ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்!

By Balaji

|

Published on 7 Feb 2018, 12:00 AM

தமிழகத்தில் மக்கள் விரும்பும் மாற்றம் விரைவில் வருமென்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர். இன்று (பிப்ரவரி 7) மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென்று அவர் தெரிவித்தார்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில், இன்று கலந்துகொண்டார் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர். அப்போது, மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், தமிழகத்தில் விரைவில் மாற்றம் வருமென்று குறிப்பிட்டார். “தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எல்லா மட்டங்களிலும் ஊழல் புரையோடியுள்ளது. மக்கள் இதனை அகற்றத் தயாராகிவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழக சட்டமன்றத் தேர்தலும் இணைந்து நடக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ADVERTISEMENT

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்யவுள்ள கமிட்டியில், ஐஏஎஸ் அதிகாரி மற்றும் நீதிபதி அளவிலான உறுப்பினர்கள் இடம்பெற வேண்டுமென்று வலியுறுத்தினார் திருநாவுக்கரசர். மேலும், ”மீனாட்சியம்மன் கோவில் மட்டுமல்ல, மற்ற கோவில்களிலும் எந்த அசம்பாவிதமும் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோவில்கள் வணிக வளாகமாகச் செயல்படக்கூடாது” என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிகள் குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், ராகுல் காந்தி தலைவரான பின்பு கிடைத்த இந்த வெற்றிகள் தொடருமென்று தெரிவித்தார். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் 33 இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறினார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel