பிரதமர் நரேந்திர மோடி 6 நாடுகள் சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான், கத்தார், ஸ்விட்சர்லாந்து நாடுகளைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்குச் சென்ற பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். பொருளாதாரம், பயங்கரவாதம், தூய எரிசக்தி, பருவநிலை மாற்றம், பிராந்தியப் பாதுகாப்பு, இணையவெளி (சைபர்) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடியும் – ஒபாமாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா,எனது நண்பர் மோடியை ஓவல் அலுவலகத்தில் மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆக்கப்பூர்வமான முறையில், அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தி தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. எனவே, அணுஎரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தியா இளம்தலைமுறையினர் கொண்ட நாடு என்பதையும், அந்த இளம்தலைமுறையினர் எத்தகைய திறமையை கொண்டவர்கள் என்பதையும் அமெரிக்கா அறியும். எனவே எதிர்காலத்திலும் இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு உள்ளது” என்றார் ஒபாமா.
பிரதமர் நரேந்திர மோடி, “இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை புதிய உச்சத்துக்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடாக தன்னை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 80 கோடி பேர் 35 வயதுக்கும் குறைவான வயதினர் ஆவர். இந்தியாவில் இருக்கும் இளம்தலைமுறையினர் புதிய உச்சங்களை அடைவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவார்கள். உலகின் மிகப்பெரிய 2 ஜனநாயக நாடுகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். எதிர்காலத்திலும் இரு நாடுகளும் தோளோடு தோள் இணைந்து செயல்படும். அணுஎரிபொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு ஆதரவளித்தற்கும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைத்தற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அணுமின் நிலையங்களுக்கு ஒப்புதல்:
சந்திப்பிற்கு பிறகு, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய அணுமின் கழகமும், அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் புதிதாக 6 அணுமின் நிலையங்களை அமைக்கவுள்ளன. இதற்கான பொறியியல் மற்றும் வடிவமைப்பு பணிகளை உடனடியாக தொடங்குவது என்று இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் சார்ந்த ஏற்பாடுகளை வரும் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செய்து கொள்வது என்றும் அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த அறிவிப்பை அதிபர் ஒபாமாவும், பிரதமர் மோடியும் வரவேற்றுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.,”
