ஒளிப்பதிவுக்காக ஏழு மாநில விருதுகள், மூன்று சர்வதேச விருதுகள் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் எம்.ஜே.ராதாகிருஷ்ணன் மறைந்தார்.
புகைப்படங்களின் மீது அதீத காதல் கொண்ட எம்.ஜே.ராதாகிருஷ்ணன் கேரளத் திரையுலகில் புகைப்படக்காரராக அறிமுகமானார். அதன்பின் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஷாஜி என் கரூனால் ஒளிப்பதிவாளராகப் பரிணாமம் அடைந்தார். அதன்பின் முப்பது வருடங்களுக்கும் மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இவர் தேஷாதனம், கருனம், நாலு பெண்ணுகள், திரைக்கதா போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றியுள்ளார்.
இயற்கையான ஒளியமைப்புக்கும், குறைந்த ஒளியில் காட்சிகளை வடிவமைப்பதற்கும் பெயர் பெற்றவர் ராதாகிருஷ்ணன். இயற்கையான சூரிய வெளிச்சத்தைத் தனது அனுபவத்தின் மூலம் விரைவில் கணிக்கக்கூடிய நேர்த்தி பெற்ற ஒளிக்கலைஞன் எனப் பெயர் பெற்றவர். தனது பயணத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜி என் கரூன், முரளி நாயர், ஜெயராஜ், டி.வி.சந்திரன், பிஜு, ரெஞ்சித் போன்ற மலையாள உலகின் முக்கியமான ஆளுமைகளுடன் பணியாற்றியுள்ளார். அதே சமயம் இளைஞர்கள், சுயாதீன முயற்சி செய்யும் படைப்பாளிகள் ஆகியோருடன் தொடர்ந்து பயணித்தும் வந்துள்ளார். லீனா மணிமேகலை இயக்கி 2011ஆம் ஆண்டு திரைப்பட விழாக்களில் பங்கு பெற்ற செங்கடல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இவரே.
1999ஆம் ஆண்டு மரண சிம்ஹாசனம் படத்துக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருதை வென்றுள்ளார். மேலும், ஏழு கேரள மாநில விருதுகள், மூன்று சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். 75க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், ஆவணப் படங்களில் பங்களித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
இந்த நிலையில், ஜூலை 11 அன்று மாரடைப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். எம்.ஜே.ராதாகிருஷ்ணன் மறைவுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**





