மீண்டும் தன்னை ஆல்ரவுண்டராக நிரூபித்து கடைசி வரை களத்தில் நின்று ஆடிய கேதார் ஜாதவ் இந்தியாவுக்கு வெற்றிக் கனியைப் பறித்துக்கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த மைதானம் சேசிஸ் செய்வதற்குச் சற்று கடினமானது என்பதால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் நல்ல தொடக்கத்தைத் தர வேண்டிய கட்டாயம் இருந்தது. இருப்பினும் ஆட்டத்தின் இரண்டாவது ஓவர் முதல் பந்திலேயே ஷிகர் தவான் பொறுப்பில்லாத ஷாட் அடித்து டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
தவன் வெளியேறினாலும் இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா – விராத் கோலி ஜோடி 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கோலியை ஆடம் ஜாம்பா வெளியேற்றினார். சில நிமிடங்களிலேயே ரோஹித் ஷர்மாவும் பெவிலியன் திரும்பினார். அதுவரையிலும் நிதானமாகவே ஆடிவந்த ரோஹித் திடீரென்று அதிரடியில் இறங்க ஆரம்பித்தார். அவர் ஆட்டமிழந்த ஷாட் அப்படிப்பட்டதல்ல என்றாலும் அதற்கு முந்தைய பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்று பந்தைத் தவறவிட்டார். அந்த ஷாட் சரியாக அமைந்து சிக்சர் கிடைத்திருந்தாலும் கோலி ஆட்டமிழந்திருந்த அந்த நேரத்தில் தேவையில்லாத சாகசம் அது. வெற்றிக்கான ரன் ரேட் குறைவாக இருக்கும்போது ரோஹித் ஷர்மா அதிரடி ஷாட்களை முயற்சிக்காமல் நிதானமாகவே ஆடியிருக்கலாம். அம்பத்தி ராயுடு வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்.

24ஆவது ஓவரில் 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு மகேந்திர சிங் தோனிக்கும் கேதார் ஜாதவுக்கும் இருந்தது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது தனது ‘பார்ட்னர்ஷிப் பிரேக்கர்’ பணியைச் சிறப்பாகச் செய்த கேதார் ஜாதவ், தோனியுடன் இணைந்து பேட்டிங்கில் ‘பார்ட்னர்ஷிப் பில்டர்’ பணியையும் சிறப்பாகச் செய்தார். தோனி – ஜாதவ் ஜோடியின் ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கனவைத் தகர்த்தெறிந்தது. இறுதியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற ‘தல’ தோனி 59 ரன்களுடனும், ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் 81 ரன்களுடனும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய கேதார் ஜாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 5ஆம் தேதி நாகபுரியில் நடைபெறுகிறது.

**திருப்புமுனைகள்**
=> ஆஸ்திரேலிய அணி இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தபோது ஸ்டாய்னிஸ் விக்கெட்டை கேதார் ஜாதவ் கைப்பற்றியது.
=> நல்ல ஃபார்மில் இருந்த மேக்ஸ்வெல்லின் ஸ்டெம்பைப் பதம் பார்த்த முகமது ஷமியின் அனல் பறக்கும் பந்துவீச்சு.
=> 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற தோனி – ஜாதவ் பார்ட்னர்ஷிப்.,”
