எலெக்‌ஷன் ஃப்ளாஷ் : சட்டமன்றத்தில் ஆ.ராசாவை பற்றி விவாதம்- எடப்பாடி திட்டம்!

Published On:

| By Aara

சட்டமன்றக் கூட்டத் தொடர் 12 ஆம் தேதி கூட இருக்கும் நிலையில், ஆளுநர் உரை உள்ளிட்ட பரபரப்புகள் காத்திருக்கின்றன.

இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி என்ன அணுகுமுறை மேற்கொள்வது என்று நிர்வாகிகளிடம் ஆலோசித்துள்ளார்.

அதன்படி எதிர்கட்சியான அதிமுக, நான்கு பிரச்சினைகளை எழுப்பி வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.

எதிர்கட்சி துணைத் தலைவர் சீட் பிரச்சினை, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் பற்றிய வெள்ளை அறிக்கை கேட்பது, வெள்ள நிவாரணத்தில் தமிழக அரசு செய்துள்ள செலவுகள் குறித்து கணக்கு கேட்பது, எம்ஜிஆர் பற்றி அவதூறு பேசிய ஆ.ராசாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவது ஆகிய பிரச்சனைகளை பேசி வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் நாம் பேசியபோது,

“சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கிவிட்டோம். ஆனால் இன்னமும் தொடர்ந்து பன்னீருக்கு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே சீட் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சட்டமன்றம் கூடும் முன்பும் இதுகுறித்து சபாநாயகர் அப்பாவுவிடம் நாங்கள் நேரில் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

மூத்த அமைச்சர் துரைமுருகன் கூட மரபுப்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்பது ஒரு அலங்கார பதவிதான். அந்த இருக்கையை எடப்பாடி சொல்கிறபடி உதயகுமாருக்கே கொடுத்துவிடலாம் என்று சொல்லியும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏனோ விடாப் பிடியாக இருக்கிறார். இந்த சட்டமன்றத் தொடரில் இதை நாங்கள் லேசில் விடமாட்டோம்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மாநில அரசு அறிவித்த நிவாரணம் ஆறாயிரம் ரூபாய் அனைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சென்று சேரவில்லை. இதுகுறித்து பிரச்சினை கிளப்புவோம்.

சமீபத்தில் எம்.ஜி.ஆர். பற்றி திமுக எம்.பி.யான ஆ.ராசா தெரிவித்த கருத்துகள் அதிமுகவினரை மட்டுமல்ல எம்.ஜி.ஆரை நேசிப்பவர்களையும் கொதிப்படைய வைத்துள்ளன. இந்த நிலையில் சட்டமன்றத் தொடரில் ஆ.ராசாவின் அவதூறு பற்றி கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விவாதம் நடத்தவும் கோருவோம்.

முதலமைச்சர் ஸ்பெயின் பயணம் சென்றுவந்தது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவோம். இதையெல்லாம் ஆளுங்கட்சி ஏற்காத நிலையில் வெளிநடப்பு செய்வோம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சுவிட்சர்லாந்து இ-மெயில் நிறுவனம் கொடுத்த துப்பு!

கோவை: My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share