ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் மும்பை – குஜராத் அணிகளுக்கு இடையே, சுமார் 100 கோடி ரூபாய் பணம் கைமாறி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. mumbai indians gujarat titans
‘மழை நின்றாலும் தூவானம் விடாத குறையாக’ ஹர்திக் பாண்டியா விவகாரம் கிரிக்கெட் வட்டாரங்களில் நாள்தோறும் புதிய புயல்களை கிளப்பி வருகிறது.
கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றவர் ஹர்திக் பாண்டியா.
முன்னாள் வீரரான ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்கு வாங்கிட மும்பை இந்தியன்ஸ் பெரிதும் முயன்றது.
டிரேடிங்
வீரர்களை வாங்க, விற்பதற்கான கடைசி தினத்தின் போது கூட ஹர்திக்கை வைத்து இரு அணிகளும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தன.
தக்க வைத்ததாக குஜராத் அணியும், வாங்கி விட்டதாக மும்பை அணியும் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து அறிவித்தன.
இதனால் ஹர்திக் மீது அதுவரை இல்லாத அளவுக்கு வெளிச்சம் விழுந்தது. கடைசியில் அவரை ரூபாய் 15 கோடி கொடுத்து வாங்கியதாக மும்பை அணி அறிவித்தது.
அதோடு கேப்டன் பதவியும் ஹர்திக்கிற்கு வழங்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய டிரேடிங் ஆக இது பார்க்கப்பட்டது.
கேப்டன்
இவ்வளவு களேபரங்கள் நடந்து முடிந்த பிறகும் கூட ஹர்திக் விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நாள்தோறும் அவர் குறித்த புதுப்புது தகவல்கள் வெளியாவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் உடற்தகுதி காரணமாக ஹர்திக் ஐபிஎல் விளையாட மாட்டார் என தகவல் வெளியானது. இதனால் அடுத்து மும்பை அணியின் கேப்டன் யார்? என விவாதங்கள் களைகட்ட தொடங்கின.
அடுத்த கேப்டன் ரோஹித்தா இல்லை சூர்யாவா? என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை நடத்த ஆரம்பித்தனர். ஆனால் தொடர்ந்து ஹர்திக்கே கேப்டனாக நீடிப்பார் என புதிய தகவல் வெளியாகியது.
1௦௦ கோடி
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் சுமார் 100 கோடி பணம் கைமாறியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது கிரிக்கெட் வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.
ரூபாய் 15 கோடி கொடுத்து ஹர்திக் வாங்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவ்வளவு பணம் கைமாறி இருப்பதாக தகவல்கள் வெளியானதால் இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? என்ற கேள்விகள் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளன.
மெகா ஏலம்
அடுத்த 2025 ஆண்டிற்கான மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தான் தக்க வைக்க முடியும். எனவே தான் மும்பை அணி இவ்வளவு அவசரமாக ஹர்திக்கை பணம் கொடுத்து வாங்கி இருக்கிறதாம்.
இதனால் ஹர்திக் தவிர்த்து வேறு எந்த இரண்டு வீரர்களை அந்த அணி தக்க வைக்க போகிறது? என்ற ஆர்வமும் தற்போது எழுந்துள்ளது.
என்ன காரணம்
குஜராத் அணி புதிய அணியாக 2 வருடங்களுக்கு முன்பு தான் ஐபிஎல் தொடருக்கு வந்தது. சுமார் 1௦ வருடங்களுக்கான ஐபிஎல் உரிமத்திற்காக அந்த அணி ரூபாய் 5625 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு அளித்துள்ளது.
இவ்வளவு பணம் கொடுத்து உரிமம் வாங்கி இருப்பதால் தான் அந்த அணி ஹர்திக்கை டிரேடிங் முறையில் விற்பனை செய்திட சம்மதித்து இருப்பதாக தெரிகிறது.
ஆண்டு இறுதியில் அவர்களின் பேலன்ஸ் ஷீட்டில் ஹர்திக் டிரேடிங் எந்தளவு பயன் உள்ளதாக அமைந்தது என்பது தெரிய வரும்.
மும்பை இந்தியன்ஸ்
பாரம்பரியமான வணிக குடும்பம் என்பதால் மும்பைக்கு இந்த தொகை ஒரு பெரிய விஷயம் கிடையாது என்றும், தொடர்ந்து 3 வருடங்களாக கோப்பை வெல்லாமல் இருந்ததால் தான் ஹர்திக்கை வாங்கும் முடிவை அவர்கள் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நேரடி பேச்சுவார்த்தை
ஹர்திக்கை டிரேடிங் முறையில் விற்பனை செய்தாலும் கூட அவரிடம் மும்பை அணியில் இருந்து நேரடியாக யார் பேசியது? என்னும் விவரங்கள் தெரியவில்லை என குஜராத் அணி தெரிவித்துள்ளது.
பிசிசிஐ விதிகளின் படி வீரர்களிடம் எந்தவொரு அணியும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹர்திக் சம்பளம்
மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிட வெறும் 15 கோடி பிளஸ் கேப்டன் பதவி மட்டுமே ஹர்திக் பெற்றாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. வெளிநாடுகளில் கால்பந்து விளையாட்டு வீரர்களை தக்க வைத்திட கோடிக்கணக்கான பணத்தினை அணிகள் வாரியிறைக்கும்.
அதேபோல இந்தியாவிலும் தற்போது வீரர்களை தக்க வைக்க அணிகள் பணத்தை பொருட்டாக கருதாத கலாச்சாரம் உருவாக ஆரம்பித்து உள்ளதாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
IPL 2024: நான் வந்துட்டேன்னு சொல்லு… மும்பை கேப்டனாக நீடிக்கும் ஹர்திக் பாண்டியா?
IPL2024: ‘கர்மா இஸ் எ பூமராங்’ மும்பைக்கு எதிராக பறக்கும் மீம்ஸ்கள்!
mumbai indians gujarat titans