பால், தயிர், நெய் எனப் பாலின் பங்கு நம் அன்றாட வாழ்வில் அவசியமான ஒன்றாகி இருக்கிறது. பாலின் விலை ஏற்றம் ஒரு புறம் இருக்க, அந்தப் பாலை நாம் பதமாகப் பயன்படுத்துகிறோமா… இதோ சில டிப்ஸ்….
* பால் காய்ச்சும் பாத்திரம் சுத்தமாக இருப்பது அவசியம். முன்பே கழுவி அடுக்கிவைத்த பாத்திரமாக இருந்தாலும் மீண்டும் ஒரு முறை கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள் .
* பசும்பால் வாங்குகிறீர்கள் எனில், தண்ணீர் சேர்க்காமல் பாலை காய்ச்ச வேண்டும். பால் பொங்கியதும் இறக்கிவிடாமல் மிதமான சூட்டில் ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பாலின் வாசனை வீடு முழுவதும் பரவி, பாலின் நிறம் பழுப்பு நிறமாக மாறும் சமயத்தில் இறக்கி ஆறியதும் பருகலாம்.
* பாக்கெட் பால் வாங்குகிறீர்கள் எனில், உங்கள் பாலில் இருக்கும் கொழுப்புச் சத்துக்கு ஏற்ப பாலில் தண்ணீர் கலந்து ஏடுகள் படிய பாலைக் காய்ச்சி ஆறவைத்துப் பருகுவது நல்லது.
* பாலை இரு முறைக்கு மேல் சுட வைப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். அடிக்கடி சூடு செய்வதால் பாலில் உள்ள சத்துகள் ஆவியாக வாய்ப்புகள் உள்ளது.
* பாக்கெட் பால்களில் உள்ள கொழுப்புச்சத்து காரணமாகக் குழந்தைகளுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படக் கூடும் என்பதால் கூடுமானவரை குழந்தைகளுக்கு பாக்கெட் பாலினை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
* பாலில் தண்ணீர் கலப்பதன் மூலம் பாலில் உள்ள சத்துகள் குழந்தைகளை முழுமையாகச் சென்றடையாது என்பதால் குழந்தைகளுக்குக் காய்ச்சும் பாலில் தண்ணீர் கலக்கக் கூடாது.
* காய்ச்சிய பாலை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்கள் எனில், பயன்படுத்துவதற்கு முன் அறையின் வெப்பத்துக்கு வந்ததும் மீண்டும் காய்ச்ச வேண்டும்.
* மீதம் இருக்கும் பாலை உறை ஊற்றி தயிர் ஆக்குகிறீர்கள் எனில், மண் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். பானையில் உள்ள துகள்களில் தயிர் அடைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் தேங்காய் நார் கொண்டு பானையைச் சுத்தம் செய்து வெயிலில் வைத்து மீண்டும் பயன்படுத்துங்கள்.
[நேற்றைய ரெசிப்பி: மாங்காய் சாதம்](https://minnambalam.com/public/2020/02/29/2/kitchen-keerthana-mango-rice)
