இந்த சீசனில் அதிகமாகக் கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு பாரம்பரியம்மிக்கது. யுத்த காலங்களில் சில நேரம் மக்கள் மரவள்ளிக்கிழங்கை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படுவதுண்டு. இந்தக் கிழங்கில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் இருப்பதால் உண்ட உணவு ஜீரணமாக உறுதுணை நிற்பதுடன், வயிற்றுக்கோளாறுகளில் இருந்தும் நம்மைக் காக்கிறது. எலும்புகள் வலுப்பட உதவுகிறது. தற்போதைய தட்பவெப்ப நிலைக்கு இந்த மரவள்ளிக்கிழங்கு மசால்வடை சூப்பர் காம்பினேஷனாக அமையும்.
**என்ன தேவை?**
மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ
ஊறவைத்த கடலைப்பருப்பு – 200 கிராம்
பச்சரிசி மாவு – ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி – ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்)
பூண்டு – 10 பல்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 4
புதினா – ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் – 100 கிராம் (நறுக்கவும்)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 500 மில்லி
**எப்படிச் செய்வது?**
மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி எடுக்கவும். மரவள்ளிக்கிழங்கு மசால் வடை தயார். இது தயிர் சாதத்துக்குச் சுவையாக இருக்கும்.
[நேற்றைய ஸ்பெஷல்: பலகாரங்களின் சுவையைக் கூட்ட…](https://minnambalam.com/k/2020/02/16/3)
