ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன ஒரு கிலோ தேயிலைத்தூளில் என்ன விசேஷம்?

Published On:

| By admin

அசாமிலுள்ள கவுகாத்தி தேயிலை ஏல மையம் (GTAC) உலகின் பரபரப்பான தேயிலை வர்த்தக நிலையங்களில் ஒன்றாகும். இங்கு சமீபத்தில் நடந்த தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத்தூள் 99,999 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
அசாமின் திப்ரூகர் மாவட்டத்திலிருந்து தயாரிக்கப்பட்ட நஹோர்ச்சுக்பரி `கோல்டன் பேர்ல்’ (Golden Pearl) என்ற தேயிலைதான், இந்த அளவுக்கு விலை போயுள்ளது. இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே அரைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு கைவினைத் தேயிலை என்பதால் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
மேலும் அசாம் மாநிலம், உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி செய்யும் பகுதி. இந்தியாவின் இந்தப் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருக்கும். பருவமழைக் காலங்களில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 250 மி.மீ முதல் 300 மி.மீ வரை இங்கு மழை பொழியும். பகல் நேரத்தின்போது இந்தப் பகுதியின் வெப்பநிலை சுமார் 36°C (96.8°F) வரை உயரும். இந்த காலநிலை அசாம் தேயிலைக்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது.
இதனால் அசாமில் விளையும் தேயிலைத்தூளுக்கு, சர்வதேச அளவில் புகழ் இருக்கிறது. இந்த ஏலத்தில் கிடைத்துள்ள விலையானது, நம் நாட்டில் விற்கப்பட்ட தேயிலைக்குக் கிடைத்த அதிகபட்ச விலையாகப் பார்க்கப்படுகிறது. கவுகாத்தியில் அமைந்துள்ள தேயிலை ஏல மையத்தின் முதன்மை ஏலப் பொருள் அசாம் தேயிலை. இந்தத் தேயிலை ஏல நிறுவனம் 1970-ல் நிறுவப்பட்டு உலகின் பல நாடுகளுக்குத் தேயிலை அளித்து வருகிறது.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share