ஊழல்: இந்தியாவின் நிலை?

Published On:

| By Balaji

அனைத்துலக நேர்மை அமைப்பான டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷ்னல் (டி.ஐ.) வெளியிட்டிருக்கும் ஊழல் குறியீட்டு பட்டியலில் 180 நாடுகளில் இந்தியா 81 ஆவது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 180 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு நடத்தப்பட்டு இந்த அறிக்கை நேற்று (பிப்ரவரி 21) வெளியிடப்பட்டுள்ளது.

2016ல் 176 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய 79 ஆம் இடத்தில் இருந்தது, தற்போது 180 நாடுகளில் 81 ஆவது இடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஊழல் குறியீடு 0 முதல் 100 வரையில் வரையறுக்கப்படுகிறது. அதில் 0 மிகவும் ஊழல் நிறைந்ததாகவும், 100 முற்றிலும் ஊழல் இல்லாத நாடாகவும் கருதப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு தரவரிசைப் படி, இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறிய போதிலும் வெளிப்படைத் தன்மையில் 40 சதவிகித மதிப்பீட்டையே பெற்றுள்ளது. 2015ல் 38 சதவிகிதமும், 2013ல் 36 சதவிகித மதிப்பீட்டையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50 சதவிகிதத்துக்கும் குறைவான மதிப்பீட்டையே பெற்றுள்ளன. சராசரி மதிப்பீடான 43 சதவிகிதத்தை காட்டிலும் இந்தியா குறைவாக இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வெளிப்படைத்தன்மையில் நியூசிலாந்து மற்றும் டென்மார்க் 89 மற்றும் 88 ஆகிய இடத்தை வகிக்கின்றன. அதன்படி இந்த இரு நாடுகள் ஊழல் குறைவான நாடுகள் என்ற புகழைப் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

சிரியா, தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் 14, 12 மற்றும் 9 ஆகிய இடங்களில் ஊழல் நிறைந்த நாடுகளில் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன.

சீனா 77 வது இடத்தையும், பிரேசில் 96ஆவது இடத்தையும் ரஷ்யா 135 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்த அறிக்கையில், ஊழல் நிறைந்த நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பாதுகாப்பற்று மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் அதிகம் உள்ள நாடுகளில் வாரத்திற்கு ஒரு பத்திரிகையாளராவது கொல்லப்படுவதாக டி.ஐ தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்றும், கடந்த ஆறு ஆண்டுகளில், 10 பத்திரிகையாளர்களில் 9 க்கும் மேற்பட்டோர் 45 அல்லது அதற்குக் குறைவான ஊழல் மதிப்பீடு உள்ள நாடுகளில் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கையும் இந்திய ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக டி.ஐ சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

சமூக ஆர்வலர்கள் மற்றும் நிருபர்கள் சமுதாயத்தில் நடைபெறும் ஊழல் குறித்து பேசுவதற்கு அஞ்சுகின்றனர். அவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஐ நிர்வாக இயக்குநர் பட்ரீசியா மொரைரா தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான இயக்கங்களை முன்னெடுப்பவர்கள் மீது தவறான பரப்புரைகள், ஒடுக்குமுறைகள், வழக்குகள், அதிகார வர்க்க அழுத்தங்கள் ஆகிய கருவிகள் மூலமாக அவர்களை அரசாங்கம் வாயடைக்க முயல்கிறது இதனை எதிர்கொள்ள மக்களின் பங்களிப்பும் வேண்டும் என்று மொரைரா கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share