நடப்பு ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற சுவாரஸ்யமான போட்டியில் மும்பை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி. இந்த வெற்றியின் மூலம் பிள-ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது பஞ்சாப் அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
பஞ்சாப் சார்பில் மார்ட்டின் கப்தில் மற்றும் சாஹா தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரினை வேகமாக அதிகரித்தனர். தொடக்க வீரர் கப்தில் 18 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மனன் வோஹ்ரா களமிறங்காமல் சாஹா களமிறங்கியது ஏன் என்ற கேள்வியை சிந்திக்க விடாமல் சிறப்பாக விளையாடினார் சாஹா விளையாடினார். ஒரு விக்கெட் சரிந்ததும் மார்ஷ் களமிறங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஆச்சர்யம் மேக்ஸ்வெல் களமிறங்கியது. சாஹாவுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். பின்னர் அவரும் ஆட்டமிழக்க சாஹாவுடன் ஷேன் மார்ஷ் நிதானமான ஆட்டம் மூலம் பார்ட்னர்சிப் கொடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் மெக்லனகன், பும்ரா, கார்ன் ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ன இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் துவக்க வீரர்களான சிம்மன்ஸ் மற்றும் பி.ஏ. படேல் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிம்மன்ஸ் 32 பந்துகளில் 59 ரன்களில் ஆட்டமிழக்க, பி.ஏ. படேல் 23 பந்துகளில் 38 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய ராணா 12 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 5 ரன் எடுத்து ஆட்டமிழக்க, பொல்லார்டு, ஹர்பஜன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார். கடைசி ஓவரில் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த பொல்லார்டு மும்பை அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் சிறப்பாக பந்து வீசிய மோஹித் ஷர்மா தொடர்ந்து 3 பந்துகளை டாட் பால் ஆக மாற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
