IPL2024: ‘இதயம் உடைந்தது’ முன்னணி வீரரால்… வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்!

ஐ.பி.எல் விளையாட்டு

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மாற்றப்பட்ட விவகாரம் தற்போது எரிமலையாக வெடித்துள்ளது.

கடந்த 10 வருடங்களாக மும்பையின் கேப்டனாக செயல்பட்டு, அந்த அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா.

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதி வரை சென்றும் ரோஹித்தின் இந்திய அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை.

இந்த தோல்வியில் இருந்து அவர் மீள்வதற்குள் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு இதுவரை ரோஹித் வாழ்த்து எதுவும் கூறவில்லை. இதனால் அவரின் விருப்பம் இல்லாமலேயே மும்பை அணி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது தெரிகிறது.

ஹர்திக்கை எடுக்க மும்பை அணி முயற்சி செய்த போதே, அணியின் முக்கிய வீரர் பும்ரா ‘சில நேரங்களில் அமைதியாக இருப்பது சிறந்தது’ என இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்தார். இது அப்போதே பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் அணியின் முக்கிய வீரரும் தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டனுமான சூர்யகுமார் யாதவ், ‘இதயம் உடைந்தது’ என்னும் பொருள் வரும்படியாக உடைந்த இதயம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.

இதனால் ஹர்திக் மீண்டும் கேப்டன் ஆனதில் சூர்யா, பும்ரா என முன்னணி வீரர்களே அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

ரோஹித்துக்கு பின் இந்த இருவரில் ஒருவர் மும்பை அணியை வழிநடத்துவார்கள் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை அணி எடுத்துள்ள இந்த முடிவு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் அந்த அணியின் சமூக வலைதள பக்கங்களை வேகமாக அன்பாலோ செய்து வருகின்றனர். இதனால் எக்ஸ், இன்ஸ்டாகிராமில் மும்பை அணி லட்சக்கணக்கான பாலோயர்களை இழந்துள்ளது.

ஹர்திக் கேப்டன் ஆக்கப்பட்டதை விடவும், ரோஹித் விஷயத்தில் மும்பை அணி நடந்து கொண்ட விதம் தான் அந்த அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கோப்பையை வெல்லாவிட்டாலும் கூட டெல்லி அணி ரிஷப் பண்ட் மீது தொடர்ந்து நம்பிக்கை வைப்பதையும், 42 வயதிலும் சென்னை அணியை தோனி வழிநடத்துவதையும் சுட்டிக்காட்டி ரசிகர்கள் மும்பை அணியை தாளித்து வருகின்றனர்.

உச்சகட்டமாக மும்பை அணி இந்த முறை கோப்பை வெல்லாது என சாபமிடவும் ஆரம்பித்து விட்டனர். அதோடு ரோஹித் வேறு அணிக்கு செல்ல வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

எது எப்படியோ மும்பை அணி ஐபிஎல் தொடருக்கு முன் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க போகிறது என்பதும், இனி அந்த அணி ஒரே குடும்பமாக இருக்காது என்பதும் மட்டும் தெளிவாக தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

சட்டமீறலில் விக்னேஷ் சிவன்… நீதிமன்றம் செல்லும் தயாரிப்பாளர்!

கட்டில், மெத்தை, இறைச்சி… ED அதிகாரி அங்கித் திவாரிக்கு வழங்க உத்தரவு!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *