கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வு. “நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி, இந்த வழக்கு நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று (நவம்பர் 22), மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. “கஜா புயலில் 62.32 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதில், 52.82 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள வீடுகளுக்கு மின்இணைப்புகள் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள். “கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து பெற்ற உதவிகள் என்ன? அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். நவம்பர் 26ஆம் தேதியன்று விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
