ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அங்கு சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய ராணுவத்தில் 2 மாத காலம் ராணுவப் பயிற்சியில் ஈடுபடப்போவதாகக் கூறி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்ற தோனி, பின்னர் விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது ரோந்துப் பணி இன்றோடு (ஆகஸ்ட் 15) முடிவடைகிறது. இன்று 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக் பகுதியில் தோனி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். லடாக்கில் உள்ள சக ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை அவர் கொண்டாடினார். பின்னர் சத்பவனா ராணுவப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினார் தோனி.

முன்னதாக, நேற்று ராணுவ ஜெனரல் மருத்துவமனைக்குச் சென்ற தோனி, அங்கு சிகிச்சை பெற்றுவரும் ராணுவ வீரர்களிடம் நலம் விசாரித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. ராணுவப் பயிற்சிக்கு பின்னர் தோனி ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி ஒன்றைத் தொடங்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களிடம் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க இலவசமாகப் பயிற்சி வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
**
மேலும் படிக்க
**
**[முப்படைகளின் தலைமை அதிகாரி! அத்வானி கனவை நனவாக்கிய மோடி](https://minnambalam.com/k/2019/08/15/20)**
**[டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்ட எடப்பாடி- கோபப்பட்ட பன்னீர்!](https://minnambalam.com/k/2019/08/14/75)**
**[2020 ஏப்ரல் ரஜினியின் தனிக்கட்சி!](https://minnambalam.com/k/2019/08/15/17)**
**[நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!](https://minnambalam.com/k/2019/08/14/18)**
**[எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!](https://minnambalam.com/k/2019/08/14/5)**





