ஒரு பந்துக்கு ரூபாய் 7.60 லட்சம்… இதெல்லாம் நியாயமே கெடையாது… முன்னாள் வீரர் காட்டம்!

ஐ.பி.எல் விளையாட்டு

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 72 வீரர்களை, மொத்தமாக ரூ.230 கோடியே 45 லட்சம் கொடுத்து ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன.

அதிகபட்சமாக உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் ரூபாய் 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.

அதேபோல மற்றொரு வீரர் பேட் கம்மின்ஸ் ரூபாய் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய யூடியூப் சேனலில், ” மிட்செல் ஸ்டார்க் மொத்தமுள்ள 14 ஆட்டங்களிலும் விளையாடி அனைத்து போட்டிகளிலும் பந்து வீசினாலும் அவர் வீசும் ஒவ்வொரு பந்திற்கும் ரூபாய் 7.60 லட்சம் செலவாகும்.

இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா தற்போது மும்பை அணியில் ரூபாய் 12 கோடி சம்பளம் பெறுகிறார்.

அவரின் திறமைக்கு இது தகுந்த சம்பளம் தானா? பும்ரா, கோலி ஆகியோர் தங்களை விடுவித்து கொண்டு ஏலத்தில் வந்தால் பும்ராவுக்கு ரூபாய் 35 கோடியும், கோலிக்கு ரூபாய் 42 கோடியும் கிடைக்கும்.

அது நடக்கவில்லை என்றால் அதில் ஏதோ தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம். ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை எடுப்பதற்கு ஒரு வரம்பு வைக்கப்பட வேண்டும்.

ஒரு அணியின் பர்ஸில் ரூபாய் 200 கோடி இருந்தால் அதில்  1.50 முதல்  1.75 சதவீதம் இந்திய வீரர்களுக்கும், மீதமுள்ள தொகை வெளிநாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்,” என தெரிவித்து இருக்கிறார்.

சோப்ராவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் 2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறும்.

அதில் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும். இதனால் இவ்வளவு தொகை கொடுத்து எடுத்தது தேவையில்லாத வேலை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஆட வைக்க முடியும். ஆனால் ஹைதராபாத் அணி மட்டுமே 8 வெளிநாட்டு வீரர்களை அணியில் எடுத்து வைத்துள்ளது.

அனைவருமே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் என்பதால் மீதமுள்ள வீரர்களை பெஞ்சில் தான் உட்கார வைக்க முடியும்.

இதனால் அந்த அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வட்டாரங்களுமே தற்போது ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளன.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவெனில், ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு கிடைக்கும் மொத்த பரிசுத்தொகையே ரூபாய் 20 கோடி தான்.

அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை, மும்பை அணிகள் பெரும் தொகையை ஏலத்தில் செலவிடுவதில்லை.

ஆனால் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் பெரும் தொகையை செலவிட தயங்காமல் வீரர்களை தட்டித்தூக்கி இருக்கின்றன.

ஆக இந்த ஐபிஎல் ஏலத்தில் இருந்து தெரிய வரும் உண்மை என்னவென்றால், ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்பது தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

”மரியாதை குறைவாக எந்த வார்த்தையும் பேசவில்லை” : உதயநிதி ஸ்டாலின்

‘மீண்டும் அமைச்சராவீர்கள்’ : பொன்முடிக்கு அழகிரி தந்த நம்பிக்கை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *