல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனையில் பங்குபெற்ற மாண்புமிகு ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதற்கான கண்டனத்தைத் தெரிவித்து, சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

“எம்மதமும் நம்மதமே” என்ற பேரன்பு மனப்பான்மையுடன் நல்லிணக்கம் காப்பவரே நம் வெற்றித் தலைவர் அவர்கள். ஆகவே, சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே நம் வெற்றித் தலைவர் மற்றும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான, சமரசமற்ற மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை ஆகும். இதை நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலுடன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share