ADVERTISEMENT

ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும், பெண்களின் பொருளாதார வளர்ச்சியும்

Published On:

| By Balaji

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வறுமை நிலையை மூன்றில் ஒரு பங்கு குறைத்துள்ளதாகவும் மேலும், பெரும்பான்மையான பெண்கள் இந்தத் திட்டத்தின்மூலம் முதன்முதலாய் வருவாய் ஈட்டியதாகவும் புது ஆய்வு கூறுகிறது.தேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் பொருளாதார ஆய்வு நிறுவனத்தோடு சேர்ந்து நாடுமுழுக்க உள்ள 26,000 கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களிடம் இரு கட்டங்களாக நடத்திய ஆய்வில், வறுமைநிலை மொத்தமாக 32 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, 1.4 கோடிப் பேரை வறுமையிலிருந்து காத்திருக்கிறது. வறுமைநிலை குறைய, 2004-05 ஆண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது ஒரு காரணம் என்றபோதும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முக்கியப் பங்குவகிக்கிறது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலைசெய்யும் 45 சதவிகிதப் பெண்கள், இதற்குமுன்னர் வேலை செய்யாது அல்லது தங்கள் சொந்த நிலத்தில் விவசாயப்பணி செய்துவந்ததால் இந்த திட்டத்தின்மூலமே முதன்முதலாக வருமானம் ஈட்டியுள்ளனர். இதனால் பெண்களின் கையிருப்பில் அல்லது வங்கிக் கணக்கில் பணம் இருக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, தங்கள் குடும்பநலம் பற்றித் தாங்களே முடிவெடுக்க பெண்களால் முடிந்தது என ஆய்வு தெரிவிக்கிறது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுடைய கல்வி வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையும் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில் குறைந்துள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தபின், வருமானம் பெருகிய காரணத்தால் கந்துவட்டி பிரச்சினைகள் குறைந்துள்ளது. அதேநேரத்தில் முறையான வழிகளில் கடன்பெறவும் பெண்களால் முடிந்துள்ளது.

ADVERTISEMENT

இதில் உள்ள ஒரேயொரு குறைபாடு, 100 நாட்கள் மட்டுமே வேலைவாய்ப்பு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அனைவருக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் வேலை கிடைப்பதில்லை என்பதும், ஏழ்மையில் உள்ளோரை மேலும் பாதிக்கிறது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் செயலாளர் இதுபற்றிக் கூறும்போது, “இந்த ஆய்வுகளின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலைகளின் தேவை பூர்த்தி செய்யமுடியாத அளவுக்குப் பெருகியுள்ளது தெரிகிறது” என்கிறார். கடந்த 2016-17ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக ரூ.38,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share